எந்தவொரு மாடல் நடிகையும் பிறப்பிலேயே நடிகையாக இருப்பதில்லை, ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே மிகச்சிறந்த நடிகையாக மாறும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
லென்ஸ், ஸ்பாட்லைட்ஸ் என புகழ் வெளிச்சத்திலேயே இருந்த, மாடல் பிரதைனி சர்வா, ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் நடிகையாக தனது பயணத்தை தொடங்குகிறார்.
தனித்துவமான கதை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கே.ஆர். சந்துரு. ஏற்கனவே குறும்படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்ற தீரஜ் இந்த படத்தில் நடிக்கிறார்.
இந்த படம் குறித்து நாயகி பிரதைனி சர்வா கூறும்போது, “தனிப்பட்ட முறையில், திரைப்படங்களில் சில பெண் கதாபாத்திரங்களை நான் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
அவை பார்வையாளர்களை ஊக்குவிக்கும் அல்லது உற்சாகப்படுத்தும். நடிகைகள் வெறுமனே பார்பி பொம்மைகள் அல்லது கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது என்பதை நான் நம்புகிறேன்.
இயக்குனர் சந்துரு எனக்கு கதையையும், என் கதாபாத்திரத்தையும் விளக்கிய போது, என் கதாபாத்திரம் பிருந்தாவை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. வெறுமனே என் கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாக இருந்தது. இயக்குனர் சந்துருவை பாராட்டும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை, ஆனால் கே.ஆர்.சந்துரு உண்மையில் திறமை வாய்ந்த இயக்குனர், அவரது திறமையை திரையுலகம் கண்டிப்பாக புகழும்” என்றார்.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, கேபி இசையமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும், சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.