“என் தந்தை மதுப் பழக்கமோ.வேறொரு பெண்ணின் சகவாசமோ இல்லாதவர்.இந்த இரண்டு பழக்கங்களும் அவருக்கு அறவே பிடிக்காது.ஆனால் நான் இவற்றை சரணடைந்தேன்.ஏராளமாக எழுதினேன் என்பதைத் தவிர வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் ‘சலனமிக்கவன்’என்ற பட்டத்தையே பெற்றேன்”
சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அல்லர்.
கவியரசர் கண்ணதாசன். அவரது மனவாசத்தில் எழுதியுள்ள அடிக் கோடிட்டுக் கொள்ளக்கூடிய வரிகள்.
இந்த வரிகள் எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருந்திப் போகக்கூடியதுதான்.
அந்த சலனத்தின் சிறு பகுதிதான் “நான் சினிமாவிலிருந்து விலகப் போகிறேன்” என ரஜினி அன்று சொன்னதும் .!
அவர் அன்று போட்டிருந்த வேடம் ராகவேந்திர சுவாமிகள் வேடம்.
வயதுக்கு மீறிய ஒப்பனை. பார்க்கிறவர்கள் எவரையும் கையெடுத்துக் கும்பிட வைக்கும் தோற்றம்..
தாடி,காவிஉடை, ருத்ராட்ச மாலை ,நெற்றியில் பரிசுத்தமான சந்தனம்.
கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்டது.
என சாட்சாத் சுவாமியாக தோன்றினார் ரஜினி.
“சாமி,”என்றே அவரை எல்லோரும் அழைத்தார்கள்.
நானும் அவ்வழிதான்!
“சாமி…நீங்க வாழ்க்கையில செய்த தவறுகளுக்கு பரிகாரம் தேடும் முயற்சிதான் இந்த ராகவேந்திரா படமா?”
மெல்லிய சிரிப்பு.
“நான் செஞ்ச தப்புகளுக்கு நிறைய தடவை மன்னிப்புக் கேட்டிருக்கிறேன்.”
“உங்கள் குருவான ராகவேந்திரசாமியின் வாழ்க்கை வரலாறு உங்களுக்கு 100 வது படமாக அமைந்ததற்கு சிறப்பு காரணம் எதுவும் இருக்கா சாமி?”
“நான் பூஜையில இருந்தபோது ஒருநாள் ராகவேந்திரா சுவாமியா நடிக்கணும்கிற ஆசை வந்தது.அது எனது ஆசையா அல்லது அவரது தூண்டுதலாங்கிறது தெரியல. ஆனா நாள் போகப்போக இந்த எண்ணம் ஸ்டிராங்காக மாறிட்டே வந்துச்சு.
ராகவேந்திரரா நடிச்சிட்டு நடிப்புத் தொழிலுக்கு முழுக்கு போட்றணும்னு முடிவு செஞ்சேன். நானே ராகவேந்திரா படத்தை எடுக்கிறதாகவும் இருந்தேன்.
ஆனா சொந்தப்படம் செய்ய முடியாத ஆளவுக்கு வெளிப்படங்கள் இருந்துச்சு. அதனால பாலசந்தர் சார்ட்ட நீங்க இந்த படத்த எடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். அவரும் சந்தோஷமா எறங்கிட்டார்.”
“எதுக்கு சாமி,திடீர்னு முழுக்குப் போடும் முடிவு?”
“பத்து வருஷம் நடிச்சாச்சு.100 வது படமும் வரப்போவுது. இப்படியே ஒதுங்கிட வேண்டியதுதானே! நல்ல படங்களை ப்ரொட்யூஸ் பண்றது,டைரக்ட் பண்றது இப்படியே போயிட வேண்டிய்கது தானே!
ஆனா எதை செய்றது? எந்த முடிவுக்கும் என்னால் வர முடியல.” என்றார்.
மிகவும் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கிறவர் ரஜினி. அன்றைய கால கட்டத்தில் இது ஆறுதலாக இருந்திருக்கலாம்.
“1980-லிருந்து நானும் ஒரு ஆறு மாசமாவது ஓய்வு எடுக்கனும்னு திட்டமிட்டுட்டுத்தான் இருக்கேன்.ஆனால் நடந்த பாடில்ல.”என்றார்.
எனக்கு இங்கே கவியரசர் கண்ணதாசன் சொன்னது நினைவுக்கு வருகிறது.
“அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவது என்பதே அவனது ஆசை.அவனது கவிதைச்சிந்தனைக்கு எந்த அமைப்புக்கு உள்ளே சிக்கிக் கொள்வதும் சரியாக இருக்காது என்பதும் அவனுக்குத் தோன்றியது.
பரந்த வானம்,போல் உயர்ந்த கோபுரம் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்,எழுத வேண்டும் .கடவுட் தத்துவத்தில் ஈடுபட்டால்தான் கவிதைச்சிறகுகள் விரியும்”என கவியரசர் எண்ணினார்.அதை அவரது மனவாசத்திலும் பதிவு செய்தார்.
