தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. நடிகர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விஷால் உட்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் கூறியதாவது:’ நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த மூத்த உறுப்பினர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். பாண்டவர் அணி என்ற பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். பாண்டவர் அணி என்ற பெயர் கைவிடப்படுகிறது. எந்த சங்கத்திற்கும் நாங்கள் ஆதரவோ, எதிர்ப்போ இல்லை’ SPI ஒப்பந்தம், நடிகர் சங்கக்கட்டிடம் குறித்த விவகாரங்கள் மற்றொரு கூட்டத்தில் விவாதிக்கப்படும்’ என நடிகர் விஷால் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சரத்குமார் அணிக்கு ஆதரவாக களம் இறங்கிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நாசர் தலைமையிலான புதிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அதே போல் இயக்குனர்கள் சங்கமும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டது