வெரைட்டியாக பல படங்கள் கொடுத்து வந்த விஜய்சேதுபதிக்கு, அர்ஜென்ட்டாக தேவைப்பட்டது ஒரு கமர்ஷியல் ஹிட். அந்த நேரத்தில் வந்தவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு உருவான படமே ‘நானும் ரௌடி தான்’. விஜய்சேதுபதி எதிர்பார்த்த கமர்ஷியல் ஹிட்டை கொடுத்தாரா இயக்குனர்?
பெண் போலீஸ் அதிகாரியின் ( ராதிகா சரத்குமார் ) மகனான விஜய்சேதுபதி தன்னுடைய ஹோம்வொர்க்கைக் கூட போலீஸ் ஸ்டேஷன்லயே செய்கிற சூழ்நிலையில் வளர்கிறார். அத்துடன் லாக்கப்பில் இருக்கும் கைதிகளிடையே பொழுது போகிறது. போலீஸ் பெரிசா, ரௌடி பெரிசா என லாக்கப்பில் இருக்கும் ‘மொட்டை’ ராஜேந்திரனிடம் கேட்கிறார், அதற்கு அவர் தியேரியாக ஒரு கதையை கூறிவிட்டு, பிராக்டிகல்லாக தன்னையே உதராணமாக்கி லாக்கப்பிலிருந்து வெளியில் செல்லும் ‘மொட்டை’ ராஜேந்திரனை பார்த்து ஆச்சர்யப்படும் விஜய்சேதுபதியின் அடி நெஞ்சில் முளைக்கிறது! ரௌடியாகும் ஆசை.
வளர்ந்துவிட்ட விஜய்சேதுபதி ரௌடிக்கான எந்த தகுதியுமில்லாமல் ஏமாந்தவர்களிடமும், பள்ளியில் படிக்கும் சிறுவர்களிடையேயும் ரௌடியிசம் செய்கிறார். நயந்தாரவை கண்டவுடன் காதலில் விழுகிறார். தான் காதலிக்கும் நயந்தாராவிடமிருந்து வருகிற அஸைன்மென்ட்டை கேட்டவருக்கு அதிர்ச்சி! ஏன் தெரியுமா? யாராவது முறைச்சுப் பார்த்தாலே அவரை முழுசா விழுங்குகிற முரட்டு தாதா பார்த்திபனை போட்டுத்தள்ளுவது தான் அது.. அஸைன்மென்ட்டை கேட்டு ஆடிப்போனவர் என்ன செய்தார்? என்பது தான் விக்னேஷ்சிவனின் திரைகதை.
விஜய்சேதுபதியின் பாடி லாங்குவேஜுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்றபடியான கச்சிதமான வேடம். அதை சரியாகச் செய்திருக்கிறார். பார்த்திபனிடம் மாட்டிக்கொண்டு தர்ம அடி வாங்கும் இடத்தில் சிரிப்பும், பரிதாபமும் ஒரு சேர வருகிறது. அம்மா ராதிகா சரத்குமார் நயந்தாராவை ‘தங்கச்சின்னு கூப்பிடு’ன்னு சொல்லும் போது அவர் சமாளிக்கும் சமாளிப்பு பலே விஜய்சேதுபதி. காதல் காட்சிகளிலும் குறையில்லை!
ஒரு நெருக்கமான காட்சியில், விஜய்சேதுபதி, நயந்தாரா இருவரின் மூச்சுக் காத்தும் முட்டிக்கொள்கிற அந்த சின்ன கேப்பில் லிப்பு கிஸ்ஸு மிஸ்ஸு! ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ் ‘அடடா.. வடபோச்சே’..! ( இயக்குனர் மோசம் பண்ணிட்டார் )
‘கிள்ளிவளவன்’ ரௌடி கேரக்ட்டரில் நக்கலும், கெத்துமா வித்தை காட்டியிருக்கும் பார்த்திபன் சூப்பர். அதுவும் கிளைமாக்ஸில் ஃபுல் மாஸு. ஜிபிஎஸ் மூலமா தான் இருக்கிற இடத்தை வாட்ஸாப்பில் அனுப்பும் ஹைடெக் தாத்தா ராகுல் அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பதுடன் கிளாப்ஸ்களையும் அள்ளுகிறார். பார்த்திபனை கொல்ல திட்டம் போட்டு சொதப்பும் காட்சியில் அனைவரும் சிரிக்கவைக்கின்றனர்.
ஒரே பிள்ளையை செல்லமாக வளர்க்கும் அம்மாவாகவும், எதார்த்த பெண் போலீஸ் அதிகாரியாகவும் நன்றாக நடித்துள்ளார் ராதிகா சரத்குமார். முகத்தில் முப்பது பாவனையும், பக்கம் பக்கமாக வசனம் பேசும் இவருக்கு இது ஜுஜுபி! ‘ரேடியோ ஜாக்கி’ பாலாஜி ‘அஞ்சான்’க்கு அஞ்சு டிக்கட் இருக்கு, ‘முகமூடி’க்கு மூணு டிக்கட் இருக்கு என படங்களை நக்கலடிப்பதுடன் தயாரிப்பாளர் தனஞ்செயனையும் நக்கலடிக்கிறார். சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது.
சமீபகாலமாக வெற்றிகளை மட்டுமே சுவைத்துக்கொண்டிருக்கும் நயந்தாரா காது கேளாத அபலைப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெறுவதுடன் ரசிகர்களையும் ஏமாற்றவில்லை. இவருடைய ஸ்கெட்ச் ஃபிட்! இயக்குனர் இவருடைய கேரக்டரில் இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால் ஜோதிகாவிற்கு ‘மொழி’ படம் அமைந்த மாதிரி இவருக்கு இந்தப் படம் அமைந்திருக்கும்.
நயந்தாராவின் அப்பா அழகம்பெருமாள் கொல்லப்பட்ட செய்தியை ராதிகா சரத்குமார் சொல்லும் ஒரு உணர்ச்சிமிக்க காட்சியின் போது பின்னணியில் ஒலிக்கும் இசை அக்காட்சிக்கு எந்த விதத்திலும் பொருந்தவில்லை. இது போல் பல காட்சிகளில் பின்னணி இசை முன்னணியில் நிற்கிறது. சில காட்சிகளில் இரைச்சல்! எலக்ட்ரிக் கிட்டாரையே இன்னும் எத்தனை நாளைக்கு நம்புவாரோ அனிருத். பல அம்சங்கள் இருந்த போதும் மெதுவாக நகர்கிறது திரைக்கதை.
ஒரு கெட்ட வார்த்தையை ‘ரோசா பூமால’ என தவறாக அர்த்தம் கொள்ளும் நயந்தாரா, மற்றவர்களின் உதட்டசைவை புரிந்துகொண்டு சரளமாக பேசுவது சாத்தியமா? அம்மாவின் இறப்பிற்கு பிறகு எல்லாமே அப்பாதான் ( சானிட்டரி நாப்கின் வாங்கித்தருவது வரை ) எனும் சூழ்நிலையில் அப்பாவின் கொலையை மறைத்து அடக்கம் செய்த விஜய் சேதுபதியின் மேல் கோபம் கொள்ளாதது ஏன்?
என்று பக்கத்து சீட்டிலிருந்த நண்பரை கேட்டபோது,‘டிக்கெட் வாங்கும்போது மூளையை கழட்டி வைக்கச் சொன்னேனே மறந்துட்டீங்களா’? என்றார்
அய்யயோ.. ஆமாம்!
விஜய் சேதுபதிக்கு, ஏறக்குறைய ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.