கதை வசனம்:ராஜூ முருகன்,ஒளிப்பதிவு:செல்வக்குமார், இசை:ஷான் ரோல்டன், இயக்கம்.: சரவண ராஜேந்திரன். நடிகர்கள்: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்வேதா,வேல.ராமமூர்த்தி,மாரிமுத்து.தயாரிப்பு: ஞானவேல்ராஜா.
மரணப்படுக்கையில் கிடக்கிறாள் லைலா.
அப்போதும் அவள் நினைவுகள் அவனை சுற்றியே..அதாவது காதலன் மஜ்னுவை நினைத்தே.!
“எனக்கு கல்யாணம் நடந்துவிட்டது. ஆனால் கணவன் இல்லை காதலன் நீ மட்டுமே! காதல் என்கிற பெரு நெருப்பில் கட்டையாக எரிந்து சாம்பலாகிறேன் !காண வருவாயா மஜ்னு?”என பிதற்றுகிறாள்.
கிட்டத்தட்ட மெஹந்தி சர்க்கஸ் நாயகி மெஹந்தியின் நிலையும் அதுதான்.!மராட்டியத்தின் எங்கோ ஒரு மூலையில் சின்னஞ்சிறு கிராமம். உற்றமும் சுற்றமும் சாவு செய்தி கேட்க காத்திருக்கிறது.அவளின் காதலனை கைப்பிடித்து அழைத்து வருகிறாள் அவளது மகள். உச்சக்கட்ட காட்சி எப்படி முடியுமோ என்கிற எதிர்பார்ப்பில் மொத்த தியேட்டரும்! நம்மை தளர்வடைய விடாமல் கடைசி கட்டம் வரை கடத்திக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் சரவண ராஜேந்திரன்.
கரப்ட் இல்லாத காதல் கதை.
எங்கேயும்,எந்த கட்டத்திலும் இயக்குநரும்,கதை வசனகர்த்தாவும் சமரசம் செய்து கொள்ளாமல் காட்சிகளை ஓட விட்டிருக்கிறார்கள்.
சாதி வெறியை ஒற்றை மகன் என்றபோதும் விட்டுக் கொடுக்காத மாரிமுத்து, பாதிரியார் என்றால் அவரும் மனிதர்தானே என ஒயின் பாட்டிலுக்குள் அடங்கிவிடுகிற சாதி மதங்கள் கடந்த பாதிரியார் வேல.ராமமூர்த்தி, காதலர்களை இளையராஜா பாடல்கள் வழியாக கோர்த்து விடுகிற நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ்,உடல் பார்த்து வருவதல்ல மனம் பார்த்து மலர்வதுதான் காதல் என நேசிக்கும் நாயகி ஸ்வேதா ,இப்படியாக முக்கிய பாத்திரங்கள் அவர்களது கேரக்டரின் தன்மை மாறாமல் டிராவல் பண்ணியிருப்பது கதைக்கு ஜீவனாக இருக்கிறது.
குறிப்பாக நாயகன் நாயகி இருவரும் அறிமுகம் என்பது பலம். நாயகி,அவரை சார்ந்த வடவர்களை பச்சைத் தமிழர்களாக மாற்றாமல் அவர்களது சிலாங் கலந்து பேச வைத்திருப்பது நம்மை கதையுடன் இணைத்து விடுகிறது.
இந்த கதையிலும் ஒரு வில்லன் இருக்கிறான் என்பதை வெளிக்காட்டும் கட்டம் அடடே சொல்ல வைக்கிறது. இந்தப் பசுவா நஞ்சு கறந்தது? சூப்பர் இயக்குநரே!
நாம் பார்ப்பது திரைப்படம் என்கிற உணர்வு ஏற்படாமல் ஆன் த ஸ்பாட்டில் இருக்கிறோம் என்கிற தன்மை தெரிவதுதான் ஒளிப்பதிவின் சிறப்பு. செல்வக்குமார் பாராட்டுக்குரியவர்.
அறிமுக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் நல்ல தேர்வு. பதின்ம பருவம் கடந்த ஒரு ஆணின் மன நிலையை பிரதிபலிக்கிறார். தன்னால் காதலியை நோக்கி கத்தி வீச இயலாமல் போவதை முகத்தில் காட்டுவது அவ்வளவு எளிதல்ல. காதலும் வேணாம் ஒன்னும் வேணாம் என்று வாய்தான் சொன்னதே தவிர அவரது உள்ளம் சொல்லவில்லை.தரை கீறி முளை விடுகிற வீரிய வித்து.
சந்தோஷமே இல்லாது போமோ என்கிற மனநிலையிலேயே நாயகியை வைத்திருந்தாலும் கிளை மாக்சில் “நீதாண்டா மச்சான் எனக்கு புருசன்… வாடா கத்தியை வீசு. கட்டி அணைச்சுக்கிறேன்”என்கிற ரீதியில் ரங்கராஜின் கையைப் பிடித்துக் கொண்டு போவது அவரது நம்பிக்கையை காட்டினாலும்,சாகக்கிடந்த பெண்ணாகக் கிடந்தாள் என சொன்னதை நம்பமுடியவில்லையே! முற்பாதியிலும் சிறு குறை.
கதையைப் போல படத்துக்கு இணையான பலம் இசை. ஷான் ரோல்டானின் இரண்டு பாடல்கள் இனிமையான மெல்லிசை. அவ்வப்போது இளையராஜாவும் வருகிறார்.
சித்திரைக் கோடைக்கு அழகான சுற்றுலாத் தளம் மெஹந்தி சர்க்கஸ்.
லைலா-மஜ்னு மறு ஜென்மம் எடுத்து வாழ்கிறார்கள்.