நடிகர் சங்கத்தைப் பொருத்தவரை அங்கே அனைத்துக் கட்சியினரும் இருக்கிறார்கள். கண்மாய் என்றால் வெரைட்டியாய் விரால் மீனிலிருந்து கெண்டை மீன் வரை இருக்கத்தானே செய்யும்!
திராவிட இயக்கத்துக்கு வலிமை சேர்த்தது திரைத் துறை.பேரறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி, மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் ,நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ,கே.ஆர்.ராமசாமி ஆகியோர் திராவிட இயக்கத்தின் போர்வாளாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் நடிகர் சங்கத்தின் பொறுப்புகளில் இருந்த காலத்தில் உட் பூசல் இருந்தாலும் அதை வெளிக்காட்டியதில்லை.
அந்த அளவுக்கு அவர்களிடம் கண்ணியம் இருந்தது.
அந்த கண்ணியம் எங்கே?
திராவிட இயக்கத்தின் பாதிப்பு இன்று வரை திரைத்துறை சார்ந்த சங்கங்களில் இருந்தாலும் ஆளும் கட்சியை அனுசரித்துப் போக வேண்டும் என்கிற மனப்பான்மை வேர் விட்ட பிறகு கண்ணியம் காணாமல் போய் விட்டது. அமைச்சர்கள் மீது வழக்குகள் பாய்வதைப் போல சங்கங்களிலும் வழக்குகள்.!
புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.
ஆளும் கட்சியின் தலையீடு இல்லாமல் இருக்குமா?
அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவை ஐசரி வேலன் சந்தித்தார் என்பது சேதி.
விஷால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் என்பதும் செய்திதான்!
ஐசரி அணியை சார்ந்த உதயாவும் திமுக தலைவரை சந்தித்திருக்கிறார்.
ஆக அரசியல்வாதிகள் உள்ளே நுழைவதற்கு சுலபமாக வழி வகுத்திருப்பது இரு அணியினருமேதான்! ஆனால் ஆளும் கட்சியின் ஆதரவு நீதியின் நடுநிலை தன்மையை ஒரு சார்புக்கு சாதகமாக கொண்டு சென்று விடக்கூடாது.
நீதித்துறை அரசியல்வாதிகளால் மிரட்டப்படுகிறது என்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மனம் திறந்து சொன்னதுதானே.!
ஆக ஆளும் கட்சியின் ஆதரவு ஐசரி அணிக்கு கிடைக்குமேயானால் நடுநிலை என்பது கேள்விக் குறியாகி விடும்..
நடிகை லதா மூத்த பெரும் நடிகை. அவர் சொல்கிறார் “சங்கத்தில் அரசியல் இல்லை “என்பதாக.
“அமரர் எம்.ஜி.ஆர்.வழியில் பயணித்து நலிவுற்ற நடிகர்களுக்கு அதிக அளவில் உதவி செய்திருப்பவர்கள் நாசர் அணியினர்.
கொடுத்த வாக்குறுதிகளில் அறுபது சதம் முடித்திருக்கும் இளைஞர்கள் மீண்டும் வரவேண்டும் “என்று வாழ்த்தி இருக்கிற அவர் நிர்வாகக்குழுவுக்கு போட்டி இடுகிறார்.
–தேவிமணி