நடிகர் சங்கத்திற்கான தேர்தல் தேதி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் பத்மநாபன் ,அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தேர்தல் மைலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், தேர்தல் குறித்த தகவலை நடிகர் சங்க உறுப்பினர்களுகு தபால் மூலம் அறிவிக்கப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார். தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார் இருந்து வருகிறார். இந்த தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து நடிகர் விஷால் மற்றும் நாசர் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் வரும் 13 ந்தேதி நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தங்களது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர்.