தயாரிப்பு: ராஜ்கமல்,திரைக்கதை இயக்கம் :ராஜேஷ் எம்.செல்வா, ஒளிப்பதிவு.:சீனுவாஸ் ஏ குதா, எடிட்டிங் :கே.எல்.பிரவீன், இசை : ஜிப்ரான்
சீயான் விக்ரம்,அக்ஸ்ராஹாசன், அபிஹாசன் ( நாசரின் மகன்.)
######
தமிழர்கள் தங்களின் பாரம்பரிய அடையாளங்களை இழந்து கொண்டுவருகிற நிலையில் கடாரம் கொண்டான் என்கிற வரலாற்று சிறப்புப் பெயரை வைத்திருக்கிறார்கள்.
இன்றைய அமைச்சர்களில் யாரையாவது ஒருவரை திடீரென ‘கடாரம் கொண்டான் ‘என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டுப் பாருங்கள்.ஆளாளுக்கு ஒரு பெயரைச்சொல்வார்கள்.
மலேசிய தீபகற்பகத்தின் வடக்கே உள்ள மாநிலம் கெடா. இதன் தமிழ்ப்பெயர் கடாரம். ராஜேந்திர சோழனின் ஆட்சியில் அடங்கிய மாநிலம்.
இந்த கதை மலேசியாவில் நிகழ்கிறது.
ஆதிரா ( அக்சராஹாசன் ) டாக்டர் வாசு ( அபிஹாசன் ) மலேசியாவுக்கு வாழவந்தவர்கள். இன்னும் பத்து நாளில் ஆதிராவுக்கு குழந்தை பிறந்து விடகூடிய நிறைமாத கர்ப்பிணி. வாசு வேலை பார்க்கிற ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் கே.கே.யை (சீயான் விக்ரம்.) தங்கள் வசம் ஒப்புவிக்கவேண்டும் என்று ஒரு கும்பல் வாசுவை நிர்பந்திப்பதற்கு ஆதிராவை கடத்துகிறது.
சீயான் யார் அவரை ஏன் மலேசிய போலீஸ் துரத்துகிறது, வாசு ஆதிரா இருவரும் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் விறு விறுப்பான திரைக்கதை.
பிரெஞ்சுப்படமான ‘பாயின்ட் பிளாங் ‘தமிழில் படமாக துணை நின்றிருக்கிறது. தைரியமாக இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
சால்ட் பெப்பர் ஸ்டைல் , ஆண்மை மிகுந்த தோற்றம் ,ஒரே அடியில் பத்துப்பேரை தூக்கக்கூடியவர் என்றாலும் நம்பும் உடல் வலிமை .விக்ரம் பெஸ்ட் செலக்ஷன்.இவரளவு உடல் வலிமை வடக்கே சல்மான்கானுக்கு இருக்கிறது. படத்தில் சிரிப்பதற்குக்கூட அவசியம் இல்லாமல் காட்சிகளை சண்டைக் காட்சிகளால் திணற அடித்திருக்கிறார்கள். திரில்லர் படங்களுக்கே உரிய டபிள் எஜன்ட் கேரக்டர் .அந்த கேரக்டர் எப்படி வஞ்சகனாக மாறினான் என்பதை மறை பொருளாக வைத்துப் பின்னப்பட்ட கதை. கவனமாக பார்க்கவேண்டிய காட்சி.பாமரனுக்கும் புரியும்படி படமாக்கப்பட்டிருக்கவேண்டும். மனுஷன் பாதி,
சமூக விரோதிகளுக்கும் போலீசுக்கும் உறவு எந்த இடத்தில் பிரகாசிக்கிறது,எந்த நேரத்தில் வன்மம் தலை தூக்குகிறது என்பதின் உதாரண புருசனாக விக்ரம் பின்னியிருக்கிறார்.
எடுத்த எடுப்பிலேயே சிட்டுக்குருவியின் தலையில் எலுமிச்சையை வைத்திருக்கிறார்களே எப்படி தலைப் பிரசவம் இருக்கும் என நினைத்தால் “நான் உலகநாயகனின் புத்திரியாக்கும்”என நம்மை அசரடித்திருக்கிறார். போதுமான வாய்ப்பு இல்லை என்றாலும் நாசரின் மகன் அபி ஹாசனுக்கு அதிக வாய்ப்புகள்.நல்ல தொடக்கம் வாழ்த்துகள்.
ஒளிப்பதிவாளர் சீனுவாஸ் விளையாடுவதற்கேற்ற கிரவுண்டு.இவரும் ஜிப்ரானும் போட்டியிட்டுக்கொண்டு மோதி இருக்கிறார்கள். இவர்களுக்கு பிரவீனின் எடிட்டிங் பெரும் உதவியாக இருக்கிறது.
கமல்ஹாசனின் படம் என்றால் கறுப்புக் கண்ணாடிகள் கொண்டு பார்க்காமல் சினிமா முரசம் கொடுத்திருக்கும் மார்க் 3 / 5