ஆளவந்தார் கொலையைப் போல தமிழ்நாட்டை உலுக்கி எடுத்த உண்மைச்சம்பவம் ஆட்டோ சங்கர் செய்த படுகொலைகள்.
அன்றைய ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் துணை ,அதிகார மையத்தின் அனுசரணை,காவல் துறைக்குக் கப்பம் கட்டி அவர்களது கண்படாமல் காத்துக் கொள்ளல் என்கிற உதவியுடன் ஆறு கொலைகளை செய்தவன்தான் கவுரி சங்கர் என்கிற ஆட்டோ சங்கர். டஜனுக்கும் அதிகமான கூட்டாளிகள்..
கொலை செய்தபின் சடலங்களை எப்படி மறைப்பது என்பதை ஒரு திரைப்படத்தைப் பார்த்துக் கற்றுக்கொண்டேன் என சொன்னவன்தான் ஆட்டோ சங்கர். ஒரு சபாநாயகரால் பாதுகாக்கப்பட்ட சங்கர் கழகம் இரண்டான பிறகு சங்கருக்கு செல்வம் பெருகியது. பிரபலங்களுக்கு பெரிய நடிகைகளை அனுப்பி வைக்கும் அளவுக்கு கில்லாடியானான்.இன்றும் அந்த நடிகைகள் இருக்கிறார்கள்.
அவனது வாழ்க்கையே அசிங்கம்தான்.
ஆபாசத்தை ஆபாசம் என்றுதான் சொல்ல முடியும்.
அன்று மட்டுமல்ல இன்றும் சென்னையில் பச்சை ஆபாசமான வார்த்தைகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை பேசுவதை கேட்கமுடியும். மட்டமான தொழில் செய்கிறவர்களின் ராஜபாஷை அது.
இன்று வெப் சீரிஸ் எனப்படுகிற படங்களில் ஆபாச வார்த்தைகள சர்வ சாதாரணமாக புழங்கப்படுகிறது. காட்சிகளும் அப்படியே இருக்கின்றன. நெட்பிளிக்சில் இம்மாதிரியான ஆங்கில சீரியல்களை விரும்பிப் பார்க்கிறவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
90 எம்.எல்.படம் பார்த்துப் பொங்கியவர்களையும் தெரியும். அதுதான் இயல்பு என பொய் முகம் காட்டியவர்களையும் தெரியும்.
சினிமாவைப் போலவே வெப் சீரியல்களும் எடுக்கப் படுகின்றன.நடிகர்கள் நடிகைகள் நடிக்கிறார்கள்.இதற்கு தணிக்கை கிடையாது என்பது மிகப்பெரிய பலம்.
தமிழ்ச்சினிமாவில் பச்சை ஆபாசமான வார்த்தைகளை தணிக்கைக்குழு அனுமதித்திருக்கிறது.போகிற போக்கில் இன்னும் என்னன்ன சொற்கள் வந்து விழுமோ என்பது தெரியவில்லை. வடசென்னையில் வரவில்லையா?
தற்போது கைபேசியில் பார்க்கிற அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருப்பதால் ஆட்டோ சங்கரின் தொடரை வெளியிட்டிருக்கிறார்கள்.ஆபாச வார்த்தைகள் அப்படியே!