தென் கொரியா பூசன் திரைப்பட
விழாவில் ‘ரேடியோ பெட்டி’
தமிழ்த் திரைப்படம் பங்கேற்பு..!
தென் கொரியா பூசன் திரைப்பட விழாவில் ‘ரேடியோ பெட்டி’ தமிழ்த் திரைப்படம் பங்கேற்பு..!சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைப்படங்களின் பங்களிப்பு வருடாவருடம் உயர்ந்து கொண்டே போகிறது. ‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’ ஆகிய திரைப்படங்கள் சென்ற இரண்டு வருடங்களாக உலகத்தின் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சாதனை படைத்தன.
இந்தாண்டு கூடுதலாக இன்னொரு படமும் அந்த லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளது. ‘ரேடியோ பெட்டி’ என்கிற தமிழ்த் திரைப்படம் தென்கொரியாவின் புகழ் பெற்ற பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறது.
‘ரேடியோ பெட்டி’ திரைப்படம் 83 நிமிடங்களே ஓடக் கூடியது. இதில் லட்சுமணன், டி.வி.வி.ராமானுஜம், ஷோபனா மோகன், நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சரவண நடராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ரிச்சர்ட் போர்டு இசையமைத்திருக்கிறார். இப்படத்தை எழுதி, இயக்கியிருப்பவர் ஹரி விஸ்வநாத்.புதிய திரைப்படங்களுக்கான போட்டியாளர் பிரிவில் இப்படம் போட்டியிடுகிறது.
8 திரைப்படங்களுடன் போட்டியிடும் ‘ரேடியோ பெட்டி’ திரைப்படம்தான் பூசன் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் இடம் பிடித்திருக்கும் முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
இந்த பூசன் திரைப்பட விழா வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிவரையிலும் தென் கொரியாவில் உள்ள பூசன் என்ற நகரில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் இந்த ‘ரேடியோ பெட்டி’ திரைப்படத்தின் இயக்குநர் ஹரி விஸ்வநாத்தும் கலந்து கொள்ளவுள்ளார்.