மலையாளத்தின் மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் கேப்டன் விஜயகாந்த் சந்திப்பு சென்னை வாசன் ஹவுசில் நடந்ததாகும். சென்னை மியூசிக் அகடமிக்கு அருகில் இருந்த அந்த மாளிகையில் எத்தனையோ சாதனையாளர்களின் படப்பிடிப்புகள் நடந்திருக்கின்றன.
இன்று அந்த அழகு மாளிகை இல்லை.இடிக்கப்பட்டு அடுக்கு மாடி கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.
இரண்டு மெகா நடிகர்களின்அந்த சந்திப்புக்கு முன்னதாக கேப்டனின் கல்யாணத்துக்கு சென்ற அனுபவத்தை சற்று பார்க்கலாமே.!
மதுரைக்கு சென்றால் கேப்டன் விஜயகாந்தின் அப்பா அழகிரிசாமி நாயுடுவை சந்திக்காமல் வரமாட்டேன்.
அவர் மதுரை நகராட்சியில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர்.
பழ.நெடுமாறனின் பக்கா ஆதரவாளர். காங்கிரஸ் கட்சியில் எப்போதுமே கோஷ்டிகளுக்கு குறைவு இருந்ததில்லை.அது அகில இந்திய அளவில் இருந்தததால் கிராம கமிட்டி வரை கோஷ்டிகள் இருந்தன.பொதுவாக மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிக்கும்,நகர காங்கிரஸ் கமிட்டிக்கும் மதுரையைப் பொருத்தவரை ஏழாம் பொருத்தம்தான்.
சென்னை சென்ட்ரல் சினிமாவுக்கு எதிராக சற்று தள்ளி இருந்த சாலையில் மிட்லண்ட் ஹோட்டல் இருந்தது.தற்போது இருக்கிறதா என்பது தெரியாது.
அங்குதான் அழகிரிசாமி நாயுடுஅவர்களை சந்திப்பேன்.
“விஜயராஜ் எப்படி இருக்கான்…நெறைய வாய்ப்பு வருதுங்கிறானே..கஷ்டப்படாம இருக்கான்ல” என கேட்டு விசாரிப்பார்.பிள்ளைப்பாசம் அதிகம்.!
விஜயகாந்த் தீவிரமான எம்.ஜி.ஆர்.அனுதாபி. என்றாலும் கலைஞர் மீதும் அன்பாக இருந்தார். சொந்த ஊரில்தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. கலைஞர் தலைமையில் நடந்த அவரது கல்யாணத்துக்கு திரைப்பட கலைஞர்கள் அனைவரும் ரயிலில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம் ஆகும்.
பத்திரிகையாளர்கள் பயணித்த கம்பார்ட்மெண்டில் நடிகர்கள்,ஸ்டண்ட் குழுவினரும் இருந்தார்கள்.கவனிப்புகள் பிரமாதமாக இருந்தன.இப்ராகிம் ராவுத்தரின் ஆட்கள் “என்னண்ணே, போதுமா, பத்தலேன்னு மட்டும் சொல்லக்கூடாது.அண்ணன் ஆர்டர்.”என சொல்லி சொல்லி குளிப்பாட்டி விட்டார்கள்.
எங்களது கம்பார்ட்மெண்டில் ‘மணம்’ பரவத் தொடங்கியது.!
அந்த காலத்து ரெயில் பெட்டிகளில் இக்காலத்திய பெட்டிகளின் வசதிகளைப் போல இருந்ததில்லை. புகைப்பவர்களுக்கு வசதியாக ஆஷ் ட்ரே போல இரும்புக்குமிழ் ஒவ்வொரு பெட்டியிலும் சன்னலோரம் இருக்கும்.விளக்குகளும் பிரகாசமாக இருக்காது. கரிப்புகைக்கு பயந்து சன்னல்களை மூடி விடுவார்கள்.அக்காலத்தில் நீராவி என்ஜின்கள்தானே!
தடக் தடக் என ஆடி ஆடி பயணிப்பதும் தூங்குவதும் சுகம்.
அன்றும் அப்படிதான்!
