ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா நடித்துள்ள படம் ஜிப்ஸி. இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.
இவ்விழாவில் நடிகர் ஜீவாபேசியதாவது,
“என்னுடைய வீட்டிலும் நான் ஒரு ஜிப்ஸி மாதிரி தான் சுற்றிக்கொண்டு இருப்பேன். எனது வீட்டிலும் வித்தியாசமான கலாச்சார முறை உள்ளது. எங்க அப்பா ஒரு ராஜஸ்தானி. அம்மா தமிழர். மனைவி பஞ்சாபி. இவர்களுக்கு இடையே தான் நான் வாழ்ந்து கொண்டிருக் கிறேன்.
சாதி, மத, மொழிகளை கடந்த படம் ஜிப்ஸி. இந்த படத்தில் நான் ஒரு சாதாரண மனிதன். இந்தியா முழுவதும் மக்கள் ஒன்று தான். எல்லோருக்கும் ஒரே குணம் தான். இந்த படத்தில் நடித்து முடித்தப் பிறகு நான் வேறு ஒரு மனிதனாக மாறி இருக்கிறேன்.
இன்னைக்கு நம்ம போன் நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளாக நிறைய சினிமா விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஒரே மாதிரியாக பேசி போரடித்துவிட்டது. சமூக போராளி பந்த் சிங்கின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் இந்த விழாவில் வெளியிடப்பட்டது மகிழ்ச்சியான விஷயம்.
பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்தமேடை மிகச்சிறப்பான மேடை. சினிமா விழாக்கள் இப்படி தான் நடக்க வேண்டும் என்பது எனது ஆசை. இதுபோன்ற சமூக போராளிகளை நாம் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும்.
இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப்படம் மூலம் தந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி” என்று பேசினார்.
