வெயிலால் வெப்பமானி ஏறுகிறது.!
பாதரசம் தனது கொதிநிலை எல்லையை கடக்குமோ என்கிற அளவுக்கு அரசியலும் வெந்துருகுகிறது.
ஆளும் கட்சிகளுக்கு அதிகாரவர்க்கம் அப்பட்டமாக அடி பணிந்து நடப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
தேர்தல் கால விதிகளை ஆளும் கட்சிகள் மதிப்பதில்லை.
காவல்துறையும் கண்டு கொள்வதில்லை.
விளைவு இருதரப்பினரின் பேச்சிலும் எரிதணல்.!
இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் கருணாஸ்.
பாரதியஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். இவரது “குற்றப் பரம்பரை “பேச்சு தென்மாவட்டங்களில் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
கருணாஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை :
“தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனுவினை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் கனிமொழியின் வேட்பு மனுவில் படிவம்-2 சரியாக நிரப்பப்படாததால் அதுவும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை வழக்கம் போல டிவிட்டரில் ” நாங்கள் கற்றப்பரம்பரை; குற்றப்பரம்பரை அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் நோக்கம் என்ன?
குற்றம்பரம்பரை என்ற சொற்றொடரின் வரலாறு தெரியுமா தமிழிசைக்கு!
கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங்களிலும் நாடோடிக் கூட்டமாக இடம் விட்டு மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்து கொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத்திருந்தது.
சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்த சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கொடூரச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய குழுவின் பொறுப்பாளர் யார் தெரியுமா?
இராமானுஜ அய்யங்கார்.
தமிழகத்தில் மதுரை உசிலம்பட்டி, கீழக்குயில்குடி பகுதியில் முதன் முதலில் இச்சட்டத்த்தை 4.5.1914 இல் ஆங்கிலேயே காவல்துறை அறிமுகப்படுத்தியது.
தமிழ்நாட்டில் கள்ளர், பிரமலை கள்ளர்,முத்தரைய அம்பலக்காரர்,வலையர், என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. யலில் இணைக்கப்பட்டிருந்தன.
அதன்படி 12 வயதை எட்டிய ஆண்கள் தினமும், காலையிலும் மாலையிலும் காவல் நிலையத்தில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். ஆனால் கீழக்குயில்குடியில் உள்ளிட்ட பகுதியிலிருந்த கள்ளர் உள்ளிட்டவர்கள் ஆங்கிலேயர்கள் குறிப்பிடும் நாடோடிகள் அல்ல! நிரந்தரமாக அம்மண்ணில் குடியிருந்தோர் ஆவர், ஆடு மாடுகள் வளர்த்தும் வேளாண்மை செய்தும் தங்களுக்கென தனிக் கலாச்சார அடையாளத் துடன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்த மதுரை மாவட்ட பெருங்காம நல்லூர் மக்கள் மீது ஆங்கிலேயே அரசு 3.4.1920 இல் துப்பாக்கிச்ச்சுடு நடத்தியது. அதில் வீரத்தமிழ் மறத்தி மாயக்காள் உள்ளிட்ட 16 பேர் மரணமடைந்தனர்.
1927ஆம் ஆண்டு மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்துபோது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்தச் சட்டத்தை நீக்குவதற்காக பெரும் போராட்டம் நடத்தினார்.
1929ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினரை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது ஆங்கிலேய அரசு. அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார், முத்துராமலிங்கதேவர். இந்தச் சட்டத்திற்கு முக்குலத்தோர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கையும் விடுத்தார். இதையடுத்து பெரும் போராட்டம் வெடிக்க அந்தச் சட்டத்தைப் பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு. தொடர் முயற்சிகளால் 2000 கிராம முக்குலத்தோர் இந்தச் சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆகக் குறைந்தது.
இப்படிச் சட்டத்தின் பெயரால் நடந்த இக்கொடுமைகளை எதிர்த்து, 1930களில் இருந்தே பல விவாதங்கள் நடந்தன. 1936ல் பண்டித ஜவஹர்லால் நேரு, ‘சட்டப் புத்தகத்திலிருந்து இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்றார்.
இதே போல, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் கி.சி. தக்கா, ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே அது காலாவதியானது.
இந்த வரலாற்றை தமிழிசை மறந்தது ஏன்? குற்றம்பரை சட்டத்தை எதிர்த்து அதற்காகவே போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரமறவர்களின் மண்ணில் நின்று ஓட்டுக் கேட்கும் தமிழிசை,வரலாற்றை கொச்சைப்படுத்துவதின் நோக்கம் என்ன?
குற்றப்பரம்பரை என்பது அன்றைய ஆங்கிலேயே அரசு குறிப்பிட்ட மக்களை முடக்குவதற்காக பயன்படுத்திய ஒடுக்குமுறை சொல்லாடலே. அதை தன்னுடைய தொகுதியில் தேர்தலுக்காக, குறிப்பிட்ட சாதியினரை அவமானப்படுத்தும் விதமாக அச் சொல்லாடலை பயன்படுத்தியது ஏன்?
வேட்பு மனுவையே சரிவர நிரப்ப தெரியாத நீங்கள் கற்றப்பரம்பரையா?
நாங்கள் குற்றபரம்பரை இல்ல! இந்தியாவை கொள்ளையடிக்க வந்த ஆங்கிலேயே அரசை எதிர்த்து நின்று போரிட்டு வென்ற குற்றம் சாட்டப்பட்ட பரம்பரை!
ஒன்றைமட்டும் தமிழிசை புரிந்து கொள்ளவேண்டும்! நீங்கள் தமிழர் உரிமைகளை மட்டுமின்றி; ஒட்டு மொத்த இந்தியாவையே அந்நியர்களுக்கு விற்றபரம்பரை என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்!
இந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழிசையின் கற்றப்பரம் பரைக்கு தமிழர்களின் கற்பிதம் என்னவென்று தெரியும்; தெரியவைப்பார்கள் யார் கற்றப்பரம்பரை; யார் குற்றப்பரம்பரை என்று…!
இவ்வாறு தனது அறிக்கையில் எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்திருக்கிறார்