நள்ளிரவு பனிரெண்டு மணி இருக்கலாம். தூக்கம் இல்லை.புரண்டு புரண்டு படுப்பதைவிட மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்கிற ஆர்வத்தில் பெட்டிக்குள் நடந்தால்…
சீட்டுக்கச்சேரிகள் அமோகம்.படக்கம்பெனியில் வாங்கிய சம்பளத்தை உற்சாகமுடன்இழந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு அது ஒரு வீர விளையாட்டு!
பாத் ரூம் அருகில் இருந்த கண்ணாடியைப் பார்த்தபடி …
மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு ஒரு போஸ். “நீ நடிகன்டா” என தன்னைத்தானே சொல்லியவர் “பெரிய ஆளா வருவே”என சிரித்துக் கொண்டார்,நம்பியார் மாதிரி.!.
என்னைப் பார்த்ததும் “தூங்கலியா சார்”
“வரல ..அழகு.! “
ஸ்டண்ட் காட்சிகளில் அதிக அளவில் இடம் பெற்ற அந்த அழகுதான் தற்போது சீரியல்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார்.
விடியல் தெரிந்தது.
வி.கோபாலகிருஷ்ணன் மட்டும் சற்று கோபத்துடன் பத்திரிகையாளர்களிடம் கடுமையாக “ஒன் பிரஸ்மேன்..ஒன் பிரஸ் மேன்…”என திரும்பத் திரும்ப சொல்லி கொண்டிருந்தார்.
அவரின் கோபத்துக்கு காரணம் இருந்தது.
யாரோ ஒருவர் அன்றைய இரவில் அவரது கேபினுக்குள் புகுந்து டாய்லெட்டாக நினைத்து சிறு நீர் பெய்ய ….பிரச்னை ஆகி விட்டது.
மழைச்சாரல் என நினைத்து திரும்பிபடுத்துவிட்டவருக்கு விடிந்த பிறகுதான் புரிந்திருக்கிறது.
அந்த கேபினிலிருந்து எங்களுடைய கேபினுக்குமாறி வந்த பின்னரும் கோபால கிருஷ்ணனின் கோபம் அடங்கவில்லை.
“மச்சான்….நைட்ல தெரியலடா …தப்பு நடந்து போச்சு “என சக பத்திரிகையாளரிடம் வருந்திய அந்த பத்திரிகையாளர் இன்று பணியில் இல்லை என்றாலும் பழைய நினைவுகளை மறந்தாரில்லை.
பட்டூர் செல்வம் !
மதுரையில் பத்திரிகையாளர்களுக்கென மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
ரயில் நிலையத்திலிருந்து இறங்கியதுமே ஏதோ மாநிலா மாநாட்டுக்கு வந்திருப்பது போன்ற உணர்வு. திமுக, விஜயகாந்த் ரசிகர்மன்றம் என இருதரப்பினருமே தோரணங்களால் பந்தல் போட்டிருந்தார்கள் என்றே சொல்லலாம்.
கல்யாணம் நீதிமன்ற வளாகம் அருகில் இருந்த முத்தையா அரங்கத்தில்.!
பிரியாணி விருந்து சற்றே தள்ளி இருந்த தமுக்கம் மைதானத்தில்.
இரண்டுக்குமே மாநாட்டுக்கூட்டம்.!
“தாலி கட்டியதுமே தமுக்கம் மைதானத்துக்கு போயிடலாம். கலைஞர் பேச்செல்லாம் கேட்கிறதா இருந்தா பிரியாணிக்கு பிந்திருவோம். புதுமாப்ளை பொண்ணு ரசிகர்களுடன்தான் சாப்பிடப்போறாங்க.அதனால முன்னாடியே போயிடுங்க” என்கிற முன்னறிவிப்பு வந்ததால் ஒரு வகையான பதட்டமே இருந்தது.
மேடையில் தள்ளு முள்ளு அவ்வளவாக இல்லை. காவலர்கள் பாதுகாப்பு கடுமையாக இருந்தது..ஆனால் அவ்வளவு நெருக்கடியிலும் அடிபட்டு மிதிபட்ட விஜயகாந்தின் அன்றைய பாதுகாவலர்கள் ,இன்று எங்கே?
விஜயகாந்தின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் எப்போது நட்பு வளையத்தை விட்டு துண்டிக்கப் பட்டாரோ அன்றே நல்லவர்கள் பலர் விலகி விட்டனர்.