கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ,மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
இந்திய மக்களவைத் தேர்தல் வாக்குகளும், ஆந்திரபிரதேச சட்டப்பேரவை வாக்குகளும் மே மாதம் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஏப்ரல்18 ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வேலூர் தொகுதியை தவிர (வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து) ஏனைய எல்லா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது.
அதே போல், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு, மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிவந்த நிலையில், இந்த நான்கு தொகுதிகளுக்கும் கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெறும்.
மே 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டநிலையில், அந்த தேர்தலுக்கும் தமிழகக் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதே நேரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும்,
தமிழகம் மீண்டும் பொது தேர்தலை சந்தித்தே தீரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.எடப்பாடி அரசு கவிழும் என கணிக்கிறார்கள்.
இந்நிலையில், பாராளுமன்றத்தேர்தல் என் குறிக்கோள் இல்லை. எப்போது சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் தேர்தலை சந்திக்க தயார் என சமீபத்தில் ரஜினிகாந்த் பேட்டி அளித்த நிலையில், தற்போது விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் என ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.
இதையடுத்து சுறுசுறுப்பான ரஜினிமக்கள்மன்ற நிர்வாகிகள், தங்களது கட்சியினருக்கு சுற்றறிக்கை மூலம் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்கும் படி உத்தரவிட்டுள்ளனராம். இதனால் தேர்தல் முடிவு வெளியானதும், ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது.