அதர்வா,ஹன்சிகா,மகேஷ் ,ராதாரவி,யோகிபாபு, மைம் கோபி, ஆடுகளம் நரேன். பிரானஷ் ,ஹரிஜா,சீனுமோகன் (மறைந்த.)
இயக்குநர் :சாம் ஆண்டன்,ஒளிப்பதிவு :கிருஷ்ணன் வசந்த், இசை: சாம்.சி.எஸ்.ஸ்டண்ட்: திலிப் சுப்பராயன் ,தயாரிப்பு:காவியா வேணுகோபால்,
****************************************
அதாகப்பட்டது மக்களே, போலீஸ் அதிகாரியாக வேண்டும் ,குற்றவாளிகளை துவம்சம் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்ட துடிப்பான அதர்வாவை கண்ட்ரோல் ரூமில் கட்டிப்போட்டால என்னாகும் என்பது ஒன் லைன்.!இதை வைத்து சாம் ஆண்டன் பின்னியிருக்கிற கடத்தல் சம்பவங்கள்தான் விரிவான கதை.
கடமை,கண்ணியம் கட்டுப்பாடுடன் போலீசை இருக்க விடுவதில்லை என்பதற்கு அன்வராக வருகிற மகேஷும், இருக்க முடியும் என்பதற்கு சத்யாவாக வாழ்கிற அதர்வாவும் இரு துருவமாகி கதையைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதர்வா நேர்மை என்றால் நல்லவரான மகேஷ் சூழ்நிலையால் சமுதாய விரோதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். அவர்களுக்கிடையில் முரண்பாடு எப்படி வருகிறது என்பது திரைக்கதை.
பொதுவாக வருகிற எல்லாப்படங்களிலுமே லாஜிக் பற்றாக்குறை சர்க்கரை வியாதி மாதிரி இருக்கிறது. .100 மட்டும் விதி விலக்கா என்ன?.!அந்த காலத்தில் இருந்தே ஏழுகடல் ஏழுமலைதாண்டிய கதைகளை சொல்லி ‘ஜீனில் ஏற்றி விட்டார்கள். லாஜிக் மீறல் இல்லை என்றால் அது ஆர்ட் பிலிம் ஆகி விடுகிறது.அதனால் கண்ட்ரோல் ரூமில் இருந்து ஒரு அதிகாரி வெளியில் போய் குற்றவாளிகளை போட்டுத்தள்ள முடியுமா என்றெல்லாம் பார்க்க கூடாது.
அதர்வாவின் உயிர் நண்பரான போலீஸ் அதிகாரி மகேஷ் போதை கும்பலின் கையாளாகி விட்டார் என்பது தெரிந்த சங்கதிதான்.ஆனால் இயக்குநர் சாம் ஆண்டன் இருவருக்கும் வைத்திருக்கும் டிவிஸ்ட்கள் நம்மை பதை பதைக்க வைக்கிறது. போலீசில் லஞ்சம் என்பது தேசிய மயமாகி விட்டது என்பதை இந்த படத்திலும் சொல்கிறார்கள்.
பொள்ளாச்சி போதைமன்னர்களைப் போல இதிலும் காட்சிகள் இருக்கிறது.கண்டவுடனேயே கண்டதுண்டமாக வெட்டிப்போட வேண்டும் என்கிற வெறி வராமல் இல்லை.
துடிப்பான போலீஸ் அதிகாரிக்கான வேகமும் விவேகமும் 100 சதம் அதர்வாவுக்கு பொருந்துகிறது. திலிப் சுப்பராயனின் ஸ்டண்ட் காட்சிகள் செமையாக இருக்கின்றன.இதற்கான பின்னணி இசையில் தனிக்கவனம் செலுத்தி இருக்கிறார் சாம் சி.எஸ்.
கிருஷ்ணன் வசந்தின் கேமராவுக்கு ஆந்தைக்கண்.இரவின் பயத்தையும் பரவசமுடன் காட்டுகிறது.
மகேஷின் எதிர்பாராத முடிவுக்கு இரக்கப்பட முடியவில்லை.சரியான தண்டனைதான்.
பிஸ்டல் பெருமாள் ராதாரவியின் மனக்குறையை அவரது கடைசி நேரத்தில் அதர்வா தீர்த்து வைப்பது சிறப்பு. நடிக்கத் தெரிந்தவனை ஒதுக்கிவிட முடியாது என்பதற்கு ராதாரவி உதாரணம்.
ஹன்சிகாவுக்கும் அதர்வாவுக்கும் சற்றும் பொருந்த வில்லை. ஹன்சிகாவின் முகத்தில் தளர்ச்சி தெரிகிறது. நல்லவேளை அளவோடுதான் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அண்மைக்கால காமடி ஸ்பெஷலிஸ்ட் யோகி பாபுவும் போலீஸ் ஆபீசர் .பம்பைத் தலைக்கு ஏதாவது காரணம் பொருந்தும்படி சொல்லி இருக்கலாம்..போதைப் பொருளுடன் பெண்களையும் சாமர்த்தியமாக கடத்தும் சீனு மோகனும்,அதை எதிர்க்கும் மைம் கோபியும் மனதில் நிற்கிறார்கள்.
அவசரப் போலீஸ் எண் 1௦௦ ஐ.தவறாகப் பயன்படுத்தும் போக்கிரிகள் இனியாவது திருந்துவார்களா?காமடிக்காக பயன்பட்டிருந்தாலும் சற்று இடிக்கத்தான் செய்கிறது.
100க்கு 65 மார்க் கொடுக்கிறது சினிமா முரசம்.