ஜி.வி.பிரகாஷ்குமார், ரா,பார்த்தீபன், பாலக் லால்வானி,பூனம் பஜ்வா,யோகிபாபு,எம்.எஸ்.பாஸ்கர். கதை வசனம் இயக்கம் :பாபா பாஸ்கர்.இசை :ஜி.வி.பிரகாஷ்,ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி,
************************************************
“எங்க ஏரியா உள்ள வராதே,” என்று தனுஷ் மிரட்டினால், “எங்க ஏரியா எங்க ஏரியாதான்,உங்க ஏரியா உங்க ஏரியாதான்” என்று எல்லைக்கோடு போடுகிறார் குப்பத்து ராஜா ஜி.வி.பிரகாஷ் குமார்.
இவர்களுக்கிடையில் நடக்கும் நிழல் யுத்தத்தின் எதிரொலிதான் இந்தப் படமோ?பல காட்சிகள் தனுஷ் படத்தை நினைவு படுத்தாமல் இல்லை.
நடிகர்களுக்கிடையில் நடக்கும் மவுனயுத்தம் அவர்களது படங்களில்தான் எதிரொலிக்கும்.இது அந்த காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை தொடர்கிறது. அதவிடுங்க. அமைதியான சண்டையாக இருந்தாலும் நடிகர்களின் பெர்பாமன்ஸ் ரேட்டிங் உயருதே.!ஜீவி பிரகாஷ் நடிப்பில் நல்ல தேர்ச்சி. முறைப்பதும் விடைப்பதும் ஆகா ஓகோ!
அதிலும் எம்.ஜி.ராஜேந்திரன் எனப்படும் பார்த்தீபனிடம் பொங்குவதும் பம்முவதும் சிறப்பு. குப்பத்து ராஜாவாக தர லோகலில் இறங்கி வேட்டையாடுகிறார்.
வர வர செவண்டி எம்.எம் ஆகிறார் பார்த்தீபன் குறுக்கு வாக்கில்.!வித்தியாசமான எத்தனையோ பார்த்தீபன்களை பார்த்தாச்சு. இந்த எம்.ஜி.ஆர் அவ்வளவாக ஈர்க்கவில்லை.
ஜிவிபி-பாலக் லால்வானி காதல் கனிரசம்தான்.ஓட்டுவதும் வெட்டிக்கொள்வதுமாக காதல் சுகமாக பயணிக்கிறது. பூனம்பாஜ்வாவுக்கும் கதைக்கும் இடைவெளி திமுக-அதிமுகவுக்கும் உள்ள மாதிரி! அவர் பார்த்தீபனை காதலிக்கிறார் என்பதே பார்த்தீபன் சொல்லித்தான் தெரிகிறது. அவரை அநியாயமாக வெடி விபத்தில் சாகடித்து விடுகிறார்கள்.
ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் காலத்தில் இருந்து இந்த காலம் வரை மிட்டாயில் போதையை கலப்பது நீண்ட ஆயுசுடன் வளர்கிறது.
வடநாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் எவ்வளவு இடைவெளி என்பதை சேட்டுக்கு மோட்சம் கொடுக்கும் காட்சியில் பார்த்தீபன் ஜிவிபியிடம் சொல்லும் இடம் அமர்க்களம். இப்படி ஒவ்வொரு படத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சொல்லி வந்தால் நமக்கு சொரணை வரலாம்.டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்கும் முதல் படம் .இன்னும் நிறைய டேக் போகணும்.
சினிமா முரசத்தின் மார்க். 2/5