படத்தில் கேரக்டருக்காக அழுவது வேறு.
உண்மையாகவே கேரக்டர் கீறப்படுகிறபோது அழுவது வேறு.
அதுதான் அன்று மேடையில் நடந்தது,
‘தும்பா’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.ரீகல் ரீல்ஸ்,ரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவரவிருக்கிற படம்தான் தும்பா. காடுகளில் படமாக்கப்பட்டிருக்கிற படம்.
இந்த படத்தில் முக்கிய நாயகியாக கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார். பிரபல நடிகரும்,தயாரிப்பாளருமான பெரிய இடத்தின் மகள்.
இவர் படத்தின் இயக்குனர் ஹரீஷ்ராம் பற்றி பேசும்போது உடைந்து போனார்.
தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் அழுது விட்டார்.
“எனக்கு வாய்ப்புத் தருவதற்காக பலர் வந்தனர்.பேசினார்கள்.நானும் பலரிடம் வாய்ப்புக் கேட்டுச்சென்றேன்.
ஆனால் அவர்களில் பலர் என் தோற்றத்தைக்கண்டு இந்த உருவத்தைஎல்லாம் எவன் பார்ப்பான்..யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்று இழிவாக பேசினார்கள்.
ஆனால் எனது மெலிந்த உடம்பைப் பற்றி கவலைப்படாமல் எனது திறமையை பார்த்து வாய்ப்புக் கொடுத்தார் ஹரிஷ் ராம்.
அதனால் புது முகம் தேடும் இயக்குநர்களை கேட்டுக் கொள்வதெல்லாம் தோற்றத்தைப் பார்க்காமல் திறமைக்கு மதிப்புக் கொடுங்கள்”என்றபடியே கண்ணீர் விட்டு அழுதார்.
கீர்த்தி பாண்டியன் மிகவும் ஒல்லியாக இருப்பதைப் பார்த்துதான் அப்படி பேசியிருக்கிறார்கள். பிரபலத்தின் மகள் என்பது தெரிந்தும் அப்படி பேசியிருக்கிறார்கள் என்றால் சாதாரணமான வீட்டுப் பெண்கள் என்றால் எவ்வளவு கேவலமாக பேசி இருப்பார்கள்.?