எழுத்து இயக்கம் :சாம் ஆண்டன் ,ஒளிப்பதிவு:கிருஷ்ணன் வசந்த் ,இசை:ராஜ் ஆர்யன், வசனம்: சாம் ஆண்டன்,ரூபன்,அந்தோணி பாக்யராஜ்,ஆர்.சவரி முத்து, தயாரிப்பு: போர் மங்கிஸ் ஸ்டுடியோஸ்
யோகிபாபு, ராஜ்பரத்,எலிசா,சார்லி,ஆனந்தராஜ்,ஆடுகளம் நரேன்,ரவிமரியா,மயில்சாமி,நமோ நாராயணன்,மனோபாலா, லிவிங்க்ஸ்டன்
*******************
“முருகா! உனக்கு சுட்ட பழம் பிடிக்குமா ,சுடாத பழம் பிடிக்குமா?”
“அவ்வையே ! சுடாத பழத்தில் வளமான சத்தே இல்லை. கோடம்பாக்கத்தில் கற்பனை வரட்சி அதிகம். அதனால் சுட்ட பழத்தையே கொடு. அதில்தான் டேஸ்ட் அதிகம்.”
“கூர்கா படமும் சுட்டதுதான் முருகா!”
“மசாலா அதிகமோ?”
“நாட்டு நடப்பே மசாலாவாகி விட்ட பிறகு சினிமாவில் இருப்பது குற்றமா முருகா?”
“இல்லைதான்! சுருங்கச்சொல்லு அவ்வையே !”
“எமதர்மனாக அவதரித்திருந்த யோகிபாபுவை இதில் கூர்க்காவாக மாற்றி இருக்கிறார்கள். “
“அப்படியா,,அவரது பம்பை தலைக்குள் கூர்கா கேப் அடங்கிவிட்டதா?”
“நல்லவேளை போலீசாக வேண்டும் என்கிற அவருடைய ஆசை நிராசையாகிப்போனதால்தான் கூர்கா வேஷம். ஒரு வீட்டுக்கு வேலைக்குப் போன யோகிக்கு பக்கத்து அமெரிக்க தூதரக அதிகாரி எலிசா மீது லவ்.”
“என்ன அவ்வை இது?”
“குறிக்கிடாமல் கேள் முருகா! அந்த எலிசா ஒரு மாலில் உள்ள ஜிம்முக்கு டெய்லி போவதால் யோகியும் இடம் பெயர்கிறார். அந்த மாலுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் மந்திரி மனைவி,போலீஸ் அதிகாரிகள் மனைவிகள், ஊர் பெரியவர்கள், நாட்டை ஏமாற்றும் சாமிகள். ஆகியவர்களை வரவழைத்து கோடிகளை பணயப் பணமாக பெற தீவிரவாதக்கோஷ்டி ராஜ்பரத் முடிவு செய்கிறார். இதன் உண்மையான நோக்கம் தெரியாமல் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி துணை போகிறார். “
“ராணுவ அதிகாரியா…. என்ன பாட்டியாரே ?”
“அதான் சொல்லிவிட்டேனே உண்மையான நோக்கம் தெரியாது என்பதை! மால் முற்றுகை இடப்பட்டது. பிறகு இடையில் என்ன நடக்கும்,முடிவு எப்படி இருக்கும் என்பதெல்லாம் சொல்லத்தேவையில்லை அல்லவா?”
“சிறப்பு, மற்றும் சிரிப்புகளை மட்டும் சொன்னால் போதும் அவ்வையே!”
“அலட்டிக்கொள்ளாமல் வசனங்களை பேசுவது யோகிபாபுவின் பலம். டைமிங் சென்ஸ்தான் அவரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் ரஜினியின் “உயிர்மேல எவனுக்காவது ஆசை இருந்தா அப்படியே ஓடிப்போயிடு .வாய் வலிக்குதுடா!”என சொல்ல முடிகிறது.”நடிகர் சங்க விஷாலே வந்தாலும் காப்பாத்த முடியாதுடா “என நக்கலடிக்க முடிகிறது.!
“ஓ..அந்த அளவுக்கு காரமா? பக்தியின் பெயரால் போலி வேசமிடும் நித்திகளை, அரசியல் தலைவர்களை கூவத்தில் தோய்த்து துவைத்திருக்கிறார்கள். ‘சகாப்தம்’நீ “என்றதும் அதான் ஓடலியேடா ‘என தல மேலேயும் கை வைத்திருக்கிறார்கள்.”
“அந்த எலிசா ?”
“அது வெறும் கலர் முருகா! சார்லியை சொல்லலாம். பாராட்டலாம் .ஆனால் கந்தா…இந்த ரவி மரியா என்கிற ஆளைக் கண்டாலே எரிச்சல் ஏழேழு லோகத்தும் போகும் !”
“சரி அவ்வையே..என்ன மார்க் கொடுக்கப்போகிறாய்?”
” 3 / 5 முருகா!”
‘