‘‘நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்…
இந்த தேர்தல் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில், வருந்தத்தக்க பல விஷயங்கள் அரங்கேறின. விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனித தாக்குதல்கள் நடந்தன. சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன. பொறுப்பில் இருக்கும்போது செய்த கடமைகள், உதவிகளாக சித்தரிக்கப்பட்டன. ‘நடிகர்கள் ஒரே குடும்பம்’ என்று சொல்லிக்கொண்டே ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது. படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து கேலி செய்தனர். விருப்பப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞர்கள் மீது ‘பண்பு மறந்து, வார்த்தை தடித்து’ அவதூறுகள் வீசப்பட்டன. இத்தகைய சூழல் இனி ஒருபோதும் வராமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு.
வெற்றிபெற்ற புதிய பொறுப்பாளர்களுக்கு, சக கலைஞனாக என்னுடைய வேண்டுகோள் இவை. கடமைகளை, உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள். மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள். அனைத்து கலைஞர்களுக்கும் நன்மை கிடைக்கப் பாடுபடுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறைவேற்றுங்கள். பகைமை விரட்டி, ஒற்றுமைக்கு வித்திடுங்கள். சககலைஞர்கள் உங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், எதிர்பார்ப்புமே, உங்களின் உண்மையான வெற்றி. நடிகர்கள் மற்றும் திரைத்துறையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
அனைவருக்கும் என் வாழ்த்துகள். நன்றி!
அன்புடன்
சூர்யா.’’