இயக்கம்:பார்த்தீபன் தேசிங்கு: கதை,வசனம்: ஸ்ரீகாந்த்,தேவேஷ் ஜெயசந்திரன், இசை:ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவு:அரவிந்த் சிங்.பாடல்கள்.: ஹிப்ஹாப் தமிழா, அறிவு. நிர்வாகத் தயாரிப்பு.:அன்பு ராஜா என்.மணிவண்ணன்,படம் ஓடும் நேரம்: 155.33 நிமிடங்கள்.
தயாரிப்பு அவனி மூவிஸ்.,தயாரிப்பாளர்:சுந்தர்.சி.
ஹிப்ஹாப் ஆதி, அனகா, கரு.பழநியப்பன், பாண்டியராஜன், கவுசல்யா,குமாரவேல்,ஹரிஷ் உத்தமன்.
*************************************************************
சாமிக்கு மொட்டை அடிச்சு காரியத்தை சாதிக்க நினைக்கிறதை விட நட்பே துணைன்னு ஒற்றுமையா இருந்தா வெற்றி பெற முடியும். சாமியை விட நட்பை நம்பு என்று சொல்கிற கதை.
பாண்டிச்சேரி கடற்கரை ஓரமா இருக்கிற இடத்தை கபளீகரம் பண்ணிட்டா தடை செய்யப்பட்ட கெமிக்கல் பாக்டரியை அங்கு ஆரம்பிச்சு காசு பார்க்கலாம் என விளையாட்டுத் துறை அமைச்சருடன் கூட்டு சேருகிறது ஃ பாரின் நிறுவனம். அந்த இடத்தில் அந்த ஊருக்கே புகழ் தேடித்தந்த விளையாட்டுத் திடல் இருக்கிறது.அந்த இடம் பறி போகாமல் இருக்க பிரபாகரன் போராடுகிறார்.
மீட்டாரா இல்லையா?
அதான்ங்க கதை. அதாவது ஹாக்கியை பற்றிய கதை. அதில் என்னென்ன தில்லுமுல்லு அரசியல் இருக்கிறது என்பதை தோல் உரித்திருக்கிற படம்.
பிளைட் டேக் ஆப் ஆகிறவரை ரன்வேயில் வேகம் எடுக்கிற மாதிரி முதல் பாதி.
இரண்டாம் பாதிதான் ஜிவ். பிளைட்டுக்குள் உட்கார்ந்திருக்கிற ஆளுக்கு வேகம் தெரியாது. இறங்கும்போதுதான் இவ்வளவு சீக்கிரத்தில ஊருக்கு வந்திட்டமா என்கிற உணர்வு வரும்.அந்த அளவுக்கு செகண்ட் ஆப்பில் கரு.பழநியப்பனும் ஹாக்கி விளையாட்டும் சர வெடியாய்
அதென்னமோ தெரியலிங்க.அரசியல்வாதிகளின் அன்டர்வேருக்குள் ஓணானை விட்ட மாதிரி கிண்டல் பண்ணினால் ஜனங்க அப்படி ரசிக்கிறாங்க. ஒன்ஸ்மோர் கேட்கிறாங்கய்யா!
வாட்ட சாட்டமான குமரிப் பொண்ணு தன்னோட டி சர்ட்டில் “குவாலிட்டி ,குவான்டிட்டி ‘என்று வார்த்தைகளை போட்டுக் கொண்டு வந்தால் அந்த ஏரியா எப்படி இருக்கும்?ஹிப்ஹாப் ஆதி -அனகா காதல் மாதிரி தான் இருக்கும். வெறும் பார்வை, ஓரிரு வார்த்தைகள் என பரிமாறிக் கொண்டாலும் ஈர்ப்பு இருக்கு. காதல் அதிகமாகி இருந்தால் ஹாக்கி அரசியலில் கனம் இல்லாது போயிருக்கும். வழக்கமான சப்ஜெக்ட்டாக இருந்திருக்கும்.
“விளையாட்டெல்லாம் வியாபாரமாகிப் போச்சு.நேஷனல் போட்டியில் வெற்றி பெற்று வந்த பெண்கள் கபடிக்குழு ஆட்டோவ்ல வந்தாங்க “என்று சொல்கிறபோது எந்த அளவுக்கு மட்டமா இருக்கோம்கிறது புரியிது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி வழக்கமான ஆதிதான் என்றாலும் இதில் மிகவும் இளமையாக இருக்கிறார்.
அமைச்சராக கரு.பழநியப்பன் .”கம்ப ராமாயணம் சேக்கிழார் எழுதினது…. இப்படியெல்லாம் தப்பு தப்பா பேசுனாத்தான் நம்மளைப் பத்தி நாலு எழுத்து பத்திரிகைய்ல எழுதுவாங்க” “நீங்க கம்பெனி நடத்துறிங்க, நாங்க கட்சி நடத்துறோம்.” “இனம். மொழி,சாதின்னு இங்க பிடிச்சுக்கிட்டு ஆடுறோம்” “போடா பாகிஸ்தானுக்கு!” ” தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் .கையில போன் வச்சிருக்கிறவன் எல்லாம் பிரஸ்””எனக்கு நூறு கோடி,என் பொண்டாட்டிக்கு நூறு கோடி,என் மகனுக்கு நூறு கோடி .இனிமே சம்பாதிக்கிறதெல்லாம் உங்களுக்கு ஓட்டுக்கு கொடுக்கிறதுக்குதான்!.காசு வாங்காம ஓட்டு போடுவீங்களா?”இந்த மாதிரியான வசனங்களை எலக்சன் நேரத்தில எறக்கி வச்சிருக்காங்க வசனகர்த்தாக்கள் ஸ்ரீ காந்த்,தேவேஷ் ஜெயசந்திரன் இருவரும் செம அடி அடிச்சிருக்காங்க.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு. ஹாக்கி விளையாட்டின் நெளிவு சுழிவுகளை தெளிவாக அறிந்திருந்தால் மட்டுமே இந்த அளவுக்கு சிறப்பாக படமாக்கி இருக்க முடியும். படம் பார்க்கிற உணர்வு இல்லாமல் நாமும் அந்த கிரவுண்ட்டில் இருக்கிறோம் என்கிற நேரடி உணர்வு.
ஹரிஷ் உத்தமனை முரட்டுத்தனமாக பார்த்துப் பழகி விட்ட கண்களுக்கு புதிய உத்தமனை காட்டியிருக்கிறார் இயக்குநர் பார்த்தீபன் தேசிங்கு .குமரவேலுக்கு எதிர் அணி கோச்சர் வேலை. தோல்வியை நெருங்குகிற அணியின என்ன செய்வார்களோ அதை செம்மையாக செய்திருக்கிறார்கள்.
தேர்தல் நேரம் பார்த்து வந்திருக்கிற படம். இதை பார்த்து ஒரு அஞ்சு பெர்சன்ட் ஆள் திருந்தினாலும் அது ஜனநாயகத்தை காப்பாற்றிய புண்ணியம்யா!
காசு வாங்காமல் ஓட்டு போடுவியா?போடுவியா?
சினிமா முரசம் மார்க் : 3 / 5