கிட்டத்தட்ட 67 வருடங்கள் ஆகிப்போச்சு, நடிகர்களுக்கான சங்கம் தொடங்கி!
1952-ல் நடிகர்கள் ஆர்.எம்.சோமசுந்தரம், டி.என்.சிவதாணு, என்.என்.கண்ணப்பா ,சட்டாம் பிள்ளை வெங்கட்ராமன் ஆகியோரது முயற்சியினால் நடிகர்களுக்கு ஒரு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு பெயர் துணை நடிகர் சங்கம்.
காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் முயற்சியினால் சவுத் இந்தியன் ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டபோது எம்.ஜி.ஆர்,, என்.எஸ். கிருஷ்ணன்,டைரக்டர் கே.சுப்பிரமணியம்,ஆகியோர் பெரும் துணையாக இருந்தார்கள்.
“நடிகர்களில் வேறுபாடு பார்க்கவேண்டாம். பிரிக்க வேண்டாம்.அதனால் நடிகர் சங்கம் என்கிற பெயரே இருக்கட்டும்”என எம்.ஜி.ஆர்.கேட்டுக்கொண்டதற்கு இணங்க அப்படியே பெயரிடப்பட்டு பின்னர் தென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற பெரிய அமைப்பு உருவாகியது.
பி.எஸ் சரோஜா என்கிற நடிகை 1௦௦ கொடுத்து முதலில் ஆயுட்கால உறுப்பினராகினார் .அதன் பின்னர் எம்.ஜி.ஆர்.1000 கொடுத்தார். அந்நாளில் சங்கம் இயங்குவதற்காக நிதிகள் கொடுத்தவர்களில் டி.வி.சுந்தரம், எம்.ஜி.ஆர் .இருவரும் முதன்மையானவர்கள்.
இந்த பெருமை மிகு சங்கத்தில் நான்கு மாநிலத்தின் உச்ச நட்சத்திரங்களும் அமைப்பு ரீதியான உறுப்பினர்களாக இருந்தார்கள்.
தென்னிநிதிய நடிகர்கள் சங்கத்துக்கு “ஏக இந்தியா”வுக்கான பெருமையைப்போல தனிப்பெருமை உண்டு.!
” யாதும் ஊரே ,யாவரும் கேளிர் “என்ற மூத்தத் தமிழ்ப் புலவன் கணியன் பூங்குன்றனின் முழக்கத்தின் அடிப்படையில் நடிகர் சங்கம் இயங்கி வருகிறது.
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை “தமிழ் நடிகர் சங்கம் “என்பதாக மாற்றவேண்டும்” என்று உச்ச நடிகர் ரஜினிகாந்த் சொன்னதை சன் தொலைக்காட்சியில் நினைவுபடுத்தினார்கள்.
இது குழம்பிய குட்டையை மீண்டும் குழப்புவதேயாகும்.!
பேசாத படக் காலத்தில் இருந்து இன்றைய வெப் டிவி.காலம் வரை அண்டை அயல் மாநிலத்தவரே தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்கள். தமிழ்ப்பேச இயலாதவர்களுக்கு டப்பிங் பேசுகிற வசதி இருக்கிறது.
கங்கை காவிரி நதி நீர் இணைப்புப் பற்றி குரல் கொடுக்கிற ரஜினி காந்த் நன்கு ஆலோசித்த பிறகுதான் தமிழ் நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும் என சொன்னாரா என்பது தெரியவில்லை.
ஏன் பெயரை மாற்ற வேண்டும், அதற்கான அவசியம் என்ன, அந்த சங்கத்தின் நோக்கம் என்ன இவைபோன்ற வினாக்களுக்கு அவரிடம் விடைகள் இருக்குமா என்பது தெரியவில்லை. அன்று சொன்ன கருத்தில் ரஜினி இன்றும் உறுதியாக இருக்கிறாரா என்பது தெரியாத நிலையில் சன் டி.வி.மறுபடியும் நினைவு படுத்துவதற்கு என்ன காரணமாக இருக்கும்??
மக்கள் திலகம், நடிகர் திலகம் ,எம்.கே.ராதா, பிரேம்நசீர்,ராஜ்குமார் போன்றோர் கட்டிக் காத்த மரபு உடைபடுமா?
பிற மாநிலத்தவர்கள் தமிழ் பேசி நடிக்கிறார்கள் என்பதால் அவர்கள் தமிழர்கள் என மாறி விடுவார்களா?தமிழைத் தாய் மொழியாக இல்லாதவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் வைத்திருக்கிறாரா ரஜினி?
தற்போதைய சூழலில் புதியவர்கள் பொறுப்பேற்க வருவார்களா என்பது சந்தேகம்தான்.! தற்போதைய நிர்வாகிகளே பதவிக்கு வருவார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.