‘அகோரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ் ,நடிகை கஸ்தூரி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர். பி .பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி ’.
நடிகர் மைம் கோபி, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி. ஜி. முத்தையா, , படத்தின் தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான ஆர் பி பாலா, இணை தயாரிப்பாளர் சுரேஷ் கே மேனன், இயக்குநர் .ராஜ்குமார் , ஒளிப்பதிவாளர் வசந்த், நடிகர்கள் சித்து, வெற்றி, கார்த்திக், ஷரத், விளம்பர வடிவமைப்பாளர் பவன் மற்றும் சண்டை பயிற்சியாளர் டேஞ்சர் மணி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் ஆர் .பி . பாலா பேசுகையில்,“
பாரதியார் படத்திற்கு பிறகு நடிகர் ஷாயாஜி ஷிண்டே இந்த படத்தில் அகோரியாக டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார். அவர் இந்தப்படத்தில் அகோரியாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். இந்த படத்தைத் தொடங்கும்போது சிறிய பட்ஜெட்டில் தொடங்கினேன். ஆனால் படத்தின் கதை மற்றும் தரத்திற்காக கூடுதலாகச் செலவு செய்து சிறப்பாக எடுத்து இருக்கிறேன். இதற்காக எனக்கு உதவியாக இணைந்த இணை தயாரிப்பாளர் சுரேஷ் கே மேனன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இன்றைய தேதியில் ஒரு படத்தைத் தொடங்கும் போது தயாரிப்பாளர் காரில் வந்து இறங்குவார். படம் வெளியீட்டின் போது அவர் சாலையில் நடந்து செல்வார். இதுதான் இன்றைக்கு தயாரிப்பாளர்களின் நிலைமை. இதனை நன்கு உணர்ந்து கொண்டதால், பொறுமையாகவும், சிக்கனமாகவும் திட்டமிட்டு இந்தப் படத்தை நிறைவு செய்து இருக்கிறேன்.” என்றார்.
சிறப்பு விருந்தினர் இயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில்,
” தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்தக் கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஆனால் இங்கே பேசிய கஸ்தூரி ஒரு ஏதோ ஒரு முடிவுடன் தான் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களைப்பற்றியும் தெளிவாகவும், அழகாகவும் எடுத்துரைத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
தயாரிப்பாளர் பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிபர் ‘ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள். நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். தாணுவின் வெளியீட்டில், ராம்சரண் நடித்த ‘மகதீரா’ என்ற படத்திற்கு மட்டும் தான் நான் தமிழில் வசனம் எழுதினேன். இதுவரைக்கும் நான் நேரடியாகத்தான் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறேன். மொழிமாற்று படங்களுக்கு எழுதியதில்லை. இதை ஒரு அனுபவமாக எண்ணி எழுத சம்மதித்தேன். அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன.
அம்மா என்ற வார்த்தை எல்லாம் மொழியிலும் ஒன்றாகத் தான் இருக்கும். ஆனால் தெலுங்கில் அப்பாவுக்கு ‘நானா’ என்று அழைப்பார்கள். இதை எப்படி தமிழ் படுத்துவது என்று தெரியாமல் கஷ்டப்பட்டேன். இந்த தருணத்தில் தான் டப்பிங் பட வசனகர்த்தாக்கள் படும் சிரமத்தை உணர்ந்தேன். அதன் பிறகுதான் டப்பிங் படத்திற்கு வசனம் எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
‘அகோரி ’படத்திற்கு இந்த டைட்டில் பெரிய பிளஸ். சில விஷயங்களைப் பற்றி பலர் எவ்வளவு பேசினாலும் நாம் அதைக் கேட்டுக் கொண்டே இருப்போம்.
பேயைப் பற்றி பலர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். எனக்கு மட்டும் ஒன்றே ஒன்று தோன்றும். பேய் இருப்பது உண்மை என்றால், இந்த நாட்டில் போலீஸ் ஸ்டேஷன் என்பது இருக்காது. ஒருவரைக் கொலை செய்து விட்டால், அவர் பேயாக வந்து பழிக்குப் பழி வாங்கி கொன்றுவிடுவார். ஆனால் தற்போது கொலையாளியைப் போலீஸ்காரர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பேய் என்பது இல்லை என்று என்பது உறுதியாகிறது. ஆனால் பேய் வந்து பழிவாங்குகிறது என்று ஒரு கான்செப்ட் தற்போது மக்களால் ரசிக்கப்படுகிறது.
பேய் பற்றி அப்படி ஒரு படம் எடுத்தால், மக்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். பேய் போல தான் அகோரியும் இருக்கும் என்று நினைத்தேன். அதனுடைய ஒலி கூட எதிர்மறையாக இருந்தது. நமக்கு பைரவா என்றால், வில்லத்தனம் செய்யும் மந்திரவாதி நினைப்பு தான் வரும். ஆனால் தெலுங்கில் ஹீரோவிற்கு பைரவா என்று பெயர் வைக்கிறார்கள்.’ மகதீரா’ ஹீரோவிற்கு பைரவா என்று பெயர் வைத்திருப்பார்கள். அது தமிழில் மொழிமாற்றம் செய்யும் போது ‘பார்த்திபா’ என்று உச்சரிப்புடன் பொருத்தமாக வசனத்தை எழுதி இருப்பேன். இந்த ‘பைரவா’வை ‘பார்த்திபா’வாக மாற்றுவதற்கு பெரும் போராட்டமாக இருந்தது.
அகோரி என்பதை நான் நெகட்டிவ் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் அதனை பாசிட்டிவாக காட்டியிருப்பதாக நினைக்கிறேன்.அகோரியை பற்றி எத்தனை பேர், எத்தனை வகையில் கதை சொன்னாலும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருப்போம். . இந்த படம் வெற்றியைப் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
இவ்விழாவில் படத்தின் டிரைலரை கே பாக்யராஜ் வெளியிட, நடிகை கஸ்தூரி பெற்றுக்கொண்டார்.