அன்புள்ளங்களே,
பிக்பாஸ் எனும் கலாசார சீர்கேடு இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கிறது.
வடக்கின் கலாசாரம் வேறு. தமிழகத்தின் கலாசாரம் வேறு.
அங்கே பிகினியை ரசிப்பார்கள். இங்கே மேல்தட்டு மக்கள் மட்டுமே ரசிப்பார்கள். நட்சத்திர விடுதிகளில் குடிப்பதும் ஆடுவதும் ஜட்டியுடன் பெண்கள் நீந்துவதும் மேல்தட்டு மக்களின் ரசனை.
தமிழ்க்கலாசாரம் பற்றி வாய் கிழிய பேசுகிறவர்களின் பிள்ளைகளும் அந்த கேடு கேட்ட ரசனையில் திளைப்பவர்கள்தான்..அத்தகைய ரசனைமிக்கவர்களின் பொழுது போக்குதான் பிக்பாஸ் ரியால்டி ஷோ.! இதை சாதாரணமானவர்களும் ரசிக்கிறார்கள் என்றால் அந்த ஷோவில் அரைகுறை ஆடை அணிந்த நடிகைகள் செய்கிற அநாகரீக காதல் வேஷங்கள்தான் காரணம்.
ஆண்களை பெண்கள் கட்டித்தழுவுவதைப் பார்த்து ரசிக்கிற மனோபாவம் வளர்ந்து இருக்கிறது.
இந்த பிக் பாஸ் 3 ஆம் பகுதியில் இயக்குநர் சேரனும் இணைந்திருக்கிறார் என்கிற செய்தி வந்ததுமே “ஆகா…அவரது பெருமையைப் போட்டுத் தள்ளப் பார்க்கிறார்கள்.அவமானப்படுத்தப் போகிறார்கள்” என்கிற கவலைதான் வந்தது .அது உண்மையாகி விட்டது.
டாஸ்க் என்கிற பெயரில் சேரனை ரஜினி மாதிரி நடிக்கச் சொன்னார்கள். ஆடச் சொன்னார்கள்.
கலை நயமிகு படங்களையும் பெண்களை உயர்த்திப் பிடித்த படங்களையும் இயக்கி, தயாரித்த ஒரு உயர்ந்த கலைஞனை பொருந்தாத வேடத்தை செய்ய சொன்னது நியாயமா? நடனமே தெரியாத ஒருவரை ஆடச்சொன்னால் எப்படி இருக்கும்?
சேரனை காயப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்த அயோக்கியத்தனம்.
அன்றைய டாஸ்க்கில் யாருமே கொடுக்கப்பட்ட வேடத்தை சரியாக செய்யவில்லை என்பதுதான் உண்மை.
இதில் சரவணன் சொன்னதுதான் வேடிக்கையாக இருந்தது. தனக்கு மேக்கப் போட்டாலே விஜயகாந்த் மாதிரிதான் இருப்பாராம்.கருப்புநிறமுள்ளவர்கள் இப்படித்தான் சொல்வார்களோ,?உண்மையில் சரவணனை கஞ்சா கருப்பு மாதிரி நடிக்கச்சொல்லியிருக்க வேண்டும்.
“நான் ‘பீக்’ ல இருந்தப்ப சேரன் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தவர்.என் வீட்டிலதான் உட்கார்ந்திருப்பாரு.”என்கிறார் சரவணன்.
இதில் என்ன தவறு அல்லது இழிவு இருக்கிறது.?
பீக்ல கதாநாயகனாக இருந்த சரவணன் இன்று துணை வேடங்களை செய்கிறார்.சேரன் இயக்குநராகஉயர்ந்து நீடிக்கிறார். சேரனின் படங்கள் பேசப்படுகின்றன. தேசிய விருதுகள் பெற்று கம்பீரமாக இருக்கின்றன.
சரவணனின் படங்கள் பேசப்படுகிறதா? சரவணனை உயரத்துக்குக் கொண்டு சென்றதில் பி ஆர்.ஓ. மவுனம் ரவிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
இவர் சேரனை சொல்கிறார் “லூசு மாதிரி பேசுறார்”என்று.
“அவர் எனக்கு சான்ஸ் கொடுத்ததில்ல.”என்பதுதான் சரவணனின் காண்டுக்குக் காரணமா?
ஒரு மோசமான தாக்குதலுக்கு ஆளாகி ஆடை அவிழ்ந்த நிலையில் சேரன் இன்னும் பிக்பாஸில் இருக்க வேண்டுமா?
சேரனின் அபிமானிகள், இயக்குநர் சங்கத்தினர் சிந்திக்க.!
இதோ இயக்குநர் வசந்த பாலனின் கோரிக்கை.
அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.
காற்றின் ரகசியப் பக்கங்களில்
இந்த செய்தி ஊடேறி
உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன்.
உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன்.
வித்யாகர்வத்துடன்
நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது.
பருந்து பறக்கும்
வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா,பொற்காலம்,ஆட்டோகிராப்
என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.
திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு
அதில் வென்று காட்டியவர் நீங்கள்.
காலத்தின் கரையான்
உங்களையும்
உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது.
இயக்குநர் மகேந்திரன்,
இயக்குநர் பாலுகேந்திராவுடன்
ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.
பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு
உங்களின் உயரம் தெரியாது.
நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள்.
அறியாமை என்ன செய்ய……
உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில்
கௌரவக்குறைவு ஏற்பட்ட போது
உடனே அதை விட்டு வெளியேறினீர்கள்.
ஆகவே கலைஞன் எந்த நிலையிலும்
அவனின் மேன்மையை
எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்.”
அன்புடன்,
தேவிமணி