ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அரசியல் வேடதாரிகள் ஆட்சிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திரைத்துறை வேடதாரிகள் தங்கள் துறையை மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
வேடதாரிகள் என சொல்லாதீர்கள் என சிலர் கோபம் கொள்ளலாம்..அரசியலில் காலத்துக்கேற்ப பதவிகளுக்காக வேடம் போடுகிறீர்களே ….
படத்துக்குப்படம் புதிது புதிகாக வேடம் போட்டுக்கொண்டு நடிப்பதும் அணி பிரிந்து சேர்ந்து அதற்கேற்ப நடிப்பதும் வேடம்தானே…!
நேற்றைய அணியில் இருந்த ஐசரி கணேஷ் இன்று எதிரணிக்கு மாறி அதற்கேற்ப நடிப்பது வேடம் போட்டதால்தானே ,,உதாரணத்துக்காக சொல்லப்பட்டதே தவிர குற்றம் சாட்டுவதற்கு அல்ல.
பாண்டவர் அணி. இதுவரை நிர்வாகத்தில் இருந்தது.
சங்கரதாஸ் சுவாமிகள் அணி .நாடக நடிகர்களை கவர்வதற்கான பெயர் மாதிரி தெரிகிறது.
ஆனால் நாடகத் தந்தையின் வரலாறு தெரியாதவர்கள் திரைத் துறையிலும் இருக்கிறார்கள் ,நாடகத்துறையிலும் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
சுவாமிகள் என்று வணக்கமுடன் அழைக்கப்படுவதால் அவரை ஏதாவது ஆதினத்தின் தலைவராக்காமல் இருந்தார்களே அதுவரை நிம்மதி.
எதிர்வரும் காலங்களில் சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றிய சரித்திரம் தெரியாத அளவுக்கு வருங்கால கலை உலக அபிமானிகள் இருட்டுக்குள் தள்ளப்படுவார்கள் என்கிற கவலை எல்லோருக்குமே இருக்கிறது.
அரசுக்கும் சுத்தமாக கவலையேயில்லை. அவர்களது தலைவர்களைப் பற்றியே கவலைப்படாதவர்கள் இவரைப் பற்றி கவலைப்பட என்ன இருக்கிறது.
நடக்க விருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் நாசர்,விஷால் இருவரையுமே இன்னும் அழுத்தம் கொடுத்து சொல்ல வேண்டுமானால் விஷாலை மட்டுமே குறி வைத்து போர் தொடுக்கப்பட்டிருக்கிறது.
“இந்தாளு மட்டும் வரவே கூடாது”என வஞ்சினம் கொண்டு வேலை பார்க்கிறார்கள்.
விஷால் தரப்பிலும் அந்த அளவுக்கு பிரசாரத்துக்கு பெருமளவு தொகை செலவு செய்யப்படுகிறது.அது எடுபட்டதா என்பதை தேர்தல் முடிவுதான் சொல்லும்.
இவரை எதிர்க்கும் ஐசரி கணேசும் சிலரிடம் பெரும் தொகையை கொடுத்து வாக்காளர்களை கவர திட்டமிட்டிருக்கிறார்என்கிறார்கள்,. சில ஐடி புரபஷனல் இவருக்காக வேலை பார்க்கிறார்கள்.அவர்களின் ஐடியாதான் சரத்குமார் வீடியோ வெளியீடு!
யாராவது பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ள பாக்யராஜ் தயார். அவரின் கையில் காசு இருந்தால் அல்லவா கொடுப்பதற்கு. ! ஆனால் இவருக்காக ஐசரி செலவு செய்யலாம். அவர் ரிசர்வ் பாங்கு மாதிரி.இவர்தான் மொத்த செலவும் செய்கிறார் எனவும் சொல்கிறார்கள்.
சரி, விஷால் ஜெயிப்பாரா மாட்டாரா?
கெட்டபெயரை கொஞ்சம் நஞ்சமா கொள்முதல் செய்து வைத்திருக்கிறார்? இதையெல்லாம் எப்படி சரி செய்யப்போகிறார்.
