வசனம்,இயக்கம்; வெங்கட்மோகன் ,இசை; சாம்.சி.எஸ், ஒளிப்பதிவு;கார்த்திக்,
விஷால்,ராஷி கன்னா கே.எஸ்.ரவிகுமார் ,ஆர்.பார்த்தீபன், எம்.எஸ்.பாஸ்கர்,ராதாரவி,பூஜா தேவரியா,யோகிபாபு,
*******************************
புத்திசாலியான வில்லன்களை எதிர்ப்பதற்கு கதாநாயகன்கள் கெட்டவன்களைப் போல நடிப்பார்கள். அப்படித்தான் இதிலும் இன்ஸ்பெக்டர் கர்ணன் அயோக்யனாக நடித்து கொம்பாதி கொம்பன் கலைராஜனை சல்லி வேருடன் அழிக்க நாடகமாடுகிறான் என நினைக்காமல் படத்தைப் பார்க்க முடியவில்லை.!
ஆனால் நி…..ஜ…மா…க,,,வே,,,கர்ணன் கேடு கெட்ட அயோக்யன் சார்! கர்ணனாக விஷால்.! 95 சத விகித காட்சிகளில் யூனிபார்ம் இல்லாமலேயே வருவதால் அந்த கேரக்டரின் உண்மைத்தன்மையை வலியுறுத்தியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் மோகன். அக்கட தேசத்தின் கதை. நம்ம தேசத்துக்கு சூட் ஆவதற்கு காரணம் கேரக்டர்களுக்குரிய நடிகர்கள் தேர்வும்தான்.
கே.எஸ்.ரவிகுமார் ஆர்.பார்த்தீபன், எம்.எஸ்,பாஸ்கர் மூவரில் எவர் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு போட்டியே வைக்கலாம்.
லாஜிக் ராசிக்காரர்களே…உங்கள் மூக்கு அடிக்கடி வேர்க்கும் அளவுக்கு மீறல்கள் இருக்கின்றன.ஆனால் அவையெல்லாம் ஒரு நல்ல காரியத்துக்குத்தான் என்பதால் பொங்கி வழிந்து விடாதீர்கள்.காந்தியை மையப்படுத்தி முதன்முறையாக தமிழில் ஒரு ஆக்ஷன் மூவி வந்திருக்கிறது.!
பூஜா தேவரியாவை வைத்திருந்து பலவகைகளில் அனுபவித்து,அதாவது கத்தியால் கீறி,பிறப்புறுப்பில் மிதித்து, அக்னி திராவகம் ஊற்றி படு கொலை செய்த பஞ்சமா பாவிகளான தனது நான்கு தம்பிகளை காப்பாற்ற அயோக்ய இன்ஸ்பெக்டர் விஷாலுக்கு கோடிகளை கொட்டிக் கொடுக்கவும் தயங்காதவர் அண்ணன் பார்த்தீபன்.
தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா என்பதுதான் கதை.!அந்த நான்கு தம்பிகளுடன் விஷாலும் தூக்கில் தொங்குவதுதான் துணிகரமான கிளைமாக்ஸ்.ஆனால் இந்திய அரசியல் சட்டம் இடம் தருமா என்ன? இயக்குநரை கைகுலுக்கி பாராட்டலாம் கோர்ட்டு சீன் வசனங்களுக்காக! செருப்படி !பொள்ளாச்சி காமக்கொடூரன்களுக்கு இதே மாதிரியான தண்டனை உடனடியாக கிடைக்குமா?
விஷால் வித்தியாசமான வேடத்தில் என ஒற்றை வரியில் சொல்லி விடலாம். ஆனால் பூஜா தேவரியாவை நினைத்து நினைத்து அக்னியாக பொங்கும் இடங்களில் புது பிராண்ட் விஷால்.! பார்த்திபனின் எடக்கும் விஷாலின் மடக்கும் யுத்தியில் தியேட்டரில் கிளாப்ஸ்களை அள்ளுகிறார்கள்.
ரவிகுமார் மாதிரியான நல்ல போலீஸ்காரர்களுக்கு இந்திய சினிமாவில் தாது வருடப் பஞ்சம் மாதிரி! சிறந்த நடிகர் என்பதால்தான் அவரால் உலகநாயகர்களை ஆட்டி வைக்க முடிகிறது.
பார்த்தீப அவதாரங்களில் கலைராஜ அவதாரம் பேசப்படும்.
இரண்டாவது எஸ்.வி.சுப்பையாவாக எம்.எஸ்.பாஸ்கர்.
சிந்துவாக ராஷிகன்னா.அழகு.ஒப்பிட்டால் பூஜா தேவரியா நடிப்பில் சிறப்பு. விமான நிலையத்தில் அவர் ஆவேசப்படுவதைப் பார்க்கும் நமக்கே நாலு பேரையும் போட்டுத்தள்ளுகிற அளவுக்கு ஆத்திரம் வருகிறது.
ஜட்ஜாக ராதாரவி. வருவது நிமிடங்களே என்றாலும் வெகு இயல்பு.துர்-மந்திரி, வேஷத்துக்காகவே சந்தான பாரதி.
படம் முடிகிற கட்டத்தில் சுனாமி வேகத்தில் காட்சிகள் பறக்கின்றன.
எடிட்டர் ரூபன். பெரிய கத்திரி கிடைக்கவில்லை போலிருக்கிறது.
அயோக்யா பார்க்கலாம்.
சினிமா முரசத்தின் மதிப்பெண். 2.5 / 5