கதை,வசனம்,இயக்கம்:முத்தையா.கேமரா: சக்தி சரவணன். இசை:நிவாஸ்.கே.பிரசன்னா.தயாரிப்பு.:கே.இ.ஞானவேல் ராஜா.
கவுதம் கார்த்திக்,மஞ்சிமா மோகன், சூரி ,வினோதினி, வேல.ராமமூர்த்தி,போஸ்.வெங்கட்,பெப்சி விஜயன்,
*****************************************
இன்றைய பெரியார் பஸ் நிலையத்துக்கு எதிரில் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் இருந்த காலம்.கோர்ட்டுக்கு ஜட்கா வண்டியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வந்து கொண்டிருந்தனர். கட்டபொம்மன் சிலை அருகில் வண்டி வந்த போது எங்கிருந்தோ சிலர் வேல்கம்புகளுடன் பாய்ந்து வண்டிக்குள் இருந்தவர்களை குத்திச்சாய்த்தனர்.
அந்த சம்பவம்தான் படம் பார்க்கும்போது நினைவுக்கு வந்தது.
எம்.ஜி.ஆர் .பேருந்து நிலையம் அருகில் மூணு பேர் குத்துப்பட்டுக் கிடக்கிறார்கள். குத்துக்கத்தியுடன் கவுதம் கார்த்திக் ரத்த வெறியுடன் ரோட்டோரம் உட்கார்ந்திருக்கிறார். கொடும்பாவி கணேசன் என்கிற பெப்சி விஜயனின் தவமாய் தவமிருந்து பெத்த பிள்ளையை கவுதம் போட்டுத் தள்ளியதால் மதுர சண்டியரின் அடுத்தடுத்த பழி வாங்குகிறஅருஞ்செயல்கள்தான் ‘தேவராட்டம்.’
ஸ்டண்ட் திலிப் சுப்பராயனின் அடாவடி,அதிரடி,பேயடி சண்டைக் காட்சிகள்தான் கதையின் முக்கிய காட்சிகள். தெக்கத்தி மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கில் இருக்கும் எகத்தாளம் கதை முழுவதும் இருக்கிறது.
சித்திரைத் திருவிழா,வைகை ஆற்றில் அழகர் இறங்குவது ,என திருவிழா மயமாக தொடங்குகிற படம்தான் போகப் போக ரத்தப்பெருவிழாவாக மாறுகிறது.
ஆறு அக்கா,ஆறு மாமன்கள் உற்றம் சுற்றம் என பெருங் குடும்பத்தை பார்த்ததும் இன்னொரு கடைக்குட்டி சிங்கமாக இருக்கும் போலிருக்கே என்கிற எண்ணம் வருகிறது..ஆனால் வஞ்சினம்தான் வாழ்கிறது.!
படம் முடிந்து திரும்பும்போது சட்டையில் ரத்தம் தெறித்திருக்கிறதா என பார்க்கிற அளவுக்கு வீர விளையாட்டுகள்.
வாழ்ந்திருக்கிறார் கவுதம் கார்த்திக். இவருக்கென எழுதப்பட்ட வசனங்கள். ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்களை சார்ந்த கதை என்பதால் அந்த மக்களை கொண்டாடும் வகையில்காட்சிகளும் வசனமும் இருக்கிறது. “நிப்பான்! கோரிப்பாளையத்து சிலை மாதிரி!”என்பது ஒரு சோத்துப் பதம்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் ‘தன்னை தீண்டினால் செத்தான்”என்கிற பாலிசியில் கவுதம் எக்க சக்கமான ஆட்களை தரையில் உருட்டுகிறார்.மஞ்சிமா மோகன் இருந்தும் காதல் காட்சிகளுக்கு அவ்வளவாக வாய்ப்பில்லை.குத்துப்பாட்டுக்கு கொடுத்த இடத்தில் இவர்களது குத்துக்கும் இடம் கொடுத்திருக்கலாம்.
கொடைக்கானல் பசுமை இழந்து கிடப்பதை பார்க்கிறபோது வயித்தெரிச்சல்! மொத்த சிறப்பையும் “மதுரை பளபளக்க மல்லிகை மணமணக்க “என்கிற நெடும்பாட்டிலேயே காட்டி விட்டார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்.
நிவாஸ்.கே.பிரசன்னாவின் இசையில் “மதுரை பளபளக்குது “பாட்டுக்கு மட்டுமே அள்ளிக்கொட்டலாம் மார்க்குகளை.!
இயக்குநர் முத்தையாவின் டிரேட்மார்க் முத்திரைகள்தான் படம் முழுவதும். அதற்கு தோள் கொடுத்திருக்கிறார் கவுதம் கார்த்திக்.
சினிமா முரசத்தின் மார்க்குகள். 3 / 5