பிரபல இயக்கங்களில் இருந்தோ ,அமைப்புகளில் இருந்தோ முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் ராஜினாமா செய்தால் நிச்சயம் அதற்கு ஒரு பின்னணி இருக்கும். ஒன்றோடு ஒன்று சிக்கிமுக்கிக்கல் உரசினால்தான் நெருப்புப் பொறி பறக்கும்.
அப்படியானால் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விலகலுக்கு ஒரு காரணம் இருந்தாக வேண்டும்.
ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் விலகுகிறார் என்றால்…?
எஸ்.! அந்த காரணம் ஒரு மனதாக தேர்வு செய்யப் பட்டது தான்!
அதை பிரச்னைக்குள் தள்ளி விட்டவர் இயக்குநர் ஜனநாதன் ,மார்க்சியவாதி.
“ஒரு மாபெரும் அமைப்புக்குள் தேர்தல் இல்லாமல் ஒருவரை தேர்வு செய்தல் என்பது சரியாகாது என்பது எனது கருத்து. இதை வெளிப்படுத்தினேன். நான் சொன்னதை வைத்துதான் இயக்குநர் பாரதிராஜா சார் பதவி விலகினாரா என்பது எனக்குத் தெரியாது” என்கிறார் இயக்குநர் ஜனநாதன்.
இவரது “லாபம்” படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்து இரண்டாவது கட்டத்தை நோக்கி செல்லவிருக்கிறது. மக்கள் செல்வன் விஜயசேதுபதி,ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துவருகிற படத்துக்கு டி.இமான் இசை அமைத்திருக்கிறார்.
பாரதிராஜா என்ன சொல்கிறார்?
“ஒரு மனதாக தேர்வு செய்து விட்டு பின்னர் வேறு மாதிரியான கருத்துகளை சொல்வது எனக்குப் பிடிக்காது. உனக்கு தேர்தல் நடத்தித்தானே தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என சொல்கிறாய்.,செய்! நான் விலகிக் கொள்கிறேன்” என்கிற காரணத்தை சினிமா முரசத்திடம் சொன்னார்.
“தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவோ நல்லவைகளை செய்ய வேண்டும் .போராடித்தான் ஆக வேண்டும் என்றால் போராடுவேன். அதற்கான செயல்களில்தான் ஈடுபட்டிருக்கிறேன். நடிகர் சங்கத்தின் பெயரையும் தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யாமல் ஓயப்போவதில்லை.தைரியம் வேண்டும் “என சொன்னார்.