Review
ஏ.ஆர்.முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ’10 எண்றதுக்குள்ள’., சுமார் ரூபாய் 45 கோடியிலிருந்து 55 கோடிகள் வரை செலவிட்டு எடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘கோலி சோடா’ என்ற பிரம்மாண்ட வெற்றியைக்கொடுத்த இயக்குனர் விஜய்மில்டன், ‘மஜா’, ‘பீமா’, ‘கந்தசாமி’, ‘ராஜபாட்டை’, ‘தாண்டவம், பிரம்மாணட இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ உள்ளிட்ட தொடர் தோல்வி படங்களை கொடுத்த விக்ரமுடன் இணைந்துள்ள முதல் படம் தான் ’10 எண்றதுக்குள்ள’. இவர்களின் கூட்டணியில் வெளிவந்துள்ள இப்படம் யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி?
அசூர வேகத்தில் அசால்ட்டாக கார் ஓட்டுவதில் திறமை கொண்டவர் விக்ரம். டிரைவிங் ஸ்கூலில் கார் ஓட்ட கற்றுக்கொடுக்கும் வேலையை செய்துகொண்டே கடத்தல் வேலைகளையும் செய்பவர். கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வரும் சமந்தாவும் விக்ரமும் ஒருவொருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்கிறார்கள். அதன் பிறகு சின்னச் சின்ன சம்பவங்கள் இருவரையும் தொடர்ந்து சந்திக்க வைக்கிறது. உத்ரகாண்ட்’ல் இருக்கும் அபிமன்யுசிங்’க்கு தமிழ்நாட்டிலிருந்து கொண்டு கடத்தல் வேலைகளை செய்து வருகிறார் பசுபதி.
பசுபதி, விக்ரமிடம் ஒரு காரை கடத்தி சென்று உத்ரகாண்ட்’லிருக்கும் அபிமன்யுசிங்கிடம் சேர்க்கச் சொல்கிறார். அதன் படி காரை கடத்தி செல்லும் விக்ரமிற்கு இடை வழியில் அடுத்தடுத்து பல அதிர்ச்சிகளும் உயிர் போகும் ஆபத்துக்களும் குறுக்கிடுகிறது. இவற்றைத் தாண்டி, அபிமன்யுசிங்கிடம் காரைக்கொண்டு போய் சேர்த்துவிட்டு விக்ரம் உயிருடன் திரும்பினாரா? இல்லையா? சமந்தா என்ன ஆனார் என்பதை தனது திரைக்கதை மூலமாக திரையில் விரியச் செய்கிறார் இயக்குனர் விஜய்மில்டன்.
படம் ஆரம்பித்து விக்ரம் அறிமுகமாகும் முதல் கார் சேசிங் காட்சியிலேயே ஒளிப்பதிவும், கிராபிஃக்ஸும் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது. இதனால் அடுத்தடுத்த காட்சிகளை ரசிப்பதில் சுவாரஷ்யம் சட்டென்று காணாமல் போகிறது. ஆசுவாசப் படுத்திக்கொண்டு படத்தை கவனிக்க முற்படுகையில் மெதுவாக செல்லும் திரைக்கதையில் தேவையில்லாத பாடல்கள் வந்து படத்தை பலவீனப் படுத்துகிறது. சார்மியின் ‘கானா.. கானா’.. கலக்கல் குத்து பாடல் கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை! என்றாலும் ஒரு சிலரை சார்மி ரிலாக்ஸ் செய்கிறார். அதே சமயத்தில் ‘நான் பாஞ்சா புல்லட்டு தான்’ பாடல் எழுந்து ஆடவைக்கும் பாடல். ஶ்ரீதரின் நடன அமைப்பு, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைவரும் ஒன்று சேர ( இந்த பாடலில் மட்டும் ) சபாஷ் வாங்குகிறார்கள். திரைக்கதையில் இடையிடையே ஒரு பரபரப்பு வந்து காணாமல் போவது உண்மையே! அந்த பரப்பரப்பை தக்க வைத்திருந்தால் படம் சுவாரஷ்யமானதாகவே இருந்திருக்கும்.கேரக்டருக்கேற்றபடிதன்னைவடிவமைத்துக்கொள்ளும் சகலகலா வித்தைத் தெரிந்த விக்ரம் ஏனோ தானோவென வந்து போகிறார். அரை குறை மென்டலாக வரும் சமந்தா அழகு.. அங்கங்கே அங்கங்களின் அழகான தரிசனங்கள்! சொந்தக்குரலில் பேசி, நடித்து ஆச்சர்ய பட வைத்துள்ளார். பசுபதியின் வழக்கமான நடிப்பு பரவாயில்லை. அபிமன்யு சிங், ராகுல்தேவ் இருவரும் வில்லன்களாக நடித்துள்ளனர் மிகச்சரியான தேர்வு. ராகுல்தேவ் அறிமுகமானவுடன் திரைக்கதையில் சடன் ஸ்பீடு… அத்துடன் சமந்தாவின் ரகசியம் தெரியவரும் போது சபாஷ் போட வைக்கிறது. ஒரு கட்டத்தில் கதை எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என குழம்பும் போது கிளைமாக்ஸை நெருங்கிவரும் காட்சிகள் சுவாரஷ்யத்தை கூட்டுகின்றன. இருந்தும் அந்தோ பரிதாபமான சிறுவர்கள் கூட ரசிக்காத சின்னத்தனமான கிளைமாக்ஸ்! ஆக்ஷன் பிரியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்!
சின்ன பட்ஜெட்டில், சிறுவர்களை வைத்து பெரிய வெற்றிகொடுத்த விஜய்மில்டன், பெரிய பட்ஜெட்டில் பெரிய தோல்வியைக் கொடுத்துள்ளார்.