கதை இயக்கம்: ராஜேஷ் எம். இசை:ஹிப்ஹாப் ஆதி. ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்,
சிவகார்த்திகேயன் ,நயன்தாரா,ராதிகாசரத்குமார்,தம்பி ராமையா ,யோகிபாபு,ஹரிஷா,
இம்சைகள்: ரோபோ சங்கர், சதீஷ்,
பரிதாபங்கள்:ஜான் விஜய்,தாடி பாலாஜி,மாரிமுத்து,
_____________________________________________
தமிழ்நாடுதான் வறட்சி மாநிலம் என்றால் கோடம்பாக்கமும் அதில் ஒடுங்கிவிட வேண்டுமா?
கதாசிரியர் ராஜேஷ் எம். கடுமையான கற்பனை வரட்சியில் அவரது முந்தைய படங்களை பிய்த்துப் போட்டு கதை பண்ணியிருக்கிறார். மன்னனின் ஜாடையும் இருக்கிறது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் கார் மோதல்,ஆட்டோ மோதல்,பைக் மோதலில் காதலை உருவாக்குவார்களோ தெரியவில்லை.!
சிவகார்த்திகேயனுக்கென தனி மாஸ் இருக்கிறது.குடும்பமே கொண்டாடுகிற நடிகர். தனக்கான கதைதானா என நினைத்துப் பார்த்திருக்க வேணாமா? ராஜேஷ் என்றால் வசனத்தில் கடத்திக்கொண்டு போய்விடுவார் என நினைத்து விட்டாரோ என்னவோ! நடப்பு அரசியல் நையாண்டிகளும் உதவவில்லை என்பது சோகம்.
சீரியல் நடிகை நட்சத்திராவுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அம்மா ராதிகாவுக்கு ஆசை. கார் விற்பனை நிலையத்தில் வேலை பார்க்கும் மகன் சிவகார்த்திகேயன் அம்மாவை பைக்கில் கூட்டிக்கொண்டு போகும்போது டி.வி. சீரியல் தயாரிப்பாளர் நயனின் கார் மீது மோத நாயகன் நாயகியின் மோதலும் பயணிக்கிறது.நாயகன் விரும்ப, நாயகி வெறுக்க ,கூடவே நயவஞ்சகம் வில்லங்கம் என சிறை வாசம் வரை போகிறது.
சிவா அவரது கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார். நடனம், சண்டை, எதிரடியாக வசனம் பேசுவது என எதிலும் குறை வைக்க வில்லை. ஆனால் தனித்துவம் என எங்கும் கொடி ஏற்றவில்லையே? நயனுடன் மோதுகிற இடங்களும் ,உறவாடும் இடங்களும் ரசிக்கும்படி இருக்கின்றன.
நயனின் கேரக்டரில் திமிர்,ஆணவம்,காதல், படாடோபம் என எல்லாம் இருந்தும் கீர்த்தனா வாசுதேவன் என்கிற கேரக்டர் முழுமை பெறவில்லையோ என்கிற ஆதங்கம் வருகிறது. அழகு குறையவில்லை.வனப்பில் மட்டும் வாட்டம் தெரிகிறது.காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்.
வெட்டி ஆபிசர்கள் நிறைய!ஜான் விஜய் மாரிமுத்து ,தாடி பாலாஜி போன்றோருக்குப் பதிலாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களைப் போட்டு நிரப்பி இருக்கலாம்.
யோகிபாபு குறைந்த சீன்களே என்றாலும் சிரிக்க முடிந்தது.
ரோபோ சங்கர் சதீஷ் இருவரும் இம்சைகள்.
ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன் உதவியால் கண்களுக்கு குளிர்ச்சி.காட்ராக்ட் ஆபத்து இல்லை. பிரமாண்டங்களை சேதம் இல்லாமல் நமக்கு காட்டியிருக்கிறார்.பாரீஸ் போகவேண்டிய அவசியமே இல்லை என்றாலும் படப்பிடிப்பில் அழகு.!
அப்பா நிம்மதிப்பா என்று சாய்ந்தபடியே இரண்டு பாடல்களை ரசிக்கலாம். மிஸ்டர் லோக்கலு பாடல் சுகம்.
படத்தில் காதலர் சண்டை மட்டுமே கவருகிறது.
சினிமா முரசத்தின் மார்க் 2.5 /5