தமிழ்ச்சினிமாவில் முதல் டெக்னிக் கலர் படம் வீரபாண்டிய கட்டபொம்மன். கம்பளத்தார் வழியாகத்தான் இவரின் பெயர் பிரபலமாகியது. அந்த காலத்தில் விடிய விடிய நடந்த நாடகங்களில் கட்டப்பொம்மனும் ஒன்று.
இந்த கட்டப்பொம்மனை சினிமாவுக்கு கொண்டு வரவேண்டும் என்கிற ஆசை அந்த காலத்தில் பலருக்கு இருந்தது.
பிரபல தயாரிப்பாளரான எஸ்.எஸ்.வாசனுக்கும் இருந்தது. கட்டபொம்மன் தொடர்பான ஆராய்ச்சி குறிப்புகள் இருந்தால் அதை தங்களின் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு பத்திரிக்கை செய்தி அனுப்பியிருந்தார்.
செல்வம் பிக்சர்ஸ் என்கிற நிறுவனம் கட்டபொம்மன் திரைப்படத்தை தயாரிக்கப்போவதாக அறிவித்தது. அந்த காலத்தில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்த புதுக்கோட்டை உலகநாத பிள்ளை சின்னப்பாவை கட்டபொம்மனாக நடிப்பார் என அறிவித்தது. பி.யூ.சின்னப்பா பாட்டுப்பாடி நடிக்கத் தெரிந்தவர். வாட்சண்டைகளிலும் வல்லவர்.கண்ணகியில் கோவலனாக நடித்தவர் .மது அருந்தக்கூடியவர்.
அன்றும் சரி இன்றும் சரி மதுப்பழக்கம் இல்லாத நடிக, நடிகையர் மிகச் சிலரே! விரல் விட்டு எண்ணி விடலாம்.
மதுப்பிரியர்களுக்கு ஜானிவாக்கர் என்பதுதான் பிராண்ட் நேம்.அந்த காலத்தில் மிகவும் பிரபலம். 555 சிகரெட் டப்பா டப்பாவாக வாங்கி வைத்திருப்பார்கள்.காஸ்ட்லியான சிகரெட். இந்த மதுவாலும் சிகரெட்டாலும் உடல் கெட்டு உயிர் இழந்தவர்களில் சினிமா பிரபலங்களும் அடங்குவர்.
சரி மேட்டருக்கு வருவோம்.!
கட்டபொம்மன் படத்தை கைவிடச்சொல்லி எஸ்.எஸ்.வாசனை சிவாஜி கணேசன் கேட்டுக் கொண்டதாக ஒரு பத்திரிக்கை செய்தி உண்டு. ஆனால் இதை மறுத்தவர்களும் இருக்கிறார்கள். சிவாஜிக்கு நடிப்பதற்கு ஜெமினி நிறுவனம் வாய்ப்புத் தராததால் கட்டபொம்மனை எடுக்க சிவாஜி விடவில்லை என்பதாக சொன்னார்கள்.அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது.
நடிகர் திலகம் சிவாஜியும் வசனகர்த்தாவுமான சக்தி கிருஷ்ணசாமியும் காரில் கயத்தாறு வழியாக சென்றபோது கட்டபொம்மன் தூக்கிலிட்ட இடத்தை இறங்கிச்சென்று பார்த்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.
பின்னர் அந்த இடத்தில் கட்டபொம்மன் நினைவுச்சின்னம் அமைத்தவர் நடிகர்திலகம்.இன்று அந்த சிலை எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.
“நாம்ப கட்டபொம்மனை திரைக்கு கொண்டு வரலாமே, பந்துலுக்கும் ஹெல்ப் பண்ணிய மாதிரி இருக்கும்” என்று சிவாஜி அந்த நேரத்தில் சொன்னதை கிருஷ்ணசாமியும் ஏற்றுக்கொண்டார்.
தயாரிப்பாளர் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவுக்கும் சம்மதம்.
கேரக்டர்களில் யார் யாரை நடிக்க வைப்பது என்பதில் முடிவாகிவிட்டாலும் வெள்ளையத் தேவன் கேரக்டரில் நடிப்பதற்கு ஜெமினி கணேசன் மறுத்து விட்டார்.
கேரக்டர் பிடிக்காமல் மறுக்கவில்லை.எஸ்.எஸ்.ஆர் .நடிக்கவிருந்த கேரக்டர்.அவர் வேறு படத்துக்குப் போய் விட்டார். அவரிடம் இருந்து லெட்டர் வாங்கி வாருங்கள் என ஜெமினி சொல்ல அந்த கடிதமும் வாங்கி வரப்பட்டது.
ஆனாலும் அந்த நேரத்தில் மனைவி சாவித்திரிக்கு நிறைமாதம். சாவித்திரியை விட்டு ஜெய்ப்பூர் செல்ல அவருக்கு விருப்பமில்லை.ஆனாலும் பல முயற்சிகள் !
