திரை உலகை இவரைப் போல கட்டியாண்டவர் எவரும் இல்லை.
எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கண்ணதாசன் என்கிற கவிஞனுக்குள் கட்டுண்டு கிடந்தார்கள்.
பகை கொண்டவர்களும் அந்த கவிஞன்தான் தனக்கு எழுத வேண்டும் என்று தவம் கிடந்த காலமும் உண்டு.
அடிக்க வேண்டும் என்று பாய்ந்தவர்கள் கவிஞனுக்குள் அடங்கிப்போனதும் உண்டு.
அந்த மாபெரும் சித்தனைத் தமிழ்த்தாய் தாங்கி இருந்தாள்.
கவிஞரின் தென்றல் இதழில் மயங்கியவன் நான்.
தொலைவில் இருந்து கண்ணதாசனின் அரசியல் பேச்சுகளை கேட்ட நான் அவரை நேரில் சந்தித்து பேசுவேன் என நினைத்ததில்லை.
தேவிவார இதழில் பணியாற்றிய காலத்தில் கண்ணதாசனை சீடனைப் போல அணுகினேன்.
வார இதழில் அவர் தொடர் எழுதிவந்தார். வாரம் தோறும் அவரை சந்தித்து கவிதை வாங்கி வந்தவர் பொறுப்பாசிரியர் ஜேம்ஸ்.
அவர் போகாத நாட்களில் நான் செல்வேன்.
அப்போது கவிதா ஹோட்டல் என்கிற ‘பிரசித்திப்பெற்ற’ ஹோட்டல் இருந்தது.
அங்கே சில நேரங்களில் இரவு நேரங்களில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி -கவிஞர் கூட்டணியின் மெட்டமைப்பு நிகழும்.
மெட்டுக்கேற்ப வரிகளை சொல்ல கவிஞரின் உதவியாளர் கண்ணப்பன் எழுதிக் கொள்வார்.
பக்கத்தில் முழுப்பாட்டில் இருக்கும்.அந்த மதுப்பாட்டிலில் திராட்சைப்பழ லேபில் ஒட்டியிருந்ததை பார்த்ததாக நினைவு.
கண்ணப்பன் வசம்தான் தொடர்கதையின் பிரதியை கொடுத்து வைப்பார் கவிஞர்.
பாட்டெழுதும் நேரத்தில் மற்றவர்களுடன் பேசுவதை தவிர்த்து விடுவார்.
அவர் தனித்திருந்த நேரத்தில் படங்களைப் பற்றி விசாரித்திருக்கிறார்.. அவரைப் போல தமிழை அழகாகப் பேச முடியவில்லையே என்கிற தாழ்வுணர்ச்சி காரணமாக நான் அதிகம் பேசுவதில்லை.
இந்த தாழ்வுணர்வு இன்றும் உண்டு. மதுரையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சென்னை வந்த எனக்கு நல்ல தமிழைப் பேசமுடியவில்லையே,!’ல’ ‘ள’ ‘ழ’ உச்சரிப்பு சிக்கல் இன்றும் உண்டு.
கவிஞரின் பிறந்த நாளான இன்று எனது குற்றத்தை ஒப்புக்கொள்வதில் எனக்குப் பெருமையே.!
இனி கவிஞரின் மனவாசம் பற்றி அவரே எழுதியவைகளை நினைவு கொள்வோம்.!”
“இந்த மனவாசம் 1961 ஆம் ஆண்டில் ஏப்ரல் 10 ஆம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது.
இதில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் வரும்போதெல்லாம் வனவாசத்தில் விட்டுப்போன விஷயங்களைச் சொல்லிவிடுவேன்.
நான் பட்ட துன்பங்களைச் சபை நடுவில் வைப்பது ஒன்றுதான் எனக்கு ஏற்படும் ஆறுதல்.நான் யார் யாருக்கு உதவி செய்தேனோ,அவர்களை மறந்து விட்டேன்.
யார் யார் என வாழ்க்கையைச் சீரழித்தார்களோ, அவர்களே என் நினைவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஓய்வாக உட்காரும்போதெல்லாம் அவர்களே என் நினைவுக்கு வருகிறார்கள்.
என்னைப் பிறரும் கெடுத்து,நானும் கெடுத்துக் கொண்ட பிறகு,மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.
இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
சிலர் சொல்லக்கூடும்.இவ்வளவு கஷ்டப்பட்டதால்தான் இவ்வளவு எழுதுகிறீர்கள் என்று. என் வரையில் அது பொய்.
இளமைப் பருவத்திலேயே எடுத்த எடுப்பில் எனக்குச் சரியான வாழ்க்கை அமைந்திருக்குமேயானால் நானும் ஒரு கம்ப காவியம் பாடியிருப்பேன்
வாழ்க்கைத் தாகம் எழுத்துக்கு ஆதாரமில்லை.”
இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
—தேவிமணி.