“எலி மாமா என்று என்னை அன்போடு அழைக்கிறார்கள்; இன்னும் 10 வருடங்களுக்கு இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன் “என்று மான்ஸ்டர் வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசினார்.
‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் பேசினார்கள்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது
படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன்.
பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இருந்தது. படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சிறிது பதட்டம் இருந்தது. கோடை விடுமுறையில் வெளியாகிறது. அனைவரிடமும் பணம் இருக்குமா என்ற அளவுக்கு யோசிப்பேன். பத்திரிகையாளர்கள் காட்சியை பார்த்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது.”என்றார்.
வசனகர்த்தா சங்கர் பேசும்போது,
“மே மாதம் வெற்றி மாதமாக இருக்கிறது. அரசியலில் எல்லோரும் நான் வெற்றி பெற்றேன் என்று கூறுகிறார்கள். நாங்களும் இப்படம் மூலம் வெற்றியடைந்திருக்கிறோம். டிரிம் வாரியஸ் பிக்சர்ஸ்-ன் நோக்கம் குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. ஏவிஎம்-ற்கு பிறகு இவர்களுக்கு தான் அந்த நோக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். வேறு நிறுவனமும் இருக்கலாம், ஆனாலும் இவர்களை நான் நேரிடையாக பார்க்கிறேன். பெரிய மாதிரி பத்திரிகைகளில் எனது பெயர் வந்ததில் மகிழ்ச்சி.
கதை என்பது ஆத்மா. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பிரம்மாக்கள் தான். ஒரு திரைப்படத்திற்கு மிகவும் முக்கியமானது வசனம் என்று நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திரைப்படம் தான் சரியான தேர்வு.
நல்ல வசனங்களையும், இலக்கியங்களையும் திரைப்படத்தில் கொண்டு வரவேண்டும். அதற்கு நெல்சன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.”என்றார்.
கதாநாயகன் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது,
முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன்.
அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.
இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.
பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர்.
இப்படம் மூலம் என்னை உயரத்திற்கு கொண்டு வந்ததற்கு நெல்சனுக்கும், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கும் நன்றி. இசையும் நன்றாக உதவி புரிந்திருக்கிறது. இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,
ஒரு படத்தை உருவாக்குவதற்கு கதை மட்டுமே என்பதை தாண்டி, எந்த பிரச்னை வந்தாலும், தடையில்லாமல் வெளியாகும் வரை போராட்டம் தான். இதை இயக்குநர் நெல்சன் நன்றாக செய்திருக்கிறார். ஒரு நல்ல படம் திரையரங்கிற்கு செல்வதில் சிரமம் இருக்கும். ஆனால், முதல் கட்டமாக உதவி புரிந்தது பத்திரிகையாளர்கள் தான். முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. சிறிய படங்களுக்கு திரையங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.
ஆனால், இப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதேபோல் தரமான படங்களை கொடுக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.