தர்மபிரபு முன்னோட்ட விழாவுக்கு கூட்டத்தை அதிகம் எதிர்பார்க்கவில்லை.அமாவாசை,வெயில்,என எதையும் பொருட்படுத்தாமல் பெரிய ஹீரோவுக்கு வருகிற அளவுக்கு கூட்டம் வந்திருந்தது. ஹீரோவாக நடித்திருக்கிற யோகிபாபுவும் மனம் விட்டுப்பேசினார்.
அம்மாவாக நடித்திருக்கும் நடிகை ரேகா பேசுகையில் “யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிப்பதற்கும் ஆசை” என்றார்.
இயக்குநர் திருமலை பேசும்போது,
தர்மபிரபு படம் பற்றி திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கேட்கும் கேள்வி குழந்தைகளுக்கு ஏற்ற படமாக இருக்குமா என்பது தான். சமூகத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நகைச்சவையாக கொடுத்திருக்கிறார். அதற்காக யோகிபாபுவைத் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள். ஆங்காங்கே அரசியல் கலந்திருந்தாலும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில்
நான் பார்த்ததிலிருந்தே பி.ரங்கநாதன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். சினிமாவை அதிகம் நேசிக்கக் கூடியவர். ரஜினியைப் பற்றி இப்படத்தில் விமர்சனம் செய்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜஸ்டின் திறமையானவர். அவரை என் படங்களில் இசையமைக்க அழைப்பேன்.”என்று கூறினார்.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது
“. டிக்கெட் விலையில் மாற்றம் செய்ய அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கோரிக்கை விடுத்தாலே போதும். ஆனால், யாரை அழைத்துக் கொண்டு பேசுவது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் அனாதையாக நிற்கிறோம். இந்நிலைமைக்கு முறையான முயற்சி செய்யாமல் இருப்பதுதான் காரணம். தமிழ் ராக்கர்ஸ், டிக்கெட் விலை ஏற்றம் போன்ற பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம்.
‘தர்ம பிரபு’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பார்த்ததும் இப்படத்தை இழந்துவிட்டோம் என்று அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொறாமை ஏற்பட்டிருக்கும். யோகிபாபுவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இயக்குநர் முத்துகுமாரின் முகபாவனை நன்றாக இருக்கிறது. அவரும் நடிக்கலாம். இதுவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நகைச்சுவை நடிகர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏன் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பதை புரிந்துக் கொண்டு இனிமேல் வருபவர்கள் அந்த தவறை சரிசெய்துக் கொள்ள வேண்டும்.
யோகிபாபு பேசும்போது
“இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி கூறி, இப்படத்தில் நடிப்பீர்களா? தேதி கிடைக்குமா? என்று முத்துக்குமார் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அதே சமயத்தில் ‘குர்கா’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன். யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாக செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
முதலில் மேக் அப் போட்டதும் யாருக்கும் திருப்தி ஏற்படவில்லை. ரேகா தான் கூறினார், இந்த கெட் அப் போட்டாலே திமிர் தானாக வந்துவிடும். அதேபோல் தான் நானும் உணர்ந்தேன். சில இடங்களில் நான் பேசும் வசனங்களைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் பயந்திருக்கிறார்கள். என் வாழ்க்கையில் காலம் கடந்து இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை‘, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் இப்படமும் அமையும். விரைவில் நானும், ரேகாவும் இணைந்து நடிப்போம்.
நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள்”என்றார்.