கோவிலில்ஸ்ரீ பிரியா மண்டபம் கட்டிய கதையைச் சொல்வதாக சொல்லி வாரங்கள் கடந்ததுதான் பலன் மேட்டரையே காணோமே”—
சினிமா முரசம் நண்பர்கள் தொலை பேசி வாயிலாக மனக்குறையை என்னிடம் சொன்னார்கள்.
ஒரு சம்பவத்தை சொல்ல நினைக்கிறபோது இன்னொரு நிகழ்வு கண்களில் படர ஆரம்பித்து விடுகிறது. அவ்வளவுதான்!அதான் தாமதமாகிவிட்டது.
நடிகை ஸ்ரீ பிரியாவும் அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதியும் ஆளுக்கொரு மண்டபம் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
எங்கே?
கும்பகோணத்துக்கு பக்கத்தில் திருக்கருகாவூர் என்கிற ஆலயம் இருக்கிறது.
இந்த ஆலயத்தின் பெருமை என்ன? சென்னையில் இருந்து இங்கு வந்து மண்டபம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?
பொதுவாக தாய்மைப் பேறு என்பது பெண்களுக்கு ஒரு தவம்.
தண்ணீர்ப் படுக்கையில் படுத்து பிள்ளை பெற்றவர்களும் உண்டு.
ஆக இந்த ஆலயத்துக்கு வந்து அம்மனை வேண்டிக் கொண்டால் குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
திருமணம் ஆகியும் நீண்ட காலம் குழந்தை இல்லாத காரணத்தால் கணவர் ராஜ்குமாரும் ஸ்ரீ பிரியாவும் இந்த அம்மனுக்கு வேண்டுதல் வைத்திருக்கிறார்கள்.
“அம்மன் அருளால் அடுத்தடுத்து பெண்,ஆண் இரு மகவுகள். அதனால்தான் மண்டபம் கட்டிக் கொடுத்தேன்.” என்கிறார் ஸ்ரீ பிரியா.
இந்த ஆலயத்துக்கு கைக்குழந்தையுடன் வருகிறவர்கள் ஸ்ரீ பிரியா தானமாக கொடுத்திருக்கும் தங்கத் தொட்டிலில் குழந்தையை அமர்த்தி மண்டப பிரகாரம் சுற்றிதங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
லட்சுமியை நினைவிருக்கிறதா?
இந்தக் காலத்தவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிக அளவில் பத்திரிகையாளர்களுக்கும் தெரிந்திருக்க முடியாது. லட்சுமி,ஸ்ரீ வித்யா,ஸ்ரீ பிரியா, சவுகார் ஜானகி,சரோஜாதேவி ஆகியோர் திரை உலகில் வாழ்ந்த காலத்தை பொற்காலம் என்றே சொல்லலாம்.
‘சிறை’ என்பது படத்தின் பெயர்.
ஆர்.சி.சக்திதான் இயக்குநர்.புரட்சிகரமான கருத்துகளை சொல்ல வேண்டும் இந்த சமுதாயத்திற்கான நல்ல வழிகளை காட்ட வேண்டும் என்கிற பேராசை இவருக்கு.! கமல்ஹாசனுடைய ஞானகுரு.
பிரசன்னா -லட்சுமி தொடர்பான காட்சி அன்று படமாக்கப்பட வேண்டும். இருவருக்கும் காட்சிகளை முன்னதாகவே சொல்லிவிட்டார். முக்கியமான சீன் என்பதால் அவர்கள் இருவரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
பிரசன்னா என்றதும் சினேகாவின் மணாளனை நினைத்து விடாதீர்கள்.
இவர் நாடக நடிகர்.நல்ல நடிகர் நல்ல மனிதர். இவரது நண்பர் கணேசும் நாடக நடிகர்தான்.!
“மணி.! லட்சுமி இருக்காளே நம்ம பெரியவருக்கே ( சிவாஜி.) சவால் விடுறவ. சீன் இதுதான்னு சொல்லிட்டாப் போதும் அந்த கேரக்டருக்குள் எப்படித்தான் புகுந்து கொள்வாளோ ..தெரியாது மிரட்டிருவா!” என்று சக்தி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது பிரசன்னா அங்கு வந்து விட்டார்.
“சார், நான் ரெடி”ன்னார்.
“நீ ரெடி…உன் ஆம்படையாள் பாகிரதி இன்னும் ரெடி ஆகலேயப்பா”!
ஆர்.சி.சக்தி குறிப்பிட்ட ஆம்படையாள் பாகீரதி வேறு யாருமல்ல லட்சுமியேதான்!
