எழுத்து, இயக்கம் :சை.கவுதமராஜ், இசை: ஷேன் ரோல்டன். ஒளிப்பதிவு: கோகுல் பெனாய் ,வசனம்: பாரதி தம்பி. சை.கவுதமராஜ், எடிட்டர்,:பிலோமின்ராஜ்,விஎப்எக்ஸ்:நாக் ஸ்டுடியோஸ்
ஜோதிகா,பூர்ணிமாபாக்யராஜ், ஹரீஸ் பெராடி,,கவிதாபாரதி.
*******************
விமர்சனம் எழுதுவதற்கு முன்னதாக நாளிதழில் படித்த பள்ளிக்கூடம் தொடர்பான சேதி.
இந்தியத் தலைநகரமான புதுடில்லியில் ஒரு பள்ளிக்கூட பிரின்சிபால் அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியையை அதே பள்ளியில் வைத்து கற்பழித்து மிரட்டி வருகிறார். வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிகா மிலிட்டரி ஹை ராங் ஆபீசர். விருப்ப ஓய்வில் ஆர்.புதூர் என்கிற ஊரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்ற வருகிறார். ஒழுங்கின்மையின் மொத்த அடையாளமாக இருக்கிறது.அந்தப்பள்ளி.
அந்த பள்ளியை சீரமைத்து மாணவர்களை ,ஆசிரியர்களை திருத்துகிறார் கீதா ராணி என்கிற ஜோதிகா.அரசுப்பதவிகளில் இருப்பவர்களுக்கே உரிய திமிர்,கடமையை சரிவர செய்யாதிருத்தல்,உரிமைக்கு முதலிடம் கொடுத்துவிட்டு தமது பொறுப்புகளை பின்னுக்குத் தள்ளுதல் போன்ற இத்தியாதிகள்…இந்த கதையின் அம்சங்கள்.
தனியார் பள்ளியின் போட்டி என்பது ஒப்புக்கு சப்பாணியாக சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஜோதிகாவுக்கே முக்கியத்துவம் என்கிற கட்டாயத்துக்குட்பட்டு காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர். மென்மையான அணுகுமுறை என்றாலும் கடுமையான கண்டிப்பு ..அவர் முன்னாள் ராணுவ அதிகாரி என்பதை நினைவுறுத்துவதற்காக ,
இப்படி பல காட்சிகள் என படம் முழுக்க ஜோ வே தெரிகிறார்.
நகைச்சுவை வேண்டும் என்பதற்காக சத்யனை பி.டி. மாஸ்டராக நடிக்க வைத்து கோமாளித்தனத்தை அவர் மீது சுமத்தியிருக்கிறார்கள். ரசிக்க முடியவில்லை.
ஆனால் ஒரு குட்டிப்பையனின் அப்பாவித்தனத்தை ஜோ எதிர்கொள்வதைப் போலவே நாமும் எதிர்கொள்கிறோம். நைஸ்.அந்த சிறுவனின் முகப்பாவனை இன்னும் நினைவில்.!
கவிதா பாரதி, உதவித் தலைமை ஆசிரியர்.இவரைப் போலவே இன்னும் சில சதை களவாடும் கேரக்டர்கள். உரிமைகள் என்கிற பெயரில் உழைப்பினைத் தரமறுக்கிற கும்பல். பூர்ணிமாபாக்யராஜ் சக ஆசிரியை. கடைசியில் ஜோ வுக்கு மாமியார் உறவு.
சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் கோபம் கொள்கிற அளவுக்கு கடுமையான வசனங்கள். ஆனால் அவை அத்தனையும் சத்திய வார்த்தைகள். சமுதாயத்தை ஆங்காங்கே சுட்டுத்தள்ளுகிற சொற்கூட்டணி .
வசனம் பாரதி தம்பிக்கு வாழ்த்துகள்.
“கோவில் கும்பாபிசேகம்னா கொட்டிக் கொடுக்கிற நாம்ப பள்ளிக்கூடத்துக்கும் கொடுத்தம்னா பள்ளிக்கூட கக்கூஸ் கூட கர்ப்பகிரகம் மாதிரி மணக்கும்”
“இவனுகதான் வரணும்னு சொல்றதுக்கு பள்ளிக்கூடம் என்ன கோவில் கர்ப்பக்கிரகமா?”என்கிற வசனத்தில் சென்சார் தின்றிருக்கிற வார்த்தைகள் இந்த சமுதாயத்தின் மீது எறிந்த எரிஈட்டிகள் .எத்தனை காலம் தணிக்கைக் குழு கேடயமாக இருக்கப்போகிறது.
அரசுப்பள்ளிகளுக்கு உண்மையிலேயே எமனாக இருப்பது தனியார் பள்ளிகளும் ,அரசாங்கமும்தான் இயக்குனரின் பெருங்கோபம் இவைகளைத்தான் முதல் குற்றவாளிகளாக சேர்த்திருக்கவேண்டும். தொட்டுக்காட்டினால் போதும் என இயக்குநர் நினைத்து விட்டாரோ என்னவோ!
தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பதிலாக வார்ம் அப் பாட்டுப் பாடி ஆடினால் போதும் என்பது சரியானதுதானா, இதற்கு பதில் சொல்லக்கூடியவர் கவிதா பாரதி.
ராட்சசி—-ஜோ வின் தனி ஆட்சி!
சினிமா முரசத்தின் மார்க் 2 / 5