எழுத்து,இயக்குநர் : ரத்னகுமார், ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக், இசை : பிரதீப்குமார் ஊர்கா.
அமலாபால்,ரம்யா, விவேக் பிரசன்னா, சரித்திரன்,
**************
டைட்டிலில் வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்துகிறார் இயக்குநர் ரத்னகுமார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களிடம் மார்பக வரி வசூலித்த காலம் அது. மார்பகம் இருந்தால்தானே வரி கட்டணும்,அதை அறுத்து எறிந்து விட்டால்?
அப்படியே செய்கிறாள் போராளிப் பெண்ணொருத்தி..மார்பகம் இரண்டையும் அறுத்து வாழை இலையில் வைத்துஅதிகாரிகளுக்கு தந்து விட்டு சாகிறாள். அவள் தகனம் செய்யப்படுகிறபோது கணவனும் உடன்கட்டை ஏறுகிறான். வரி விதிப்பை மன்னன் திரும்பப் பெறுகிறான்.
இதற்கும் அமலாபாலின் நிர்வாணத்துக்கும் என்ன தொடர்பு?
பெண் என்றாலே அவளின் அங்கங்கள் தானே தனித்துவம் பெறுகிறது. இது தனிக்கதை.
ஒரு டி.வி. நிறுவனத்தில் பிராங்க் ஷோ நடத்துவதில் கில்லாடியாக இருக்கிறார் அமலாபால். ஆண்களுடன் வெகு சகஜமாக பழகுவது, சரக்கு அடிப்பது, பெட் கட்டுவது என வரம்பின்றி நடப்பது பழக்கம்.
தன்னால் சேலை கட்டி செய்தி வாசிக்கவும் முடியும் .செய்தி வாசித்தபடியே ஆடைகளை அடுத்தடுத்து அவிழ்த்து கடாசவும் முடியும் என்று நண்பி ரம்யாவிடம் போட்ட பெட் அமலாபாலை நிர்வாணமாக்குகிறது போதையின் உச்சத்தில்!
அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் ஆடை !
முடிச்சுகளை அடுத்தடுத்து போட்டுக்கொண்டே போகிறாரே ,இயக்குநர் எப்படி அவிழ்க்கப்போகிறார் என்கிற சந்தேகம் வருகிறது. அமலாபாலின் நிர்வாண சாகசத்தின் போது அவருடன் இருந்த நண்பர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே ,என்கிற உறுத்தலும் சேருகிறது.
ஆனால் குமரி மாவட்டத்து மலைவாழ் பெண்ணின் வழியாக எல்லாமே சரி ‘செய்யப்படுகிறது’
சிந்து சமவெளி அமலாபாலின் துணிச்சல் ஆடையில் அதிகமாகியிருக்கிறது. பைக்கின் பின்னால் அமர்ந்த அமலாபால் தன் முதுகில் சாய்கிறபோது ஏற்படுகிற மெத்து மெத்து என்கிற சுகத்தை சக நண்பன் விவரிக்கிற போது அமலாவுக்கு கோபம் வருகிறது. குடிப்பழக்கம்,புகைக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கு இருக்கிற இயல்பான வாயாடும்தனம் ஆண்களுக்கு இணையான அசாத்திய துணிச்சல் சிறப்பு.
ராதாரவியை வம்புக்கு இழுக்கும் நோக்குடன் காட்சியை அமைத்த இயக்குநர் மீ டூ பிரச்னையில் கவிஞரையும் நையாண்டி பண்ணியிருக்கிறார்.மீ டூ தொடர்பான காட்சி வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது.
அறம் எப்படி நயனுக்கான படமோ அதைப் போல அமலாபாலுக்கு ஆடை.!
சினிமா முரசத்தின் மார்க் . 2 / 5