“அண்ணன் பேசுறன்மா. மாப்ள நடிக்க மாட்டேங்கிறான். சொல்லு தாயி!”என்று சாவித்திரியிடம் சிவாஜி சொன்ன மறு நிமிடமே கணவனிடம் போனில் பேசினாராம் சாவித்திரி.
“அண்ணன் கூப்பிடுறார்.போயிட்டு வாங்க.நான் பத்திரமாதான் இருக்கேன்” என்று சாவித்திரி சொன்ன பிறகு தான் ஜெமினி ஒத்துக்கொண்டார் என்பது உண்மை.
இப்படி இருந்தவர்கள்தான் காலப்போக்கில் பிரிந்து வாழ வேண்டியதாகி விட்டது.
“வீட்டை விட்டு வெளியே போங்கள்”என்று சாவித்திரி சொல்லி விட்டார் .” துடித்துப்போனேன் “என்கிறார் ஜெமினிகணேசன்.அது பெரிய தனிக்கதை.
மறுபடியும் கதை வேறு மாதிரி போகப்பார்க்கிறது. கட்டபொம்மன் விஷயத்துக்கு வருவோம்.
கட்டபொம்மன் மிகப்பெரிய வெற்றியை தந்தது பந்துலுவுக்கு!
1959 மே மாதம் 10-ம் தேதி லண்டனில் கட்டபொம்மன் பிரிமியர் ஷோ. இதன் பின்னர் ஆறு நாள் கழித்துதான் தமிழகமெங்கும் கட்டபொம்மன் ரிலீஸ் ஆகியது.
ஆப்பிரிக்க – ஆசியாவின் திரைப்படவிழாவில் கட்டபொம்மனுக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன.அப்போது அதிபராக இருந்தவர் நாசர்.
முதன் முதலாக வெளிநாட்டில் பரிசு வாங்கும் பெருமை தமிழுக்கு கிடைத்தது. நடிகர் திலகம் சிவாஜிகணேசன்,இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் இருவரும் பரிசுக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த விழாவுக்கு படத்தில் நடித்தவர்களில் முக்கியமானவர்கள் கெய்ரோவுக்கு சென்றார்கள். பத்மினி,ராகினி சகோதரிகளும் சென்றனர்.
விமான நிலையத்தில் பத்மினி நிறுத்தி வைக்கப்பட்டார்.! அவரிடம் மருத்துவ சோதனை செய்யப்பட்ட அனுமதிச்சீட்டு இல்லை. இதனால் அவரை குவாரன்டைனில் அடைத்து விட்டார்கள். எகிப்துக்குள் சென்றால் நோயைப் பரப்பிவிடுவார் என்கிற அச்சம். அவரை யாரும் பார்ப்பதற்கு அனுமதியும் இல்லை..
பத்மினியைக் காணோமே என்கிற பரப்பு, சிவாஜி எல்லோரையும் கேட்கிறார் “பப்பிமா எங்கே?”
ராகினி சொல்லித்தான் தெரிகிறது பப்பி குவாரன்டைனில் இருப்பது.!
தமிழர்கள் புத்திசாலிகள் அல்லவா!
“நீயும் பப்பியும் ஏறத்தாழ டிவின்ஸ் மாதிரிதான். கண் தெரிகிற மாதிரி பர்கா போட்டுக்கிட்டுப் போய் பார்த்து எப்படியாவது வெளியே பப்பியை அனுப்பி வச்சிரு”என ஒருவர் கதை சொல்லி அனுப்ப ராகினியும் போனார்.
ஆனால் பாச்சா பலிக்கவில்லை. நெடிய விவாதத்துக்குப் பின்னர்தான் குவாரண்டைனுக்குள் செல்ல முடிந்தது. இருவரும் பாத்ரூம் பெர்மிஷன் வாங்கிகொண்டு டிரஸ்களை மாற்றிக் கொண்டு பப்பி வெளியே வந்து விட்டார் ராகினி உள்ளே இருந்து விட்டார்.மிகவும் ரிஸ்க்கான வேலை .எனார்லும் சகோதரிகள் வெற்றிகரமாக முடித்து விட்டார்கள்.
நம்ம ஆட்கள் எப்படிப்பட்ட சீன்கள் எடுத்தவர்கள் ,அவர்களிடமா பலிக்கும்?
பெண் என இரக்கப்பட்டு எகிப்து அதிகாரிகள் அனுப்பி வைத்தால் சகோதரிகள் ஆள் மாறாட்டம் செய்து வெளியில் வந்தது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா?சரி முடிந்துபோன விஷயம் .அதைக் கிளறுவானேன்?
இன்னும் இரண்டு நாட்களில் அடுத்த பதிவு. ஸ்ரீ பிரியா கோவில் மண்டபம் கட்டியது ஏன்?
—தேவிமணி