ஹில்டன் நட்சத்திர ஹோட்டல்.
நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா.
வெற்றிகரமான 12 படங்கள் வரை கொடுத்த தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கிற படம்.
கோரி ஜெர்யாக்கின் ஒளிப்பதிவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மின்னல் பூச்சி ஜாக்கெட்டாக மினுமினுத்தார். பேயாகவும் பேரழகியாகவும் இருவிதமான கேரக்டரோ என்னவோ! என்னவாக இருந்தால் என்ன மேலுதடுக்கு மேலே மையமிட்டிருக்கும் அந்த மச்சத்துக்கு அடிமையாகிக் கிடக்கிறது சினிமா உலகம்.
அழகான இம்மாதிரியான விழாக்களில் வெடி வைப்பதெற்கென்றே சிலர் வத்திப் பெட்டியுடன் வந்து விடுவார்கள். விஷாலுடன் மல்லுக்கட்டிவருகிற சுரேஷ்காமாட்சி, விஷாலுக்கு முட்டுக் கொடுக்கிற பிரவீன் காந்தி,துரைராஜ் ஆகிய மூவரும் கச்சேரியை செவ்வனே நடத்தி விட்டார்கள்.
“விழாவைப் பத்தி பேசுங்கையா “என பத்திரிகையாளர்கள் சிலர் சத்தம் போடுமளவுக்கு காமன் பண்டிகையைப் போல லாவணி நடத்தி விட்டனர்.
இதற்கு காரணமே தொகுப்பாளினியாக இருந்தவர்தான். இவரை தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதியாக நினைத்து அழைக்க சுரேஷ் காமாட்சி சுக்குமாந்தடி கொண்டு விளாச பார்வையாளர்களின் பக்கத்தில் வேறு வகையான எதிர்பார்ப்புகள்.!
“என்னை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தூக்கிட்டாங்க, நான் இப்ப வெறும் தயாரிப்பாளர்தான்! என்னைப் போயி பிரதிநிதின்னுசொல்லிட்டிங்களே! குஷ்டரோகியாக வாழ்ந்தாலும் வாழ்ந்துடலாம்.ஆனா தயாரிப்பாளரா மட்டும் இருக்கவே கூடாது.
தெரியாம பெடரேஷன் மீட்டிங் போயிட்டேன். அங்கே தயாரிப்பாளர் சங்க செகரட்டரி கதிரேசன் வாட்ச்மேன் வேலை பார்த்திட்டு இருந்தார்.மீடியேட்டர்லாம் மரியாதையுடன் போய் உக்கார்ந்து பேசுறாங்க. தயாரிப்பாளர்கள் மட்டும் வெளியேவெயிட்டிங்.
பெப்சி ஆபிசுக்குப் போனா அங்கே சுவாமிநாதன் என்கிற ஆள் அதிகாரம் பண்றார்.நான் யாரை வேலைக்கு வைக்கனும்னு சொல்றதுக்கு அந்த ஆள் யாருங்க?( பலே வெள்ளையத்தேவா!) கறிச்சோறு போடணும்னு கம்பல் பண்றாங்க, இதையெல்லாம் கேட்கிறதுக்கு தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆண் மகன் தேவைங்க!”என்று அடித்தார் பாருங்க ஆப்பு. சரியான அத்தி மரத்து ஆப்பு.! இந்த மரத்து ஆப்புதான் பால் சுரந்து பெவிகாலை விட இறுக்கமாக பற்றிக் கொள்ளும்.!
அடுத்து வந்தவர் தயாரிப்பாளர் சங்கப் பிரதிநிதி பிரவீன் காந்தி.
லாவணி பாடாமல் போனால் பல இடங்களில் இருந்து கேள்விகள் எழுமே!பிரஷர் வரும்ல.!
இவரும் சூட்டுக்கோலால் ஒரு இழு இழுத்தார்.
