எழுத்து இயக்கம்: டான் சான்டி, இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு:ஆர்.பி.குருதேவ், தயாரிப்பாளர்” விஜய ராகவேந்திரா.
ஜீவா ,ராதாரவி, ஷாலினி பாண்டே ,சதீஷ்,விவேக் மதன் குமார்,பிரசன்னா,யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ,சிம்பன்சி ,
***************
ஜீவாவை திரையில் பார்த்து ரொம்ப நாளாச்சுள்ள. அதான் காமடியும் மெசேஜூமாக வந்து கலக்கி இருக்கிறார். காமடி படத்துக்குரிய லட்சணம் எவையோ அவையெல்லாம் இருக்கின்றன .காரண, காரியம் கேட்கக்கூடாது.
ஜீவாவின் நண்பர்கள்,சதீஷ்,விவேக் பிரசன்னா இவர்களுக்கு பணப்பிரச்னை. கீழ் போர்ஷனில் இருக்கும் விவசாயி மதன் குமாருக்கு லோன் கிடைக்கவில்லை.அவருக்கும் பணப்பிரச்னை.
வறுமையில் வாழ்கிறவர்கள் நொடித்தவர்கள், திருடர்கள்,சீரழிந்தவர்கள் இன்னும் பல சிக்கல் பேர்வழிகள் ஒன்று கூடுகிற புனித ஸ்தலம் தமிழக அரசின் டாஸ்மாக் தானே!
வண்டலூர் அருகில் இருக்கிற இந்துஸ்தான் பாங்கியில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறவர்கள் டாஸ்மாக்கில் உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணுகிறார்கள் என்றால் அது பக்கா காமடிதானே! ஆக கதையின் பேஸ் காமடி என்பதை இயக்குநர் இங்கே எஸ்டாபிளிஷ் பண்ணி விடுகிறார்.
அரசியலில் நால்வர் அணி ராசியில்லாததைப் போல இந்த நால்வர் அணியும் கொள்ளையடிப்பதில் கையாலாகாத அணியாகி விடுகிறது.கொள்ளையடித்த கோடி ரூபாய்களை வெளியில் கொண்டு போக முடியாமல் தவிக்கிறார்கள்.
தவிப்பின் வெளிப்பாடுதான் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய் என்கிற கோரிக்கை.
கொடி பிடித்து போராடிப்பார்த்து விரக்தியின் உச்சம் தற்கொலைதான் என முடிவெடுக்கும் விவசாயி சற்று சிந்தித்தால் இப்படித்தான் நடக்கும் என்பதை சூசகமாக சொல்லியிருக்கிற இயக்குநருக்கு போர்வாள் பரிசு கொடுக்கலாம்.
ஜீவாவுக்கு எளிதான கேரக்டர். குறை சொல்லமுடியாதபடி நடித்திருக்கிறார் என்றாலும் பஞ்சுப் பொதிய சுமக்கிறாரே என்கிற உறுத்தல் இல்லாமல் இல்லை.
இவருக்கு ஜோடி ஷாலினி பாண்டே. ஜம்முனுதான் இருக்கிறார். கும் தான் குறைச்சல்.!
என்ன தவம் செய்தாரோ செல்லூர் ராசு. தெர்மாகோலையும் இவரையும் பிரிக்க முடியாதுபோல. கமல்,ரஜினி இவர்களையும் வச்சு செய்திருக்கிறார் வசனகர்த்தா. செம காமடி.!ஊழலில் திளைக்கும் ஆளும் வர்க்கத்தை துணிச்சலுடன் சாடி இருக்கிறார்கள்.இது தொடரவேண்டும்.
சில காட்சிகளே என்றாலும் யோகிபாபு வந்ததும் கலகலப்பு கூடி விடுகிறது.
கமிஷனர் ராதாரவிக்கும் ஜீவாவுக்குமான உரையாடலில் நக்கல் தூக்கல்.!
ஏழை விவசாயியாக ஒரு முஸ்லீமை காட்டியது பாராட்டுக்குரியது.
சிலபல குறைகள் இருந்தாலும் பொழுதுபோக்குக்கு உரிய படம்தான்.!