நெடிய இடைவெளி….மன்னிச்சிடுங்க.!
சினிமா முரசம் யூ டியூப் வேலைகளால் அதிகமாகவே காலதாமதமாகி விட்டது.
இனி அப்படி நிகழாது. நீங்காத நினைவுகள் குறிப்பிட்டநாளில் அரங்கேறிவிடும்.
பொதுவாக தமிழ்ச்சினிமாவின் பொற்காலம் என்றால் 70–80 களைச் சொல்வார்கள்.
அத்தகைய பொற்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
1968-வெளியான படம் திருமால் பெருமை. ஏ.பி.நாகராஜன் இயக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,நாட்டியப்பேரொளி பத்மினி ,திரைஉலக மார்க்கண்டேயன் சிவகுமார் ஆகியோர் நடித்த படம்.
படத்தில் சிவாஜிக்கு திருமலை மன்னன் வேடம். எப்படியாவது மகாவிஷ்ணுவுக்கு கோவில் கட்டி விட வேண்டும் என்பது அவரது நோக்கம்.கஜானாவெல்லாம் காலி.ஆலயப்பணி முடிவடையவில்லை.
சரி கொள்ளை அடிப்போம் என வழிப்பறிகளில் இறங்க அவ்வழியாக திருமண கோஷ்டி வருகிறது. மகா விஷ்ணுவும் மகாலட்சுமியும்தான் புதிய மணமக்களாக உருமாறி வருகிறார்கள் என்பது மன்னனாகிய சிவாஜிக்குத் தெரியாது. விஷ்ணுவாக நடித்த சிவகுமார்தான் புதிய மணமகனாக நடித்தார்.
இந்த காட்சியை செங்கல்பட்டு அருகில் படமாக்கினார் ஏபி.நாகராஜன் .
சின்னஞ்சிறு விஷ்ணு கோவில்.மிகவும் பழமையானது. ஆனால் அந்த ஆலயத்தை சுற்றிய வயல்வெளிகள் கழிப்பிடமாக மாறிக்கிடந்தது. கிராமப்பகுதிகளில் அந்த மனிதக்கழிவுகளை அனாதைப் பிள்ளைக என கேலியாக சொல்வார்கள்.
அந்த பகுதியைப் பார்த்ததும் இயக்குநருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
சிவாஜிக்கு எப்படி இருக்குமோ ஏதும் சொல்வாரோ என்கிற அச்சம் .
“அண்ணே வேற எடம் போகலாமா?”என்று கேட்டார்ஏ.பி.என்.
“வேணாம்..இங்கேயே எடுத்திடலாம்”
கொள்ளை அடிக்கும் காட்சி படமாகியது.
மணமகன் சிவகுமாரின் எல்லா நகைகளையும் சிவாஜி கொள்ளை அடித்துவிட்டு காலை பார்க்கிறார்.
அங்கே மெட்டிதான் மிச்சம்.புது மாப்பிள்ளை ஆச்சே!
“அத கழட்டு!”
“என்னால் முடியல. வேணும்னா நீங்களே கழட்டிக்குங்க.” என்கிறார் சிவகுமார்.
எவ்வளவோ முயன்றும் கையினால் கழற்ற முடியாததால் தனது பல்லால் கடித்து கழற்ற பாதத்தில் வாயை வைக்கிறார்.
எத்தகைய மாமேதை சிவாஜி..அவரது திருவாய் தனது காலில் பதிவதா?
“ஜெர்க்”ஆனார் சிவகுமார்.
“என்ன கவுண்டரே! காலை நல்லா கழுவி இருக்கிங்கல்ல”?
“அதில்லேண்ணே” என தழுதழுக்கிறார் சிவகுமார்.
