தமிழ்த்திரைப்பட இயக்குனர்சங்கத்தேர்தலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து அமீர் அணியினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
‘தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் 2019ம் ஆண்டு தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவ,ர் இணைச்செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு முறையே, எஸ்.பி. ஜனநாதன், அமீர், கரு. பழனியப்பன், வெற்றிமாறன், சமுத்திரகனி, பாலாஜி சக்திவேல், செந்தில்குமா,ர் ஜெகன்நாத்,அஸ்லம், நாகேந்திரன் ஜெகதீசன், பாலமுரளி வர்மன், விருமாண்டி, திருமுருகன் உள்ளிட்ட இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் அணி போட்டியிட முடிவு செய்து மனு தாக்கல் செய்து வந்தோம்.
இந்த சூழ்நிலையில் நேற்று நடந்த இறுதி வேட்பு மனு பரிசீலனையில் ஜனநாதனின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சட்ட விதிகளுக்குப் புறம்பாக திட்டமிட்டு தேர்தல் அதிகாரி சில பொய்யான காரணங்களைக் காட்டி நிராகரித்துவிட்டார்.
அதற்கான காரணத்தை நாங்கள் நேரில் கேட்ட பிறகும் கடிதம் மூலமாக பதில் தரவும் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் அவர் எங்களுக்கு சரியாக விளக்கம் அளிக்காமல், ஜனநாதனின் கோரிக்கை நியாயமானதுதான் இருந்தாலும், அவரது வேட்புமனுவை நிராகரிக்கிறேன் என்று கடிதம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு தேவை என்றால் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வாய்மொழியாகவும் கூறிவிட்டார்.
எனவே, தேர்தல் அதிகாரி இப்போது பதவியில் இருக்கும் நிர்வாகத்துடன் இணைந்து ஜனநாதனின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை நீதிக்குப் புறம்பாக நிராகரித்தது போலவே, நடைபெறக்கூடிய தேர்தலையும் ஏற்ற முறையில் தேர்வு இல்லாமலேயே நடத்த திட்டமிட்டு உள்ளார் என்பதை அறிந்து எங்கள் அணியினர் அனைவரும் ஒரு சேர ஆலோசித்தத்தன் முடிவில்,
ஏற்கனவே நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாகவும் பதவிக்கு போட்டியிடும் அரசியல் நபர்களுக்கு துணையாகவும் இருக்கும் அதிகாரியை கொண்டு நடைபெறப்போகும் இந்த தேர்தலில் பங்கு பெறுவது என்பது எங்கள் சங்கத்திற்கும், திரைத்துறைக்கும் எந்த நன்மையும் பயக்காது என்ற காரணத்தாலும்,
தலைவர் பதவி வேட்பாளருக்கு நடைபெற்ற அநீதிக்கு ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும்,
அமீர் தலைமையிலான இயக்குனர்கள் மற்றும் இணை துணை உதவி இயக்குநர்கள் அனைவரும் ஆகிய நாங்கள் போட்டியிடும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவது என்று முடிவெடுத்து தேர்தல் அதிகாரியிடம் எங்கள் கருத்தை பதிவு செய்து எங்கள் அனைவருக்குமான விலகல் கடிதம் கொடுத்துள்ளோம்.
என்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்