இதைப்போலவே சூப்பர் ஸ்டார் ரஜினியும் எண்ணியிருக்கலாம் அல்லவா?
அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தை ஹரே ராமா,ஹரே கிருஷ்ணா இயக்கத்துக்கு கொடுக்கப்போவதாக அறிவித்திருந்த நேரம்.
“மணி சார். ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கப் போகிறோம் ,அனேகமாக ஹரே கிருஷ்ணா என்ற பெயரா இருக்கலாம்..திருமண மண்டபம்,சத்திரம் கட்டும் திட்டம் இருக்கு.ஹைஸ்கூல்,காலேஜ் மாணவர்களுக்கு நீதி போதனை கிளாஸ் நடத்தலாம்னு இருக்கேன் வாரம் ஒரு நாள்.அல்லது 15 நாளுக்கு ஒருதடவை இப்படிப்பட்ட கிளாஸ் நடக்கலாம்.”என்கிற அவரது ஆசையின் வெளிப்பாடுகள் அன்று ஏவி.எம்.படப்பிடிப்பு நிலையத்தில் வெளியாகியது.
ஆனால் அவையெல்லாம் நிறைவேறியதா?
‘நெஞ்சில் ஓர் ஆலயம் ‘படத்தில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் எழுதியிருந்த வரிகள்தான் நினைவுக்கு வந்தன,
“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்று மில்லை.
ஆயிரம் வாசல் இதயம்,
அதில் ஆயிரம் எண்ணம் உதயம்.
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும்போவதும் தெரியாது”
எவர்க்கும் பொருந்தக்கூடிய வரிகள்.
ரஜினிக்கும் பொருந்தியது.
“அரசியலுக்கு வருவீங்களா ,?”
இந்த கேள்வியை ராஜசேகர் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கேட்டேன்.கர்நாடக மாநிலத்தில் நதிக் கரையோரம் படப்பிடிப்பு நடந்தது..இரவிலும் தொடர்ந்தது படப்பிடிப்பு..படத்தின் பெயர் மாவீரன்.
இயக்குநருக்கு வருத்தம்.
“என்ன மணிசார்.இன்னிக்கு முக்கியமான சீன்.சாரின் மூட் கோபமா மாறிடாமே சார்”
பக்கா ஸ்கிரிப்ட் ஒர்க் குடன் ஷூட்டிங் போகக்கூடியவர் ராஜசேகர்.
ரஜினிக்கு பல வெற்றிப் படங்களைத் தந்தவர். இருந்தாலும் பயம்.
எப்படி எஸ்.பி.முத்துராமனுக்கு ஒளிப்பதிவாளர் பாபு கண்ணாக இருந்தாரோ அதைப்போல ராஜசேகருக்கு ஒளிப்பதிவாளர் ரங்கா .
ஆனால் இயக்குநர் நினைத்ததைப் போல ரஜினி கோபம் கொள்ளவில்லை. வானத்தையும் காட்டவில்லை. “என்ன சார் வம்பில மாட்டிவிடப் பாக்கிறீங்களா?” என்று சொல்லிவிட்டு நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இயக்குநருக்கு மகிழ்ச்சி. இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு விபத்து நடந்திருந்தது.அதை சென்னைக்குத் திரும்பிய பின்னர்தான் ராஜசேகர் என்னிடம் சொன்னார்.
அதாவது நடிகை அம்பிகாவை குதிரையில் வைத்துக் கொண்டு ரஜினி சவாரி செய்ய வேண்டும்.
ரஜினிக்கு முன்பக்கமாக உட்கார்ந்த அம்பிகா இருபுறமும் கால்களை தொங்கவிடாமல் ஒரே பக்கமாக போட்டுக்கொண்டு உட்கார்ந்து விட்டார். குதிரை ஓடும் போது அமர்ந்திருக்கிறவர்களும் வேகத்துக்கு ஏற்ப எம்பி எம்பி அமரவேண்டும்.
ஆனால் அம்பிகாவிடம் ரஜினியைப் போல உட்காருங்கள் என சொல்ல தயக்கம். பெரிய நடிகை ஆச்சே!
குதிரையின் வேகத்துக்கு அம்பிகாவினால் தாக்குப்பிடிக்க முடியவிள்ளகி.தான் விழுகிற நிலைய உணர்ந்ததும் ரஜினி சாரின் கையை பிடித்துக் கொண்டு அவரையும் விழாக் வைத்து விட்டார். சாருக்கு நல்ல அடி. கம்பீர நடை அழகரான அவருக்கு இரண்டு னால் அப்படி நடக்க முடியவில்லை.அவரே சிகிச்சை செய்து கொண்டார் என்பதுதான் சிறப்பு.
அன்பு இருக்கும் அளவுக்கு ரஜினியிடம்கோபமும் இருந்தது.
இன்னும் இரண்டு நாள் கடக்கட்டும் சொல்கிறேன்.
–தேவிமணி.