தமிழகத்தில் எதுவும் நடக்கலாம்.
ஏனெனில் மக்கள் அப்படி! அவர்களுக்கு இன்னும் யாருக்கு ஓட்டுப்போடுவது என கணிக்கவே தெரியவில்லை.
காசு எவன் அதிகமாக கொடுக்கிறானோ அவனுக்கு ஓட்டுப் போடுகிற நன்றி உணர்வு அவர்களுக்கு இருக்கிறது.
டாஸ்மாக்கை மூடி விட்டால் சரக்கு கிடைக்காதே என்கிற அச்ச உணர்வு காரணமாக ஓட்டுப்போடுகிற குடிகாரர்கள் இருக்கிறார்கள்.
அதனால்தான் தமிழகத்தில் எதுவும் நடக்கலாம்.
சின்னத்தைப் பார்த்து ஓட்டுப்போடுவது ஊறிப்போன விஷயம்.அவன் நல்லவனா கெட்டவனா என பார்ப்பதில்லை.
பின்னர் கோடீஸ்வரனாகி விட்டான் இத்தனை கார் எப்படி வாங்க முடிந்தது ?அவனுக்கு எத்தனை பங்களாக்கள் என எண்ணி பெருமூச்சு விடுவது…இதுதான் வாக்காளனின் மனப்பான்மை.
அதனால்தான் தமிழகத்தில் எதுவும் நடக்கலாம்.
ஆனால் தலை தூக்கும் எவரும் கலைஞராகவோ,மக்கள் திலகமாகவோ ,புரட்சித் தலைவியாகவோ, சசிகலாவாகவோ ஆக முடியாது.
ஜெ.சோதிடரை பார்த்தார், கும்பகோணம் அருகில் இருக்கிற பிரத்யங்கரா கோவிலில் ஆயிரம் மூடை மிளகாய் வற்றலை யாகமிட்டார் .ஆகவே நாங்களும் ஜோதிடம் பார்ப்போம் கோவில் போகிறோம் ,ஆட்சியை பிடிப்போம் என்று கிளம்பினால் அவர்களால் வத்தல் வடாம் கூட போட முடியாது.
நயன்தாரா அரசியலுக்கு வருவது பற்றி காஞ்சிபுரத்தில் ஜோதிடரைப்பார்த்தார்,அவரும் வரலாம் என பச்சைக்கொடி காட்டிவிட்டார்.ஆனால் வெயிட் பண்ண சொல்லி இருக்கிறார் என பிரபல இணைய தளத்தில் கட்டுரை வந்திருக்கிறது. எழுதியவர் ஏனோ தானோ ஆள் இல்லை. சூப்பர் ஸ்டாரின் அன்பினை பெற்றவர்களில் அவரும் ஒருவர்.
சூப்பர் ஸ்டாருடன் நயன்தாரா நடித்து வருகிற நேரம் பார்த்து இந்த கட்டுரை வந்திருக்கிறது.
நயனால் தனிக்கட்சி ஆரம்பித்து கொடியைக் கூட ஆட்ட முடியாது என்பது கோமாளிக்கும் தெரியும்.
ஆனால் ஒரு கட்சியில் இணைந்து செயலாற்ற முடியும் அல்லவா?
அந்த கட்சி ஏன் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியாக இருக்கக் கூடாது?
அந்த கட்சியில் நயன்தாராவினால் கொ.ப.செ. ஆக முடியுமே!
ரஜினியினால் தேர்தல் காலங்களில் ஊர் ஊராக சுற்றுவதற்கு டாக்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள். குறிப்பாக திருவாட்டி ரஜினி காந்த் அனுமதிக்க மாட்டார்.
அந்த குறையை நயனால் போக்க முடியுமா இல்லையா?
லட்சக்கணக்கில் கூட்டத்தை சேர்க்க முடியுமா, முடியாதா ?
மருமகன் தனுஷ் ஒரு பக்கம், நயன் இன்னொரு பக்கம் என தமிழ்நாட்டை அலசிக் காயப்போட்டுவிட மாட்டார்களா ?
யோசித்துப் பாருங்கள்.!
ரஜினியின் கட்சி தொடங்குவதற்கு முன்னர் தமிழ் நாட்டின் மருமகளாக நயன் மாறிவிட்டால் வாய்ப்பு இருக்காதா?
இப்படியும் யோசியுங்கள் .
—தேவிமணி.