நடிகை மனோரமாவின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகில் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் இன்று நடைபெற இருந்த அனைத்து திரையுல நிகழ்ச்சிகளும் ரத்து செயப்பட்டிருக்கின்றன.
தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து ஆச்சியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர், மேலும் ஆச்சியைப் பற்றிய நினைவுகளையும் நடிக, நடிகையர் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜீத் நேரில் வந்து மனோரமா உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்.
நடிகை மனோரமாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் பேசியதாவது:
எனது மூத்த சகோதரி மனோரமா, இயற்கை எய்திவிட்டார் என்று அறிந்ததும், எனக்கு ஏற்பட்ட துக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. திரைப்படத் துறையில் அவர் எனது மூத்த சகோதரி ஆவார். ஏராளமான திரைப்படங்களில் அவரும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம். அவர் என்னை அன்பாக ‘அம்மு’ என்றுதான் அழைப்பார். நான் அவரை எப்பொழுதுமே மனோரமா என்றுதான் அழைப்பேன்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எத்தனையோ முறை அவரது இல்லத்திற்கு நான் சென்றிருக்கிறேன். “சாப்பிடுறியா அம்மு” என்று கேட்பார். “சரி” என்பேன். அவரது கையாலேயே எனக்கு உணவு பரிமாறுவார். அதைப் போலவே பலமுறை அவர் எனது இல்லத்திற்கு வந்திருக்கிறார். என்னுடன் அமர்ந்து உணவு அருந்தியிருக்கிறார். அந்த நாட்களை மறக்க முடியாது. எனக்கும் மனோரமாவுக்கும் இருந்த ஒரு பந்தத்தை என்றைக்கும் யாராலும் பிரிக்க முடியாது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு, சகோதரி மனோரமா மீது ஒரு அலாதி பிரியம் எப்போதும் உண்டு. அதைப்போலவே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்னிடம் அவரைப்பற்றிப் பேசும் போது, “நடிப்பில் மனோரமா ஒரு ஜீனியஸ்” என்று பலமுறை கூறியிருக்கிறார். உண்மையிலேயே மனோரமா நடிப்பில் ஒரு மேதை தான். நடிகர் திலகம் சிவாஜிகணேசனைப் போல், அவர் ஒரு ‘நடிகையர் திலகம்’ அல்லது ‘பெண் நடிகர் திலகம்’ என்றே சொல்லலாம்.
மனோரமாவைப் போல், ஒரு சாதனையாளர் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்பு எவரும் இருந்ததில்லை. இனி எவரும் பிறக்கப்போவதும் இல்லை. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இனி எந்தக் காலத்திலும் யாராலும் நிரப்ப முடியாது. அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் களைப்பாற வேண்டும். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–
“ஆச்சி” என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட மனோரமா நேற்றிரவு மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக புகழ்க் கொம்பின் உச்சியிலே வீற்றிருந்த நேரத்திலும், என்பாலும், என் குடும்பத்தினர்பாலும் மிகுந்த அன்பு கொண்டு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தவர்.
அண்ணா எழுதிய “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்”, நான் எழுதிய “உதய சூரியன்”, “மணிமகுடம்”, தம்பி சொர்ணம் எழுதிய “விடை கொடு தாயே” போன்ற நாடகங்களில் “அல்லி” போன்ற சிறப்பான பாத்திரங்களை ஏற்று கழக மாநாடுகளில் எல்லாம் நடித்ததன் மூலம், திராவிட இயக்க நடிகையாகவே கருதப்பட்டவர் மனோரமா. 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து “கின்னஸ்” உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது இவருக்குள்ள தனிப் பெருமை ஆகும்.
ஆச்சி மனோரமா நகைச்சுவை நடிகையாக, குணசித்திர நடிகையாக, பாடகியாக திரையுலகில் கடந்த ஐம்பதாண்டு காலமாக வாழ்ந்தவர். “பத்மஸ்ரீ” விருது, “புதிய பாதை” திரைப்படத்தின் மூலம் “சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது”, தமிழ்நாடு அரசின் “கலைமாமணி விருது” என பல விருதுகளை மனோரமா பெற்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கூட அவர் மீண்டும் திரைப் படங்களில் நடிக்க விருக்கிறார் என்ற செய்தி வந்தது. அதற்குள் இன்று வந்த அவரது மறைவு திரைப்பட உலகிற்கு ஒரு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புத் தாயை இழந்து வாடும் தம்பி பூபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சினிமா உள்ளிட்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜீத் மனோரமாவின் வீட்டிற்கு சென்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தியிருக்கிறார்
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், சரத்குமார்,விஷால், கார்த்தி, சிவகுமார், சிம்பு, நாசர், பொன்வண்ணன்,ஜெய்,ராமராஜன், பாண்டியராஜன், பார்த்திபன், சிவகார்த்திகேயன் கலைப்புலி எஸ்.தாணு,ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்ட ஏராளமான மனோரமாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி னர்
இதையடுத்து இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் நடிகை மனோரமாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மைலாப்பூர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.