“உலக மகாப் பெரு நடிகன்யா.!அவருக்கு ராம்குமார்,பிரபு மட்டும் பிள்ள இல்ல..நான்தான் தலைப்பிள்ள.இந்த ஜன்மம் மட்டுமில்ல.அடுத்த ஜன்மத்திலும் நான் அவருக்குப் பிள்ளையா பிறக்கணும்!” என உணர்ச்சி வயப்பட்டார் அந்த மார்க்கண்டேயன்.
இதற்கு மாறாக மற்றொரு சம்பவம்.இது வேற மாதிரி.!
லலிதா,பத்மினி,ராகினி ஆகிய திருவாங்கூர் சகோதரிகள் கொடி கட்டி பறந்த காலம்.
வெளிப்புறப் படப் பிடிப்புகள் பெரும்பாலும் கிராமங்களில், வயல் வெளிகளில் நடக்கும். இந்த அவுட்டோர் ஷூட்டிங்குகள் பற்றி நடிகர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் நாயகிகள்தான் சிரமப்படுவார்கள்.
இன்டோர் ஷூட்டிங்குகள் பெரும்பாலும் நடந்தாலும் சில பாடல் காட்சிகளுக்காக வெளியூர்களுக்கு செல்வது உண்டு.அந்த காலத்தில் கேரவான் வசதிகள் கிடையாது. தெரிந்த வீடுகள் , நடிகர் நடிகைகள் தங்கள் வீடுகளில் தங்குவதை பெருமையாக நினைக்கும் பெரிய மனிதர்கள் வீடு என கிடைக்கும் இடங்களில் தங்கி விடுவார்கள். வாடகைக்கும் எடுப்பது உண்டு..அப்படித்தான் அவுட்டோர் ஷூட்டிங்குகள் நடந்தன.
இன்று அப்படியெல்லாம் இல்லை.குட்டி கிராமம் என்றாலும் கேரவான் உடன் செல்லும்.
ஆனால் கிராமங்களைத் தாண்டிய பகுதிகளில் அந்தக்காலத்தில் படப்பிடிப்பு நடக்கும்போதுதான் சிக்கல்
ஒரு சம்பவம்.!
அக்காள்,தங்கை, சேர்ந்து நடித்த படம்.
உடைகள் மாற்ற வேண்டுமானால் இரண்டு பெண்கள் போர்வைகளை உயர்த்திப் பிடித்துக் கொள்வார்கள். அந்த பக்கமாக ஆண்கள் செல்ல மாட்டார்கள்.
ஆனால் இயற்கை உபாதைகள் என்றால் மரம் செடி பார்த்து ஒதுங்கி விடுவார்கள்.
நாயகர்களுக்கு இது வசதி !
ஆனால் நாயகிகளுக்கு?
இரண்டு பேராக செல்வார்கள். ஆண்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியாக இருக்கும்!
அக்காளை அழைத்துக் கொண்டுதங்கை ஒதுக்குப் புறமாக சென்றார்.
கிராமிய பெண்கள் விளையாடுவதைப்போல அக்காள் பாவாடையை அகலமாக விரித்தபடி மறைத்து நிற்க அந்த மறைவில் சுலபமாக தங்கையின் இயற்கை உபாதை முடிந்தது.ஆனால் சைக்கிளில் ஒருவன் அந்த நேரமாகப் பார்த்து கடந்து சென்று இருக்கிறான்
“என்னடி யாரும் பாக்கலியே?” என்று தங்கை கேட்க அக்காள் “சைக்கிள்காரன் ஒர்த்தன்தான் போனான்.”என்று சொன்னதும் சர்வ சாதாரணமாக “சரி ஒர்த்தன்தானே பார்த்தான் ,விடு ” என்று தங்கை சொன்னாராம். அவர்கள் இருவரும் தமிழ்த் திரை உலகில் அசைக்க முடியாத நாட்டிய சகோதரிகள் .ஆள் யாரென புரிந்திருக்குமே!
அடுத்தப் பதிவில் ஆள் மாறாட்டம் செய்த நடிகை பத்மினி. அரசே அசைந்தது.
–தேவிமணி