ஜூனா பிக்சர்ஸ் படநிறுவனம் தயாரிப்பில், ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தின் படபிடிப்பு முற்றிலும் முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அமானுஷ்ய சக்தியைப் பற்றிய பரபரப்பான திரைக்கதையை கொண்ட இப்படத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லின் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா, அனிதா ரெட்டி, மைம் கோபி முதலானோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து, இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் பேசும்போது,
‘‘ஹிப்னோதெரபி” யை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. ஏற்கெனவே பாபா, சந்திரமுகி அந்நியன், அனேகன் உட்பட பல படங்களில் ஹிப்னா தெராபி விஷயத்தை காட்டியுள்ளனர்.. என்றாலும் இப்படத்தின் கதைக்களம் முற்றிலும் புதுசு. எனது நண்பர் ஒருவரின் மனைவி வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை இது. தமிழ்த்திரையுலகில் இதுபேய் படங்களின் காலம்! ஆனால் இதுவரை வெளியான பேய் படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். கருவிலியே இறந்து போகும் ஒரு குழந்தையின் ஆத்மா தனது அப்பா, அம்மாவை தேடும் படலம் தான் படத்தின் மைய கரு! அதை சென்டிமென்ட், திகில் கலந்து வித்தியாசமாக சொல்லியிருக்கிறேன். இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தித் திரைப்படங்களை மட்டுமே வாங்கி வெளியிட்டு வந்த ஆரா நிறுவனத்தின் உரிமையாளர் மகேஷ்! இவர் இந்த படத்தை பார்த்ததும், இப்படத்தை நானே வெளியிடுகிறேன் என்று சொல்லி இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ளார். அவர் தனது முதல் தமிழ் திரைப்பட வெளியீடாக இப்படத்தை விரைவில் உலகம் முழுக்க வெளியிட இருக்கிறார்’’ என்கிறார்.