சதை களவாணி என்பவன் வேலையே செய்யாமல் வெட்டியாய் தின்றுவிட்டு உட்கார்ந்திருப்பவன்.
கதை களவாணி என்பவன் அடுத்தவன் எழுத்தைத் திருடி தனது பெயரின் விற்பவன்.
இவர்களில் இரண்டாம் ரகத்தினர் சினிமா உலகில் அதிகமாக இருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றிய கதையை சினிமாக்காரர்களே எடுப்பதுதான் ஆச்சரியம். இயக்குநர் தருண் கோபியுடன் இருந்தவர் எல்.எஸ் பிரபுராஜா.
இவரே கதை வசனம் எழுதி இயக்கி நடிக்க இருக்கிற படம்தான் ‘படைப்பாளன்’
இவர் கதையைப் பற்றி என்ன சொல்கிறார்?
“முழுக்க முழுக்க சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதை இது.
முன்பெல்லாம் படத் தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள்.
இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். கதை கேட்பது கிடையாது, பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்து விட்டு சொல்கிறோம் என்று கதை வாங்கி கிடப்பில் போட்டு அவர்களை அலைக்கழிக்கிறார்கள். பிறகு சில நாட்களில் ஒரு பிரபலமான இயக்குனர்களை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள்.
அந்த உதவி இயக்குனரின் உழைப்பு, வலிகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை.
அப்படி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப் போகும் ஒரு உதவி இயக்குநரின் சொந்தக் கதைப் பற்றியும் அவன் சொன்ன கதைப்பற்றியும் தான் இந்த படம்.
கடவுள் ஒருவனை தண்டிக்க நினைத்தால் அவனை உதவி இயக்குநராக படைத்து விடுவார் என்று சொல்வார்கள்.
உதவி இயக்குநர்களின் வாழ்வு அத்தகைய துயரம் நிறைந்தது. உதவி இயக்குநராக இருப்பவனுக்கு பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பது வரை பெரும் சங்கடம் தான்.
மக்களிடையே சினிமா இயக்குனர் என்றால் ஒரு விதமான மோசமாகவே கருதுகிறார்கள். ஆனால் மக்களை தங்கள் படங்களின் மூலம் மகிழ்விப்பவனே ஒரு படைப்பாளன் தான்
அப்படியான வலி மிகுந்த உதவி இயக்குநரின் வலிகளையும் வழிகளையும் இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்ட உள்ளது என்கிறார் நாயகனும் இயக்குனருமான .பிரபுராஜா.