நடிகர் சங்கம் கட்டிடம் கட்டியதில் பெரும் பங்கு பொறுப்பு விஷாலுக்கு இல்லை. ஆனால் நிச்சயம் கட்டிட கல்வெட்டில் விஷாலின் பெயர் இருக்கவே செய்யும்.50 சதவிகித கட்டிட வேலைகள் நடந்து முடிந்திருக்கின்றன இன்னமும் வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
புதிதாக தேர்வாகிற நிர்வாகிகள் பெயின்ட் அடித்து திறப்பு விழா நடத்தினாலே போதும்என்கிற நிலைமையில் கட்டிடம் முடியவில்லை.பதவி விலகியிருக்கிற பாண்டவர் அணியின் மிகப்பெரிய சாதனையை குறைத்து மதிப்பிடுவது நியாயம் இல்லை.அது நேர்மையாகாது.
ஆக மீதி ஐம்பது சதவிகித வேலையை முடிப்பதற்கு அனுபவசாலிகளே வந்தாக வேண்டும். அதாவது கட்டிடத்துக்கு ஒரு நாளைக்கு ஒன்னரை கோடி வரை செலவு செய்தாகவேண்டும்.
தற்போது சங்கத்தில் இருப்பு எவ்வளவு இருக்கும்? எலக்சன் முடிந்து கணக்குப்பார்த்தால் சில பல லட்சங்களே இருக்க முடியும்.! ஆனால் சங்க உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய ஓய்வு ஊதியம் மற்றும் இதர பல சிலவுகள் மாதம் பத்து லட்சம் தேவைப்படுகிறது..
இந்த நிலையில்தான் நிதி நிலை இருக்கிறது.
ஆக உடனடி தேவைகள் பத்துக் கோடி என வைத்துக் கொள்ளுங்கள்.
ஆக யார் நிர்வாகத்துக்கு வந்தாலும் பத்துக்கோடிக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஏற்கனவே கடன் கொடுத்தவர்கள் எதிரில் பணம் கேட்டு நிற்பார்கள் அவர்களுக்கு ஆறு கோடி கொடுத்தாக வேண்டும்.
மீதி நாலு கோடி! என்ன செய்ய முடியும்? தினமும் கட்டிட வேலைகளை தொடர ஒன்னரைக் கோடிக்கு என்ன செய்வார்கள்?
சங்கரதாஸ் சுவாமிகள் அணியிடம் என்ன திட்டம் இருக்கிறது?
ஆக யார் வந்தாலும் அவர்கள் அனுபவசாலிகளாக இருக்க வேண்டும். கோடிகளை திரட்டும் அளவுக்கு செல்வாக்கு சொல்வாக்கு உள்ளவர்களாக இருக்க வேண்டும். சுவாமிகள் அணியில் அத்தகைய முகங்கள் நிச்சயம் இல்லை.
நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நின்று விட்டன என்பதும் கடைந்தெடுத்த பொய் .
தற்போதைய நிலையில் கடுமையான போட்டி இருக்கிறது என்பது உண்மை.இரு அணியினருக்கும் ஆதரவு இருக்கிறது. ஒரு அணியினருக்கு பண பலம் அதிகமாகவே இருக்கிறது. தேர்தல் நாளன்று காவல்துறை கண் அசந்துவிட்டால் கசப்பான நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
திரைத்துறை சார்ந்த சங்கத் தேர்தலில் வாக்குப்பெட்டிகள் நடுச்சாலைக்கு கொண்டு வரப்பட்டு உடைக்கப்பட்ட காட்சிகளை பார்த்த பத்திரிகையாளர்கள் இருக்கவே செய்கிறார்கள் பெட்டிகளை உடைத்த புண்ணியவான்களும் இருக்கவே செய்கிறார்கள்.
ஆக நடக்கவிருக்கிற தேர்தலில் விஷால் ஜெயிப்பாரா?