“மதுர பளபளக்க மல்லியப்பூ மணமணக்க “என்று ‘தேவராட்டம்’படத்தின் முன்னோட்டம் இன்று ஜில்லாவே கிடுகிடுக்கும் அளவுக்கு வெளியானது சென்னையில்.!
அழகர் தங்கக்குதிரையில் மதுரை வைகையாற்றில் இறங்கும் கள்ளர் திருக்கோலமும்,சித்திரை தேரோட்டமும் எந்த படத்திலும் பார்த்திராத அளவுக்கு திகட்ட திகட்ட காட்டுகிறார்கள்.முன்னோட்டமே இப்படி என்றால்….
மதுரை பத்துத் தூண் சந்தில் கூட கேமரா விளையாடி இருக்கிறது. தெக்கித்திச்சீமையில் நவரச நாயகன் கார்த்திக் என்றால் தனி செல்வாக்குதான்.அவரது பிள்ளை இளைய நவரசநாயகன் கவுதம் கார்த்திக் தேவராட்டம் படத்தில்ஆடியிருக்கும் ஆட்டமும் போட்டிருக்கும் சண்டையும் தனி மாஸ்.
இயக்குநர் கொம்பன் முத்தையாவுக்கு தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை முறை அத்துபடி. அக்கா தம்பி, தாய்மாமன் செய்வரிசை ,இதெல்லாம் எந்தெந்த வகையில் பாசம் நேசமுடன் அப்படியே சண்டை சச்சரவுடன் இருக்கும் என்பதெல்லாம் தெரியும். அந்த குடும்பத்தை கண்முன் காட்டிய உணர்வு முன்னோட்டம் பார்த்ததும் தெரிந்தது.
“கண்ணகிக்கு பொறந்த புள்ளயா இருக்கணுமே தவிர காந்தாவுக்கு பொறந்த புள்ளயா இருக்கக்கூடாது.!” “மண்ணை தொட்டவன விட்ரலாம் ஆனா பொண்ணை தொட்டவனை விட்ரக்கூடாது” போன்ற வசனங்களுக்கு பஞ்சமில்லை.
கவுதம் கார்த்திக் பேசுகையில் “இதற்கு முந்தைய என் படம் பலத்த அடி.இந்த தேவராட்டம்தான் என்னை தூக்கி நிறுத்தும்”என்று நம்புவதாக சொன்னார்.
சக்தி பிலிம் பாக்டரி சக்திவேலன் பேசுகையில் “தெரிஞ்சோ தெரியாமலோ நம் மீது சாதி,மொழி எல்லாம் திணிக்கப்படுது. அதை தேர்தலிலும் பார்த்தோம்.சாமி இருக்குங்கிற அரசியலும் இருக்கு,சாமி இல்லேங்கிற அரசியலும் இருக்கு. ஆனா இந்த படத்தில அந்தந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை சிறப்பாக சொல்லியிருக்கிறார் முத்தையா “என்று சொன்னார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில் “இப்ப சூரி பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுகிற மாதிரி காஸ்ட்லியாகிட்டார்”என்றார். உண்மைதான் சூரியின் மார்க்கெட் ரேட் கோடியை நெருங்கி விட்டது என்கிறார்கள்.
இயக்குநர் முத்தையா பேசுகையில் கேமராமேன், ஹீரோ இசை அமைப்பாளர் இந்த மூவருடனும் பயணிப்பது மனைவியுடன் பயணிப்பது மாதிரி”என்று உவமை சொல்லி பேசினார்.