‘காக்கை கா..கா. என கத்துவதிலும் இசை இருக்கிறது’ என்பார் இசைஞானி.!
ஓசையையும் இசையாகக் கொடுப்பதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவர் ஹரி சாய்.
துணிச்சலுடன் ஒரு காரியத்தில் இறங்கி இருக்கிறார்.அந்த காலத்தில் புளிமூட்டை ராமசாமி என்கிற சிறந்த சிரிப்பு நடிகர் இருந்தார். இவருக்குப் பிறகு குண்டு கருப்பையா. இவர் விட்டு சென்ற இடத்தைத்தான் தற்போது நிரப்பி வருகிறார் ரோபோ சங்கர்.!
நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக மாறி இருக்கிறார்.அதில் ஒரு புதிய முயற்சி என்றாலும் பயங்கர சோதனை என்றே சொல்லலாம். ரோபோ சங்கரை பாட வைத்திருக்கிறார்கள் அய்யா! சோமநாத பாகவதருக்கு வந்த சோதனையைப் பாருங்களேன்.!
ஆட்டோ டிரைவர்களின் அன்றாட சோதனைகள் மற்றும் சவால்களை பற்றிப் பேசும் ஒரு பாடல் படத்தில் இருக்கிறது, இந்த பாடலைத்தான் ரோபோ ஷங்கரை பாடியிருக்கிறார்.
இது குறித்து போஸ் வெங்கட் கூறும்போது, “நான் ஆரம்பித்த இடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். நான் ஒரு ஆட்டோ டிரைவராக என் தொழிலை துவங்கினேன்,
அதற்கு மரியாதை செய்ய விரும்பினேன். பாடல் பற்றிய கருத்தாக்கம் உருவான போதே, அதை ராகம் மற்றும் ஸ்ருதி பற்றி தெரியாத யாரோ ஒருவர் தான் அதை பாட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.
நிச்சயமாக, சாதாரண ஒரு தொழிலாளி பாடுவதை போல பாடல் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். பாடலை பாட நல்ல பிரபலமான ஒரு குரலை தேடினோம், ரோபோ ஷங்கர் குரல் அதற்கு பொருத்தமாக இருந்தது. பாடலின் இறுதி வடிவம் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு சில யோசனைகள் மற்றும் அனுமானங்கள் இருந்தபோதிலும், இசையமைப்பாளர் ஹரி சாய், அவர் பங்குக்கு சில துள்ளலான விஷயங்களை சேர்த்துக் கொண்டார்.”என்கிறார்.
விளைவுகளை எதிர்கொள்வோம் மக்களே!