ஐரா (விமர்சனம் )
இயக்கம் ; கே,எம்.சர்ஜூன், கதை ; பிரியங்கா ரவீந்திரன், நயன்தாரா ( யமுனா,பவானி.) கலையரசன், யோகிபாபு, இசை ; கே.எஸ்.சுந்தரமூர்த்தி.
பார்க்கவும் பிடிக்கிது, நடிப்பும் பிடிக்கிது.!
சாண்டல் கலரில் டைட் டி சர்ட்டில் நயன்தாரா நடந்து வரும்போது ஜெயராஜின் ஓவியம் மாதிரி…கேமராமேன் சுதர்சன் சீனுவாசனின் கண்களே நகல் எடுத்து விட்டது.. மீடியா மிடுக்கு ஜமுனா நயனிடம் எக்கச்சக்கம்.
“மீடியாவிலதான இருக்கே, இந்த இடத்துக்கு வர எத்தனை ‘பேர’பாத்திருப்ப? லைப்ப ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறத விட கல்யாணம் பண்ணிட்டு என்ஜாய் பண்ணு!” என்று அந்த திமிர்ச்சேவல் செட்டையை தட்டி கொக்கரித்தால் இந்த பெட்டைக்கோழி “உங்காத்தா உனக்கு ஆதின்னு பேர் வைச்சத்துக்கு பதிலா ”..தி”ன்னு பேரு வைக்கலாம்”னு சேவலை புரட்டியதும் நமக்கு “அடடே”என எதிர்பார்ப்பு வருதுங்க.
ஆனா “ஐரா” தலைப்பும் ,அந்த பட்டர் ஃப்ளையும் என்ன சொல்கிறது என்கிற குழப்பம் அடிக்கடி வந்து இம்சை பண்ணுகிறது. ஐராவதம்,ஐராவதன்,ஐராவதி இந்த பெயர்களில் ஏதாவது ஒன்றின் சுருக்கம்தான் தலைப்பாக இருக்கமுடியும்.ஆனால் எதுவுமே பொருந்தவில்லை என்பதுதான் சோகம்.
பட்டர்ஃ ப்ளைக்கு தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் கயாஸ் தியரி ஒன்றை சொல்லியிருப்பார். அதாவது சென்னை கோட்டையில் படபடத்து பட்டாம்பூச்சி சிறகு அடித்தால் பாராளுமன்றத்தில் இடி இடிக்கும் என்பது கயாஸ் தியரி.
ஒரு வினாடி லிப்ட்டின் கதவை யமுனா மூடாமல் திறந்து பவானிக்கு இடம் கொடுத்திருந்தால் அத்தனை சாவுகள் நடந்திருக்காது என்பதுதான் பிரியங்காவின் கதைக்கு அர்த்தம். ஆனால் இயக்குநர் சர்ஜுன் திரைக்கதையை சரியாக சர்ஜரி பண்ணவில்லை.
பவானி கருப்பானவள் என்பதால் அவள் இடம் பெற்ற காட்சிகளை பிளாக் அண்ட் ஒயிட்டில் கொடுத்திருக்கிறார்.குட்.
வசனங்களும் சில இடங்களில் ‘வசக் வசக்’ என குத்துகிறது. அது அவசியமாகவும் இருக்கிறது.
“பொறந்ததும் அப்பனையே முழுங்கிட்டா “என்கிற தோஷம் பிடித்த பவானி கேரக்டரில் அழுத்தம் அதிகம்.அந்த கேரக்டரை மூன்று நடிகைகள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இயக்குனரின் பார்வை நயன் மீதுதான் இருக்கும் என்பது இயல்பே.
மணப்பெண்ணாக கையெழுத்துப் போட சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் வழியில் நடக்கும் அத்தனை சம்பவங்களும் நயன்தாராவுக்கு வைத்த தேர்வு என்றே சொல்லலாம். பவானியின் உடல் மொழிக்குள் யமுனா புகுந்து விடக்கூடாதே!
கலையரசனும் நயன்தாராவுக்கு ஜோடி .ஹீரோவாக பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அத்தனை காலம் அவர் கல்யாணம் பண்ணாமல் துறவறம் காத்ததற்கு இயக்குநர் வலுவான காரணத்தை முற்பாதியில் சொல்லவில்லை.
யோகிபாபு சீசன் முடிகிறதோ என்னவோ…நமக்கு சகிப்புத்தன்மை குறைகிறது. பார்வதி இல்லத்துப் பாட்டியை கொன்றதற்கு என்ன காரணமோ..? மலையாளத்துப் பாட்டிம்மாவுக்கு மறுமுறையும் கருப்பாயூரணி கிழவி சான்ஸ். விஷால் படத்தில் ஒட்டாதது இதில் ஓட்டிவிடுமா என்ன?
ஆவி,பேய் கதைகள் என்றால் வழக்கமாக என்னென்ன உருட்டல்,மிரட்டல் ,ஓசை என டெம்ப்ளேட்டுகள் உண்டோ அனைத்தும் இருக்கிறது.
சுந்தரமூர்த்தியின் இசையில் மேகதூதம் வரிகள் வருடுகின்றன.”நானும் நீயும் காலம் எழுதி காற்றில் வீசிய நாடகம் ,அந்த காற்றே மீண்டும் இணைத்து அரங்கம் ஏற்றும் காவியம்” என்கிற இந்த வரிகள் ஏக்கத்தையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது.
கொடிகளின் தேரோட்ட காலமிது.
கோடையின் வெள்ளோட்ட தொடக்கமிது.
என்பதன் அறிகுறியே ஐரா !
சினிமா முரசத்தின் மார்க்