சாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும் ஸ்டைலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா பால் தற்போது, வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அவரது அடுத்த படமான ‘கடாவர்” படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார் அமலா பால்.
“ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் ரசிக்கிறேன். அத்தகைய ஒரு முடிவை எடுத்த பிறகு அதோ அந்த பறவை போல, ஆடை படங்களுக்கு பிறகு கடாவர் கதையை கேட்டேன். இதுவரை பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட ஒரு கதையாக இருந்தது ‘கடாவர்” நான் இந்த படத்தில் ஒரு தடய நோயியல் நிபுணராக நடிக்கிறேன். இதில் நடிக்க நான் நிறைய தயாராக வேண்டி இருந்தது. ஏனெனில் நாம் திரைப்படங்களில் பார்த்த வழக்கமான விசாரணைகள் போல இது இருக்காது. கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்
உமா டத்தனால் எழுதப்பட்ட ‘ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கதாபாத்திரத்துக்கு தயாராவதற்கு அந்த புத்தகத்தை வாசித்ததோடு மட்டுமல்லாமல், அந்த தொழிலை பற்றிய மேலும் நுணுக்கமான அறிவைப் பெற ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணருடன் இரண்டு நாட்கள் செலவிட்டேன்” என்றார்.

இந்த படத்தில் நான் ஒரு புதிய தோற்றத்தில் தோன்றுவேன், ரசிகர்களுக்கு அது ஒரு சர்ப்ரைஸாக இருக்கும் என்கிறார் அமலா பால்.