கதை,இயக்கம்.; கல்யாண். ஒளிப்பதிவு.; ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ,இசை ; விஷால் சந்திரசேகர், தயாரிப்பு ; சூர்யா.
ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, ஆனந்தராஜ்,யோகிபாபு, மொட்டை ராஜேந்தரன் ,மன்சூர் அலிகான்,
*************
அதாகப்பட்டது மக்களே,
காமடிப் படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது .போனமா, படத்த பாத்தமா ,சிரிச்சமா,வீட்டுக்குத் திரும்புனமான்னு இப்படித்தான் இருக்கணும்.
பாரதத்தில் யுதிஷ்ட்ரனுக்கு சூரியன் கொடுத்தது அட்சய பாத்திரம்.
மனைவி ஜோதிகாவுக்குத் தயாரிப்பாளர், கணவர் சூர்யா கொடுத்திருப்பதும் அட்சய பாத்திரம்தான். மணிமேகலை கையில் இருந்த அதே பாத்திரம்தான் ஜாக்பாட் கதைக்கு அடித்தளம்.
இதை வைத்துக் கொண்டு இயக்குநர் கல்யாண் ஜாக்பாட் அடிக்கப் பார்த்திருக்கிறார்.
ஜோதிகாவும்,ரேவதியும் பலே திருடிகள். ஆட்டையைப் போடுவதில் ஆண்கள் பிச்சை எடுக்கவேண்டும். ஜெயிலில் குமாரி சச்சு சொன்ன தகவலை வைத்துக் கொண்டு புதைக்கப்பட்டிருக்கும் அட்சய பாத்திரத்தை எடுப்பதற்கு ஆனந்தராஜின் மாளிகைக்கு செல்கிறார்கள். முரட்டு காளைக்கு முன்பாக புதையுண்டு கிடக்கும் அந்த அட்சய குண்டாசட்டியை எடுத்தார்களா,இல்லையா என்பதை நகைச்சுவையுடன் சொல்வதுதான் நோக்கம்.
அது நிறைவேறியதா இல்லையா?
ஆனந்தராஜ்,யோகிபாபு,மொட்டை ராஜேந்திரன் வகையறா ஆட்களை வைத்துக் கொண்டு காஸ்ட்லியாக செட் போட்டு அதிகமாக செலவு செய்து படமாக்கியிருக்கிறார்கள்.
சீரியசான கேரக்டர்களில் பார்த்தே பழக்கமாகிடுச்சா , இதில் பைட், சிலம்பம், இப்படி ஹீரோக்களுக்கே உரித்தான ஆக்சன் அடிதடிகளில் கலக்கிய ஜோ வை பார்க்க புதுசாக இருந்தது. வெகு நாள் ஆசையோ என்னவோ …! கலக்கியிருக்கிறார்.
ரேவதிக்கு இந்த கேரக்டர் புதிசு இல்லை.
ஆனந்தராஜ் எபிசோட் வந்ததும் கதைக்கு புதுசா ஒரு கலர் கிடைக்கிது .அதிலும் பொம்பள போலீஸ் அதிகாரி சொப்பன சுந்தரிதான்!
சமுத்திரக்கனியும் இருக்கிறார்..! அவரது சோகம் தனி. பிறந்ததில் இருந்தே சிரிக்கத் தெரியாத மகள்தான் அவரது பிரச்னை! யோகிபாபுவின் பாடி லாங்குவேஜை பார்த்ததும் தன்னை மறந்து மகள் சிரிக்க யோகிக்கு சுக்கிரதசை அடிக்கிது.நடிகராகிவிடுகிறார்.
இப்படி படத்தில் அதிகமான கோப்புகள் சேர்ப்பு நடக்கிது.
காமடி படத்துக்கான அத்தனை குணமும் இருக்கு. அதனால் நம்ம மார்க் 3 / 5