“விஷாலை தப்புத்தப்பாக பேசித்தானே சிம்புவின் கால்ஷீட்டை வாங்கினீங்க அத மறந்திடாதீங்க சுரேஷ் காமாட்சி!”என பேசியவர் அப்படியே “இது இலை உதிர் காலமா,தாமரை மலரும் காலமா,சூரியன் எழும் காலமா? என அரசியலை தொட்டு விட்டுப் போனார்.
கரு பழநியப்பன் கருத்துடன் பேசக்கூடியவர். இரண்டு தரப்புக்கும் அட்வைஸ்.
“இதயெல்லாம் நாம் வீட்டுக்குள் உட்கார்ந்து பேசலாமே? பொது வெளிக்கு கொண்டு வந்திருக்க வேணாம்.”என்றார்.
இவருக்கும் ஒரு கவலை இருந்திருக்கிறது.! அது இயக்குநர் சுசீந்திரன் பற்றியது..
“நல்ல வேலை இங்கு நயன்தாரா வரவில்லை.வந்திருந்தால் சுசீந்திரன் அவரையும் அரசியலுக்கு வா வா என கூப்பிட்டிருப்பார்” என்றார்.
இளையவேள் ராதா ரவி எழுந்ததுமே பத்திரிகையாளர்கள் மத்தியில் சுறுசுறுப்பு. சிரிப்பலைகள்.
“தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மட்டுமா பிரச்னைகள் இருக்கு?தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் அதே பிரச்னைகள்தானே!நிர்வாகம்னா எல்லாத் தரப்பையும் கேட்கனும்ல. சங்கத்துப் பிரச்னைகளை குடும்ப பிரச்னை மாதிரி அணுகனும்னா அங்கே எதுக்கு பத்திரிகையாளர்களை வரவழைச்சு பேசுறீங்க?
சுரேஷ்காமாட்சி இங்க பேசுனார்.அத கேட்டு திருந்திடவா போறாங்க.! படங்களை முடிஞ்சா ரிலீஸ் பண்ணுங்க.இல்லேன்னா தமிழ் ராக்கர்சுக்கு வித்திடுங்க.உங்களால் தமிழ் ராக்கர்சை பிடிக்க முடிஞ்சிதா?
ஓட்டுப் போட பணம் வாங்காதேன்னு சொல்றாங்க. இவன் காச வாங்கிட்டுத்தான் போடுவான். எவன் திருந்தினான்? இங்க நயன்தாராவை எம்.ஜி.ஆர் ,சிவாஜிக்கு நிகரா ஒப்பிட்டுப் பேசினாங்க. அவங்க லெஜண்ட்ஸ்.அவங்களோடல்லாம் கம்பேர் பண்ணாதிங்க!
இப்பல்லாம் 90 எம்.எல் படங்களைத் தான் ரசிக்கிறாங்க. பிக்பாஸ்ல ஒரு பொண்ணு வந்துச்சே ஓவியாவா? நல்ல பேரு. அதுக்கு வாய்த்த வாய்ப்பை பாருங்க. நமக்கெல்லாம் 90 எம்.எல் செட் ஆகாது.நான் எடுத்தா ஒன்னரை லிட்டர்னுதான் எடுப்பேன்.”என்றார்.
தயாரிப்பாளர் வி.மதியழகன் மிகப்பெரிய ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.
“வருடத்துக்கு ஐந்து படங்கள் அதில் நெடுநல்வாடை மாதிரி இரண்டு படங்கள். நெடுநல்வாடையை நான்தான் வெளியிடுவதாக இருந்தேன்.தப்பிவிட்டது. இந்த கொலையுதிர்காலம் படத்தின் பிரீமியர் ஷோ அல்லது பிரஸ் ஷோவுக்கு நயன்தாரா வருவதாக சொல்லியிருக்கிறார். நானே அவரிடம் பேசினேன். ஒத்துழைத்த விக்னேஷ் சிவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மிகப்பெரிய சாதனைங்க!