அந்த காலத்தில் இயக்குநர்கள் காட்சிகளை எடுக்கும்போது அங்கு பத்திரிகையாளர்கள் வந்து விட்டால் அந்த காட்சிகளைப் பற்றிய விவரங்களை சொல்லத் தயங்க மாட்டார்கள். மிகவும் முக்கியமானதாக இருந்தால் காட்சியைப் பற்றி சொல்லிவிட்டு இப்ப எழுத வேண்டாம்” என்று கேட்டுக் கொள்வார்கள். பரஸ்பர நம்பிக்கை இருந்தது.
ஆனால் இந்த காலத்தில் செட்டுக்குள்ளேயே விடுவதில்லை. பத்திரிகையாளர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை.மரியாதை.!!
ஆர்.சி.சக்தி எடுக்கவேண்டிய அன்றைய காட்சியை இப்போது சொல்வது தவறில்லை.
பிரசன்னாவின் முன்னிலையில் பாகீரதி தனது தாலியைக் கழற்றி வீசுவதுதான் எடுக்கப்படவேண்டிய காட்சி. கிளைமாக்ஸ் என்றும் சொல்லலாம்.
சாதாரணமான காட்சியாக தெரியலாம். ஆனால் கதையின் மொத்த வெயிட்டும் அதில்தான் இருந்தது..
“உனக்கு நான் மனைவியாக வாழ்வதை விட ஆண்டனிக்கு (ராஜேஷ்.) விதவையாக வாழ்றதே மேல்!”என சொல்லி கழற்றி வீசும் தாலி சரியாக துப்பாக்கி முனை மீது விழுந்து தொங்கும். இதுதான் அன்றைய சீன்.! இந்த காட்சியில் இருந்த சுனாமியின் சீற்றத்தை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
எழுத்தில் விளக்குவதை விட காட்சிப்படுத்தியதைக் கண்டால்தான் அதன் கனம் தெரியும். இந்த கதையை எழுதியவர் அனுராதா ரமணன்.
அந்த காட்சியை எடுத்து முடித்து அந்த பதட்டம் தணிய சற்று நேரமாகியது. லட்சுமியை விட அதிகமாக பாதிக்கப்பட்டவர் சக்திதான்! சில நேரங்களில் அழுது விடுவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
“கணவனே கண்கண்ட தெய்வம்னு வாழ்ற பூமியில நீங்க தாலியை கழற்றி வீசுறதை ஆடியன்ஸ் ஏத்துக்குவாங்களா?” என்று லட்சுமியிடம் கேட்டேன்.
சூடாகவே விழுந்தன வார்த்தைகள்.!
“ஸ்ரீ ராமன் மாதிரி ஏகபத்தினி விரதன் இருந்தால் கணவன் கண் கண்ட தெய்வம்தான்!
கண்ட கண்ட எடத்தில எல்லாம் பொறுக்கிறவனை அப்படி சொல்ல முடியுமா?
அப்படி பொறுக்கியோடு வாழ்கிற பெண்ணெல்லாம் ‘என் தலைவிதி நீதான்டாப்பா என் புருஷன்.! உன்னை கட்டிக்கிட்டு நானும் நாசமாப் போறேன்,பிள்ளைகளும் நாசமா போகட்டும் என்று இருந்தால் என்ன அர்த்தம்?அழுதழுது அவள் சாக வேண்டியதுதான்!
இதைப்போய் பண்பாடுன்னு சொன்னால் அது அறிவிலித்தனம்!
புருஷன் குடிச்சிட்டு வருவான்.அடிப்பான்,இதையும் சில பெண்கள் தாங்கிக்கிறாங்க.அதிலேயும் அவளுக்கு சுகம்.ஏனென்றால் அவளுக்கு வேற வழி தெரியாது. ஜென்மாந்திரத்துக்கும் அந்த அடி உதைதான்!
அதனால் அடிமைத்தனத்தோடு சுகமாக்கிகொள்கிறாள்.
இன்னும் சில பெண்கள் இருக்கிறாங்க.புருஷன் அடித்தால் பதிலுக்கு அடி கொடுக்கிறவங்களும் இருக்கிறாங்க.”என்றார் லட்சுமி.
பண்பாடு தெய்வம் என்கிற பெயரில் அவஸ்தைகளை அனுபவிப்பது பற்றி லட்சுமி என்ன சொல்கிறார்?
இன்னும் இரண்டு நாளில் பார்க்கலாம்.
—தேவிமணி.