தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலையில் முடிவடைந்தது.
மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில்வாக்குப்பதிவு நடந்தது.
இத்தேர்தலில் நடிகர் நாசரின் பாண்டவர் அணியை எதிர்த்து நடிகர் மற்றும் இயக்குனரான பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் போட்டியிட்டனர்.
இத்தேர்தலை பொறுத்தவரை, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3521. இதில் 1604 பேர் நேற்று வாக்களித்துள்ளனர்.
தபால் வாக்குகள் 900. வெளியூர்களிலிருந்து நேரடியாக வந்து வாக்களித்தவர்கள்234.
மொத்தம் பதிவான 12 வாக்கு பெட்டிகள் இரு அணியினரின் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு அண்ணாசாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில்மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது
அதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் 61 பேர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், நேற்று நடந்த தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
இது குறித்த வழக்கு வரும் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.இவ்வழக்கில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அடுத்து, நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான பத்பநாபன் வாக்கு எண்ணிக்கை எப்போது என அறிவிப்பார்.
அதன் பிறகே இத்தேர்தலில் எந்த அணி வெற்றி பெற்றது என்பது தெரிய வரும்.நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை நாசர் அணியின் கையே ஓங்கி இருந்தது என்கிறது மாநில உளவுத்துறை வ ட்டாரம்.